Tuesday, August 7, 2007

அதான் எனக்கு தெரியுமே

டிவியில் புதிய பாடல்கள் என்று ஒரு நிகழ்ச்சி. நான்கு சிறுமிகளின் போட்டி. நானும் மார்க் போட்டுக் கொண்டு வந்தேன். "கண்ணும் கண்ணும்..." பாட்டு பாடியவர்களே என்னிடம் மார்க் பெற்றார்கள். பாட்டு போலவே தபேலா.ட்ரம்பெட் வாசித்த லக்ஷ்மண் ஸ்ருதி குழுவினரும் பாராட்டுக்குரியவர்கள்.நடுவர் மதுமிதா அவர்களும் அச்சிறுமிகளுக்கே பரிசு என்றார்கள். தன்னுடைய கமெண்டில் உச்சரிப்பு பற்றியும் கமகங்கள் பற்றியும் அழகாகப் பாடிக்காட்டினார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன் நானும் இது மாதிரி ஒரு போட்டிக்கு நடுவர் குழுவில் ஒருவனாக இருந்தேன். ஹோட்டல் காரன் அழகப்பனுக்கு நாட்டியம் பற்றி என்ன தெரியும் கீதா நினைத்தது போல, மோட்டார்கம்பெனிக்காரனுக்கு சங்கீதம் என்ன தெரியும் என்று பிற நடுவர்கள் கேட்டனராம். என்னை அழைத்த அமைப்பாளருக்கு ஒரு நம்பிக்கை. நானும் பாரதியார் பாட்டு என்றால் சினிமாக்களில் வந்த அவருடைய பாடல்களைத்தானே மாணவர்கள் பாடுவார்கள், அதான் எனக்கு தெரியுமே என்று ஒப்புக்கொண்டேன்.
அன்று நன்றாகப் பாடிக்கொண்டு வந்த ஒரு மாணவன் ஒரு பாட்டில் ஒரு அடி மறந்து ஸ்டக் ஆகிவிட்டான். அவனாக நினைவு வந்து பாட சில வினாடி பார்த்துவிட்டு "நானொருவன்...." என்று அடியெடுத்து தந்தேன். கண்களாலேயே நன்றி கூறி தொடர்ந்து பாடி முடித்தான்.
டிவி நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் தாயாரிடம் கேள்வி கேட்க அவர்களும் என் மகள் நன்றாகப் பயிற்சி செய்தாள். பரிசு கிடைக்கும் என்று நம்புகிறேன் என்கிறார்கள். இது பரிசு கிடைக்கவில்லையே என்ற கவலையுடன் பரிசு எப்படி மற்றவர்களுக்கு என்றும் அவர்களை நினைக்கதூண்டுமோ என்று எனக்குத் தோன்றுகிறது.

சரி, இன்றைய கேள்வி: "நானொருவன்......."என்று நான் அடி சொன்ன அந்த பாரதி பாட்டு எது?

இரண்டு படங்களில் வரும். ஆனால் ஒன்று இசைத்தட்டு மட்டும் வந்தது. ஏனோ படத்தில் இடம் பெறவில்லை.

Friday, August 3, 2007

"திருவாரூர் சந்நிதியில் ......ஞானியானார்"

இன்று ராகுகாலம் எத்தனை மணிக்கு என்று அறிய காலண்டர் தேடிய போது நண்பர் சொன்னார்.
"திருவாரூர் சந்நிதியில் வெற்றிலை புஷ்பம்
விற்ற செட்டியார் ஞானியானார்".
ராகுகாலம் காலை 7.30 முதல் மாலை 6.00 வரைதான், திங்கள் முதல் ஞாயிறு வரை பார்த்துக்கொள்ளலாம் என்றார்.
ஆங்கிலத்தில் " Mother Saw Father....." என்றும் உண்டு.

அது போல் ஆங்கிலத்தில் நான் புதிதாகப் படித்தது.

"My Very Excellent Mother Just Sent Us Nine Pizzas".

இது எதைக்குறிக்கிறது? சொல்லுங்கள் பார்க்கலாம்.

கேட்டதில் பிடித்தது.

சிவாஜி படம் எடுத்த கதை பற்றி டிவியில் சொன்னார்கள். பாடல் எழுதியவர், ரகுமான் வேகமான மெட்டு இசைத்த போது தான் கட கட கட என்றும் மொறு மொறு மொறு என்றும் வரி சொன்னதாகச் சொன்னார். எம்.எஸ்.வியும் கவியரசும் இப்படி பாட்டு உருவாக்கியதை பாலச்சந்தர் எப்படி படமாக்கினார் பாருங்கள்.
இனிமையான சந்தத்தை அருமை என்று கவியும், கடினமான சந்தத்திற்கு வரி சொன்னதும் சபாஷ் என்று இசையும் பாராட்டிக் கொண்டதைக் கேட்ட உடனிருந்த பாலசந்தர் ஸ்ரீதேவி சந்தம் சொல்ல கமல் வரி சொல்வதாக ஒரு காட்சி அமைத்தார் வருமையின் நிறம் சிகப்பு படத்தில் .
தந்தன தந்தன தான தந்தன தந்தானா என்று எம்.எஸ்.வி சந்தம் சொல்ல கவியரசு சிப்பி இருக்குது முத்தும் இருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி என்று பல்லவி சொல்கிறார். ஜானகியும் எஸ்.பி.பியும் பாடினார்கள். மீண்டும் படம் பாருங்கள்.

Wednesday, August 1, 2007

"யு ஆர் ரெகுலர்லி இர்ரெகுலர்"

எங்கள் கல்லூரி ப்ரின்ஸிபல் ரெவ்.பாதர் சூசை மிகவும் கண்டிப்பானவர். எல்லோருக்கும் அவரைப்பார்த்தது முதல், மரியாதை கலந்த பயம் உண்டு. காலை க்ளாஸ்க்கு லேட் ஆனால் அவரிடம் சீட்டு வாங்கினால்தான் ப்ரொபசர் அனுமதிப்பார். ஒரு நாள் சீட்டு வாங்க வேண்டி வந்தது. பைன் கட்டச் சொன்னால் மாலை டவுண்பஸ்க்கு பணம் இருக்காதே என்று பயந்தே சென்றேன். முதல் முறையானதால் எனக்கு சீட்டு தந்து விட்டார்.

ரிபீட் ஆனால் "யு ஆர் ரெகுலர்லி இர்ரெகுலர்" என்று சொல்லி பைன் போடுவார்.

பரீட்சை நடக்கும் போது எனக்கு மதிய உணவு வீட்டிலிருந்து வரவில்லை. 2.00 ம்ணி வரை பார்த்த நான் பரீட்சைக்கு நேரமாச்சு என்று எழுதச் சென்றுவிட்டேன். லேட்டாக கேரியருடன் வந்த அவன் ஆபீஸ் ரூமில் கேட்டிருக்கிறான். ப்ரின்ஸியிடம் யார் சொல்வது என்று அவர்கள் யோசிக்க அப்போது தன் அறைக்கு வந்த ப்ரின்ஸி புதிய முகம் பார்த்து யார் நீ என்றார்.விபரம் அறிந்து அவரே ஹாலுக்கு வந்து என்னிடம் நீ சாப்பிட்டாயா? என்று கேட்டார். உனக்கு 10 நிமிடம் தருகிறேன், கீழே போய் சாப்பிட்டு வ்ந்து எழுது என்றார். கண்டிப்பான பாதரிடம் அன்று நான் கண்ட தாயுள்ளம், மறக்க முடியுமா?

இன்று ஒரு கேள்வி கேட்கலாமா?
இந்த போஸ்டில் எத்தனை சினிமா பெயர்கள் உள்ளன?
ஒரு 11 ஆவது இருக்கும்.