Friday, May 8, 2015

   09/05/2015. இன்று எங்கள் அப்பா  நினைவு நாள்,

 அப்பாவை சந்தோஷமாக வைத்திருந்தால் அப்பாவும் நம்மை சந்தோஷமாக வைத்திருப்பார் என்று டெலிபோன் விளம்பரத்தில் பார்த்தோம்.
    அப்பாவை நாங்கள் சந்தோஷமாக வைத்திருந்தோமா தெரியலை. ஆனால் அவர் எங்கள் எல்லோரையும் மிக சந்தோஷமாகவே வைத்திருந்தார்.
 தன் மணிவிழாவுக்கு முன்னே மறைந்த அம்மாவை நினைத்து சோர்ந்து விடாமல் பிள்ளைகள் படிப்பு, கல்யாணம் எல்லாம் பார்த்து பார்த்து செய்து வைத்தார்.
    பெளர்ணமி அன்று இரவு ஆபீஸிலிருந்து வந்ததும் குளித்து விட்டு,  ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு பூஜை செய்வார்.பேரக்குழந்தைகளிடம் பிரியமாக விளையாடுவார்.
      டி.வி.எஸ் அதிபர்கள், ராஜம், கிருஷ்ணா, ரத்னம், ராமச்சந்திரன், யாரும் திருந்நெல்வேலி வந்தால் அவர்கள் வீட்டுக்கு வந்து சந்திப்பதோ, அப்பா டி.வி.எஸ் போய் பார்ப்பதோ தவறியதில்லை. புதிய மாவட்ட கலெக்டர் வந்து பதவி ஏற்ற அன்றே அவரை சந்திப்பார்.
      நெல்லை சங்கீத சபா, மெசானிக் லாட்ஜ், ரோட்டரி க்ளப், போன்ற அமைப்புகளில் தலைவர் செயலர் பதவிகள் வகித்து திறம்பட நடத்தினார்..
        அவர் நினைவில் வாழும்,
 
        சுப்பிரமணியன், பொன்னம்மாள், வடிவேல்முருகன், கல்யாணி . 

.


.

.

Wednesday, March 18, 2015

ஸ்கூல் பஸ்ஸில் ஏறினதும் வகுப்பு தோழிகள் எல்லோரும்
ராஜகுமாரி வந்துவிட்டாள் என்று கேலி செய்ய, வீட்டுக்கு
 வந்ததும், கோபமாகஅம்மாவிடம்,  ஆயிரம் பெயர்கள் இருக்க "ராஜகுமாரி"தான் எனக்கு வைக்க கிடைச்சுதா என்று   கேட்கிறாள்,
 நூடுல்ஸ் விளம்பரத்தில்.

 என் அண்ணன் இசக்கி,  அம்மாவிடம் கேட்டதாக மணி அண்ணன்
சொன்ன தகவல்:- அண்ணன் தம்பிக்கெல்லாம், முத்துவேல், சுப்பிரமணியன், சண்முகம், வடிவேல்முருகன் என்று முருகன் பேரா வைச்சு எனக்கு மட்டும் ஏன் இசக்கி"ன்னு பேர் வைச்சே?
 
இசக்கி அண்ணன்

        அம்மா சொன்னாராம் - "அப்போ நீ என் வயிற்றில் இருந்தாய். அப்பாவுடன் தேவநல்லூர் போய் விட்டு வரும்போது வழியில் பயங்கர வலி.  குழந்தை நல்லபடியாக பிறக்கணும், உன் பேரை வைக்கிறேன் என்று  நம்ம குலதெய்வமான இசக்கி அம்மனிடம் வேண்டிக் கொண்டே வர,  கோவில் தாண்டியதும் வலி பறந்தது. அதான் உனக்கு அந்த நல்ல பெயர்."
   
 'ஆனந்தம்' படத்தில் இங்கே தவசி யாருங்க? ரிஜிஸ்டர் தபால்.அவர் கையெழுத்து போடணும் என்று கேட்டு வரும் தபால்காரரிடம், விஜயகுமார்(தவசி) ரொம்ப நாளைக்கு அப்புறம் என்னை பேர் சொல்லிக் கூப்பிட்டது நீதான் என்று சொல்வாரே அது போல எங்க அப்பாவை "சோமு" என்று பெயர் சொல்லி கூப்பிடுபவர், தாத்தா தவிர, அப்பாவின் பள்ளித் தோழர் ஐயாக்குட்டி முதலியார் மட்டும்தான்.
   ஒருநாள் போன் மணி அடிக்க இசக்கி அண்ணன் எடுத்து -ஹலோ சொல்ல, "சோமு இருக்கானா?" என்று அவர் கேட்க, "சோமு இருக்கானே" என்று வேடிக்கையாக சொல்ல, அப்பாவும் அங்கே வர, பயந்து ஓடி விட்டானாம். அப்பாவுக்கு ஒரே சிரிப்பு.
அன்றாடம் சினிமாவிலும் டிவியிலும் நாம் பார்க்கும் நிகழ்ச்சி, நம் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவூட்டுவதாகவே அமைகிறது பாருங்கள்.

Sunday, March 15, 2015

நெல்லை ம.தி.தா இந்து கல்லூரியின் கல்வி சங்கசெயலர்
திரு.மு.செல்லையாமோட்டார் பைக்கில் வரும் மாணவ மாணவிகள்
 பலரிடம் டிரைவிங் லைசென்ஸ்  இல்லை என்று அறிந்து எல்லோருக்கும் லைசென்ஸ் பெற்றுத்தர விரும்பினார். 
வட்டார போக்குவரத்து அதிகாரி திரு.கு.தங்கவேலு அவர்களை அணுகியதும், அவர் முதலில்  போட்டோவுடன் கூடிய விண்ணப்பம் தருவோம்.  பிறகு  பயிற்சி உரிமம் வழங்குவோம் என்றார். 175 பேரை இரண்டு நாளாக தன் பஸ்ஸில் R.T.O அலுவலகத்திற்கு அழைத்து வந்து விண்ணப்பம் சமர்ப்பணம் செய்தார் செயலர் திரு.மு.செல்லையா
   இந்துகல்லூரியும், நாட்டுநலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்களும், 
வட்டாரப் போக்குவரத்து அலுவலகமும், திருநெல்வேலி மாவட்ட பஸ் உரிமையாளைர்கள் சங்கமும் சேர்ந்து நடத்தும் விழாவாக 14/03/2015 காலை 
11.00 மணிக்கு பேட்டை இந்து கல்லூரியில்,  முன்னாள் கல்வி சங்க செயலாளர் திரு எ.ஏல்.எஸ் நினைவரங்கில் நடந்தது.
ஏ.எல்.எஸ்ஸின் மகன் திரு சு.சண்முகமும் வந்திருந்தார்

    முதலில் திரு நயினா முகமது, உரிமையாளர், சிட்டி டிரைவிங் ஸ்கூல், விடியோ மூலம் விபத்து  நிகழ்ச்சிகளை காட்டி சாலையில் கவனம் எவ்வளவு முக்கியம் என்று சொல்லி, சாலையில் காணும் எச்சரிக்கை, உத்தரவு, தகவல் சின்னங்களின் அச்சுப் பிரதிகளை வழங்கினார்.
   கல்விச் சங்க பொருளாளர், திரு.தளவாய் தீ.ராமசாமி தலைமையில், திரு செல்லையா வரவேற்றார். தன் உரையில், விழாவின் நோக்கம் என்ன என்றும், ஒத்துழைத்த எல்லோருக்கும் நன்றியும் கூறினார், ,  தலைமை உரையில் திரு.தீ.ராமசாமி யும் வாழ்த்துரையில் திரு.ப.தி.சிதம்பரம் இந்துக் கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர், முனைவர்.ப.சின்னத்தம்பி கல்லூரி முதல்வர், முனைவர் நா.ராஜலிங்கம் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைபாளர், திரு.சோ.வடிவேல்முருகன் தி-லி மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்கம், திரு ப.பாலசுப்ரமனியன் வேணி பஸ், ஜனாப்.முகமது அப்துல் காதர், ஜப்பான் பஸ், திரு.சீ.பார்த்தசாரதி சீதாபதி டிரான்ஸ்போர்ட், திரு..ஸ்ரீதர் கே.வி.வி பஸ், 
திரு.டி.சரவணன் கே.எஸ்.ஏ பஸ்- சங்கரன்கோவில்  

ஆகியோர், ஓட்டுனர் உரிமம் , சாலை விதிகள், சிக்கனம், பற்றியெல்லாம் சொன்னார்கள்.
  திருமதி.ஜீ.சசி மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை 1 அவர்கள், தான் காண நேர்ந்த மோட்டார் பைக் விபத்துகளில் பெற்றோர் பட்ட வேதனை பற்றி கூறி பிள்ளைகள் கவனமாக ஓட்ட வேண்டுமென்றார்.

வட்டார போக்குவரத்து அலுவலர் திரு கு.தங்கவேலு, ஓட்டுனர் உரிமமும், திரு.வடிவேல்முருகன் தன் கைப்பட வரைந்த சாலை விதிகளின் பட நகலையும் மாணவர்களுக்கு வழங்கி வாழ்த்திப் பேசினார்.

   திரு.ஜானகிராம் அந்தோணி நன்றி உரையில் திரு.செல்லையாவின் முயற்சியை பாராட்டி, வாழ்த்திய எல்லோருக்கும், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்களுக்கும், தொகுத்து வழங்கிய முனைவர்.கோ.சங்கர வீரபத்திரனுக்கும் நன்றி கூறினார்.
  

Thursday, February 19, 2015

       BASKET BALL விளையாட்டு ஜேம்ஸ் நெய்ஸ்மித் (JAMES NAISMITH) என்ற அமெரிக்கரால் 1891ம் ஆண்டு வடிவமைக்கப் பட்டது. முதல் விளையாட்டு தொடங்கிய போது, "NAISMITH GAME" என்று பெயரிடலாம் என்று எல்லோரும் சொன்னார்களாம்.  அவர்தான் விளையாட்டில் பாஸ்கெட் இருக்கு, பால் இருக்கு, ஏன் பாஸ்கெட் பால் என்று சொல்லக்கூடாது என்றாராம்.  நம்மூரில் கூடைப்பந்து ஆனது.
முதலில் வெறும் கூடை மட்டும் ஒரு போஸ்ட்டில் கட்டி விளையாடுவார்கள். கோல் போட்டதும் கம்பு கொண்டு கீழிருந்து தள்ளி எடுப்பார்கள். 
      பிறகு கூடையிலிருந்து பந்து கீழே விழுமாறு ஓட்டை போட்டார்கள். 1906ல் தான் இரும்பு வளையம், வலைக்கூடை, கரும்பலகை எல்லாம் அமைக்கப் பட்டதாம்.Y M C A,,  அமெரிக்க ராணுவ வீரர்கள், கல்லூரி/பள்ளிகளிலெல்லாம் ஆடத் தொடங்கி உலகளவில் பிரபலமானதாம்.
திருநெல்வேலி ம.தி.தா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் உள்ள கூடை பந்து மைதானத்தை  உலகத்தரத்திற்கு இணையாக, சுமார் 7 லட்சம் செலவில் புதுப்பித்து நேற்று 18/2/15, புதன் கிழமை மாலை 4.00 மணிக்கு, கல்விச் சங்கத் தலைவர் திரு மீனாக்ஷிசுந்தரம் திறந்து வைக்க, செயலர் திரு
மு.செல்லையா வரவேற்றார்.
   இந்துக் கல்லூரி மாணவர்களும் இந்து மேல் நிலைப் பள்ளி மாணவர்களும்  சேர்ந்து ஒரு அணி. வள்ளியூர் கிங்ஸ் மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் ஒரு அணியாகவும் ஆடத் தொடங்கி, இந்துக் கல்லூரி அணி
 39 - 28 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
 இந்து மேல்நிலைபள்ளி முன்னாள் மாணவர் திரு. ராஜசேகர் படிக்கும் போது கூடைப் பந்து வீரர். அதன் பின் பல ஆண்டுகள் மாணவர்களுக்கு கோச் ஆக இருந்து ஆட்டம் கற்றுத் தந்தாராம். மாநில அளவில் பல பட்டங்களும் பரிசுகளும் வாங்கியவர். பணி ஓய்வு பெற்று நெல்லையில் வசிக்கிறார்.அவருக்கு கல்விச் சங்கத்தின் 'வாழ்நாள் சாதனையாளர்' விருதை, செயலர் திரு செல்லையா வழங்கினார்.
விளையாட்டு வீரர்கள், நடுவர்கள், எல்லோரும் நினைவுப் பரிசுகள் பெற்றார்கள்.

Thursday, December 11, 2014

நேற்று பாரதியார் பிறந்தநாள் என்றதும் அவர் படித்த மதுரை திரவியம் தாயுமானவர் இந்து மேல்நிலை பள்ளிக்கு சென்றேன். கள்ளிபட்டி(தேனி மாவட்டம்) நல்லாசிரியர் திரு.சு.குப்புசாமி சிறப்பு விருந்தினர், பள்ளியின் கல்வி சங்க் செயலாளர் திரு.மு.செல்லையா, திரு.கணேசன்(தேனி)தலைமை ஆசிரியர் திரு.சுப்பையா பங்கேற்க, விழா நிகழ்ச்சிகளை ஒரு மாணவன் அழகாக தொகுத்து வழங்கினா(ர்)ன்.
திரு.கணேசன் பாரதியாரைப் பற்றி ஒரு கவிதையுடன் பேசினார். சிறப்பு விருந்தினர் திரு.குப்புசாமி பேசும்போது சொன்ன தகவல்கள்:
சீவலப்பேரியில் வாழ்ந்த சின்னசாமி ஐயர், எட்டயபுரத்திற்கு குடிபெயர்ந்து, ராஜா அரண்மனையில் பணியில் சேர்ந்தார். 1882ம் ஆண்டு டிசம்பர் 11 அன்று மகன் சுப்பிரமணியம் பிறந்தார். திருநெல்வேலி, மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரி உயர்நிலை பள்ளியில் 3 முதல் 5ம் வகுப்பு வரை படித்தார் சுப்பிரமணியம்.
1893ல் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த ஒரு தமிழ்ப் புலவர் மாணவர்களுக்கு கவிதைப் போட்டி நடத்தி, அதில் கலந்துகொண்ட சுப்பிரமணியத்தை  பாராட்டி பாரதி என்று அழைத்தார். அன்றிலிருந்து சுப்பிரமணிய பாரதி என அழைக்கப் பட்டார்.
சின்ன வயதில் அவர் பெற்ற புகழைக் கண்டு பொறாமை கொண்ட காந்திமதிநாதன் என்பவர், பாரதியிடம், தம்பி உன்னால் "பாரதி சின்னப் பயல்" என்று பாட முடியுமான்னு கேட்டார்.
பாரதி சொன்ன கவிதை:
  "காரது போல் நெஞ்சிருண்ட
   காந்திமதிநாதனைப்
   பார் அதி சின்னப் பயல்"
தன்னை சின்னப்பயல் என்று சொன்ன எதிரியை "அதி சின்னப் பயல்" என்று பாடிவிட்டார்.
1897ல் பாரதிக்கு செல்லம்மாளுடன், நான்கு நாள் விழாவாக கல்யாணம் நடந்ததாம்.. மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகவும், பின், சுதேசமித்திரன் பத்திரிகை உதவி ஆசிரியராகவும் வேலை பார்த்தாராம்.

ஒரு நாள் பத்திரிகை ஆபீசிலிருந்து வீடு செல்லும்போது, அன்று வாங்கிய சம்பள பணத்தை அப்படியே தான் வந்த குதிரை வண்டிக்காரனின் மனைவி குழந்தைகளின் வைத்திய செலவுக்காக தந்துவிட்டாராம்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானைக்கு தேங்காய், பழம் உண்ணத் தருவாராம். ஒரு நாள் அவரை, யானை கிட்ட போகாதே, அதற்கு மதம் பிடித்து விட்டது என்று தடுத்தும், "அது நான் வணங்கும் பராசக்தி,என்னை ஒன்றும் செய்யாது" என்று  யானை அருகில் போனார். யானையோ அவரைத் தும்பிக்கையால் தூக்கி வீசிவிட்டது.
ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் சில நாள் சிகிச்சைக்கு பிறகு வீட்டுக்கு வந்தார். ஆனாலும் அன்றிலிருந்து மிகவும் பலவீனமானார்.
 "காலா உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்றன்
   காலருகே வாடா, சற்றே உதைக்கிறேன்"
 என்று பாடிய மகாகவி 1921 செப்டம்பர் 12 அன்று மறைந்தார்.

Friday, November 21, 2014

KIDDIVAL

RmKVயின் கிட்டிவல் தொடங்கி 25 அருஷம் ஆச்சு. போன சனிக்கிழமை
 சாரா டக்கர் காலேஜில் நடந்தது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களிலிருந்து 80 பள்ளிகளின் 1500க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் உற்சாகமாக தங்கள் திறமையை காட்டினார்கள்.
பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி (75 மார்க்)முதல் பரிசையும்,ஜெயேந்திரா கோல்டன் ஜூபிலி (65) இரண்டாம் பரிசையும், பாரத் வித்யாலயா CBSE (50) மூன்றாம் பரிசையும் பெற்றது.
இந்த ஆண்டின் புதிய போட்டி - SPELLING BEE
மேலை நாடுகளில் இந்த விளையாட்டில் இந்திய வம்சாவளி குழந்தைகள்தான் அதிகம் ஜெயிக்கிறார்கள். பிள்ளைகள் டாண் டாண்னு சொன்னார்கள்.
போட்டியில் ஸ்பெல்லிங் கேட்ட சில வார்த்தைகள் -
 SIGNIFICANCE ; ETIQUETTE ; COMMITTEE ; RESTAURANT ; CALENDAR

JUMBLE WORDS-  TOPMREUC ; AGHRMRUBE ; LESENKTO
E T I Q U E T T E

TOPMREUC ---COMPUTER
FANCY DRESS
"கனவு காணுங்கள்"

 
Vivekanadar as statue
   

Monday, July 21, 2014

 இன்றும்  ஒரு சதாபிஷேகம்.

முந்தாநாள், சனிக்கிழமையன்று நண்பர் என்னைப்பார்க்க வரேன் என்று போன் பண்ணினார். ஒரு சதாபிஷேக நிகழ்ச்சி.பிறகு பார்க்கலாம் என்றேன். திங்களன்று மீண்டும் கூப்பிட்டு, இன்னிக்கு வரலாமான்னு கேட்டார். இன்றும் ஒரு சதாபிஷேகம். மேலச்செவலுக்கு போகிறேன்
. அன்று என் மாமாவுக்கு. இன்னிக்கு என் அத்தானுக்கு.

மேலச்செவல் பண்ணையார் வீட்டைப்பற்றி THE HINDU நாளிதழில் சில மாதங்கள் முன் படித்திருப்பீர்கள். அவர் வீட்டிலேயே நடந்த சுப நிகழ்ச்சிக்கு ஊரே திரண்டு வந்தது. சொந்தங்கள் நாங்கள் மீண்டும் கூடினோம்.

மகன் சுரேஷ், மருமகள் சித்ரா

எஸ்.கல்யாணி,சண்முகம்(பேபி), பத்மா
,முத்துலக்ஷ்மி, பிச்சம்மாள்,முனைவர்.ரமாபிரபா, ஆர்.கல்யாணி
Family Chart
கெட்டி மேளம், கெட்டி மேளம்


மாங்கல்யம் தந்தது நானேநா............
 
                            வாழ்க வளமுடன்
முந்தாநாள் சதாபிஷேகம் கண்ட கோமதிநாயகம் தம்பதி
ராதா,  ரமணி,  பத்மா, வடிவேல்முருகன்,  கல்யாணி, சங்கர்,   லக்ஷ்மனன், செல்விலோகா  ,பொன்னம்மாள்,  தாயுமான ராமலிங்கம்,  சுப்பிரமணியன்

.

.

                                                                                                               








Saturday, July 19, 2014

சதாபிஷேகம்.

ஆயிரம் பிறை கண்ட எங்கள் மாமா, கோமதிநாயகம் அவர்களின் சதாபிஷேகம் இன்று நடந்தது.
அமெரிக்காவில் இருந்து வந்த  அவரது இரண்டு மகள், மகன், பேரன் பேத்திகளுடன்
உறவினர்கள், உற்றார், நண்பர்கள் என ஆசி பெற
எல்லோரும் மகிழ்ச்சியுடன் கூடியிருக்க,


 

 

 

 
 






 
கோமதிநாயகம்,சூர்யகுமாரி தம்பதிகளை ஆசீர்வதிக்க  பெரியவர்களும் வர,  விமரிசையாக நடந்தது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Thursday, June 26, 2014

ராதா ஜெயலக்ஷ்மி
  பெயர்கள் ஞாபகம் இருக்கா? 'காஞ்சனா' -கே.ஆர்.ராமசாமி, லலிதா பத்மினி நடித்த பக்ஷிராஜா பிலிம் தயாரிப்பு.1954னு நினைக்கிறேன். அதில் ஒரு கல்யாண கச்செரி சீனில் ராதா ஜெயலக்ஷ்மி பாடுவார்கள்."சலமேலரா சாகேதராமா" கீர்த்தனை. அதன் பிறகு இன்று வரை யாரும் அந்த கிருதியை பாடி நான் கேட்டதில்லை. அன்றிலிருந்து நான் அவர்கள் ரசிகன். இருவரும் கஸின்ஸ்

 .பக்தி பாடல்கள் . ஹெச்.எம்.வி, கொலம்பியா ரிகார்டுகளில் நிறைய பாடியிருக்கிறார்கள். பிறகுதான் சபாக்களில் கச்செரி செய்ய தொடங்கி பிரபலமானார்கள்.
ஜி.என்.பி பாணியிலேயே பாடியதால், வயலினிஸ்ட் மைசூர் டி.செளடையா,
"G.N.B IN SAREES" என்று பாராட்டுவாராம். 1981ல் சங்கீத் நாடக அகாடமி அவார்ட் பெற்றார்கள்.
  சினிமாவிலும் பின்னணி நிறைய பாடினார் ஜெயலக்ஷ்மி. டைட்டிலில் ராதா ஜெயலக்ஷ்மி என்றே வரும்.

 மாங்கல்யம்  (ஒட்டும் இரு உள்ளங்கள.)
 கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி  (வெண்னிலாவும் வானும்..)
மோட்டார் சுந்தரம் பிள்ளை   (மனமே முருகனின் மயில் வாகனம்..)
மனோகரா  (சிங்கார பைங்கிளியே பேசு)
இன்னும் பல இனிய பாடல்கள்.

1990க்கு பிறகு இசை ரசிகர்களும் சபாக்களும் இவர்களை மறந்து  விட்டார்களோ என்னவோ. சென்ற மாதம் ஜெயலக்ஷ்மி அவர்கள் மறைந்த செய்தி சென்னை ஹிந்து இதழில் பார்த்தேன். மற்ற நாளிதழ்களிலோ, டிவியிலோ வந்த மாதிரி தெரியவில்லை. ராதா ஜெயலக்ஷ்மி பாடிய "பண்டு ரீதி கோலு" என்ற தியாகராஜர் கிர்த்தனை எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்களும் கேட்டுப் பாருங்களேன்.
                  http://www.youtu.be/a25osFeLkgM

Thursday, May 8, 2014

உயிரை காப்பாற்றிய லயன் பஸ்

புதன்கிழமை காலை என் அண்ணி ஆஸ்பத்திரியில் இருக்கிறார்ன்னு தெரிந்ததும் பார்க்கப் போனேன். "ஒன்றுமில்லை சித்தப்பா, அம்மா சுவாசிக்க சிரமப்பட்டதால் வந்தோம் என்றான் ரமணி. எங்களை யார் என்று விசாரித்த டாக்டர் பாலாஜியிடம் லயன் கம்பெனி என்றதும், ற்ட்ன்.வடிவேல்முருகன் உங்களுக்கு என்ன வேன்டும் என்று கேட்டார். திருநெல்வேலி மெடிக்கல் காலேஜில் படிக்கும் போது உங்கள்  க்விஸ் நிகழ்ச்சி பற்றி சொன்னார். இப்போ டாக்டர் வருவார், என்ன சொல்கிறார் பாருங்கள் என்றான்,

 சிறிது நேரத்தில் வந்த டாக்டர் பாலாஜி, என்னைப் பார்த்ததுமே சார் வாங்க,

"என் உயிரை காப்பாற்றியதே லயன் பஸ்தான் " என்றார்.
 
அவரது சொந்த ஊர் எட்டயபுரம். 1974ல், தான் சின்னக்குழந்தையாக (1 1/2 வயது) இருந்தபோது ஒரு நாள் நள்ளிரவில் திடீரென்று உடல் சரியில்லாமல் போனதால் கோவில்பட்டி ஹாஸ்பிடல் போக வேறு வண்டி எதுவும் கிடைக்காமல் பஸ் ஸ்டாண்டில் ஹால்ட் ஆகி நின்ற எங்கள் லயன் பஸ் டிரைவரிடம் கேட்டிருக்கிறார்கள். ஆபீஸ் அனுமதியில்லாமல் என்ன செய்ய என்று யோசித்த டிரைவர் சமயோசிதமாக அருகில் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து திருநெல்வேலி ஆபீஸுக்கு ட்ரங்க் காலில் கேட்டு அனுமதி வாங்கினாராம் - டிரைவரும் ட்யூட்டியில் இருந்த போலீஸ்காரர்களும் பாராட்டுக்குரியவர்கள் -

உடனே பேற்றோருடன் குழந்தை பாலாஜியை கோவில்பட்டி கொண்டு சேர்த்துவிட்டு எட்டயபுரம் திரும்பினார்.

 முதலுதவிக்குப் பிறகு மறுநாள் காலை பாலாஜியை மதுரை ஹாஸ்பிடல் கூட்டிப் போனார்களாம்.

அந்த பஸ்ஸை போட்டோ எடுத்து இன்றும் தங்கள் வீட்டில் வைத்திருக்கிறார்களாம்

Thursday, May 1, 2014

"ஆவணி ரோகிணியில் அஷ்டமியிலே.........."



1950களில்   GRUNDIG,  PHILLIPS  ஸ்பூல் டேப் ரிகார்டர்கள் பிரபலமாக தொடங்கியது. டாக்டர் ஆர்.சுப்பிரமணியமும் என் அண்ணன் முத்துவேலும் நெல்லை சங்கீத சபா கச்சேரிகளை ரிகார்ட் செய்து கேட்டு மகிழ்வார்கள். அப்போ எல்லாம் பாடுபவர்களும் அனுமதித்தார்கள். அண்ணனின் நண்பர் கிருஷ்ணனின் கல்யாணத்தில் திருமதி எம்.எல்.வசந்தகுமாரியில் கச்சேரி. அண்ணன் அதை டேப்பில் பதிவு செய்து வந்தார்.

அதில் நான் கேட்டு ரசித்த பாட்டுதான், 
"பாற்கடல் அலை மேலே பாம்பணையின் மேலே பள்ளி கொண்டாய் ரெங்கநாதா......". ராஜாதேசிங்கு படத்தில் எம்.எல்.வி பாடியது.   கீர்த்தனை எல்லாம் பாடியதும் துக்கடாவில்தான் தமிழ் பாட்டுகளுடன் சினிமாவில் தாங்கள் பாடிய பாட்டு உட்பட பாடுவார்கள். அன்று இந்த பாட்டை ராகமாலிகையிலேயே பாடினாரோ என்னவோ. நாட்டிய பேரொளி பத்மினி படத்தில் பாடி ஆடுவார்.
அதில் சில  வரிகள்:
"எங்கிருக்கிறான்? ஹரி எங்கிருக்கிறான்.." என்று ஹிரண்யன் கேட்க, "எங்குமிருப்பான். தூணில் இங்குமிருப்பான் என்று மகன் பிரகலாதன் சொல்ல, நரசிம்மமாகவே தோன்றி பத்மினி ஆடுவார் பாருங்கள்.

ஆவணி ரோகிணியில் அஷ்டமியிலே அர்த்தசாம நேரத்திலே அவதரித்தோனே..ஆயர்பாடி மேவிய யசோதை நந்தபாலா..."என்று கிருஷ்ணன் அவதரிக்க, கோபியரும் சேர்ந்துகொள்ள அருமையான நடனம். நடன அமைப்பு யார் என்று நினைவில்லை.

பத்து அவதாரங்களையும் சொல்லும் பாடலின் சந்தங்களை பல ராகங்களில் அமைத்திருப்பார் இசைமேதை ஜி.ராமநாதன். பாட்டைக் கேட்டு என்னென்ன ராகங்கள் என்று யாராவது கமெண்டுங்களேன்.




நாளை ஜி.ஆர். எம்.எல்.வி, பத்மினி மூவரின் இன்னொரு திருவிளையாடல்  பாட்டு பற்றி எழுதுகிறேன்

Monday, January 27, 2014

OLD BOYS !!!



தூய சவேரியார் கல்லூரியின் முன்னாள் மாணவர் மன்ற குடும்ப விழா- 2014 வழக்கம் போல குடியரசு தினத்தன்று மாலை 5.00 மணிக்கு, கல்லூரியின் நூலக முற்றத்தில் நடந்தது.
மன்றத்தின் தலைவர் திரு.அழகியநம்பி தலைமையில், கல்லூரி முதல்வர் Rev.கில்பர்ட் கமில்லஸ், இயக்குனர் Rev.Dr.ஆரோக்கியசாமி, செயலர்.Rev.ஜேஸு மைக்கேல்தாஸ் ஆகியோரின் முன்னிலையில், மன்றத்தின் செயலர் திரு.ஜி.முத்துகிருஷ்ணன் அவையோரை வரவேற்க விழா தொடங்கியது.






சிறப்பு விருந்தினர்களாக, தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி தாளாளர்
 திரு.A. P. C V.சொக்கலிங்கமும்
 பாளை தூய யோவான் கல்லூரி தாளாளர் திரு.குணசிங் செல்லதுரையும் வந்தார்கள்.
திரு.சொக்கலிங்கம் தன் உரையில், தான் தூத்துக்குடி கால்ட்வெல் பள்ளியில் படித்த காலம் தொடங்கி, கால்ட்வெல் கிறிஸ்துவ மதப் பிரசாரத்திற்காக இந்தியா வந்தவர், தமிழை கற்றுக் கொண்டதையும், கல்விக்காக பள்ளிகள் நிறுவியதையும் விவரித்தார். முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் வந்து, கல்லூரியில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், முன்னேற்றங்கள் கண்டு மகிழ்ந்து. மனைவி,குழந்தைகளிடம் இதுதான் என் க்ளாஸ் ரூம் என்று காட்டி மகிழ்ந்தீர்கள் என்றார். கல்லூரி நடத்துவதில் இப்போது உள்ள சிரமங்கள் என்னென்றும், நம் கல்லூரிகள்தான் கல்வியை வியாபாரம் ஆக்காமல் ஒரு சேவையாக நடத்திக் கொண்டிருக்கிறோம் என்றும் சொன்னார்.

ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர்களை, முன்னாள் மாணவர் திரு.பா.வளன் அரசு பாராட்ட, முன்னாள் மாணவர், நீதியரசர் ஐ.டேவிட் கிறிஸ்டியன் வாழ்த்திப் பேசினார்.



முன்னதாக நடந்த விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு தந்தார்கள்.

நான் சந்தித்த, Old Boys - பாண்டியன் கிராம பேங்க் ஸ்தாபக டைரக்டர், திரு.கள்ளபிரான், குணசிங், ஸ்டேட் பேங்க்-ஓய்வு பெற்ற ஜோஷுவா, Dr.மஹாகிருஷ்ணன், மகராஜன் ஆறுமுகம், ஆடிட்டர் சாமுவேல், எல்.ஐ.சி பி.மணி. என் 1962 பாட்ச் யாரும் பார்க்க முடியவில்லை.  முகநூலில் பார்த்து தொடர்பு கொண்டால் சந்தோஷம்.

Rev.டேனியல் பொன்னையா சங்கத்தின் ஆண்டு மலரை வெளியிட்டார். 
நிகழ்ச்சியை Dr.S.V.L. மைக்கேல் தொகுத்து வழங்கினார். மன்ற செயலாளர்திரு.எஸ்.சுப்பிரமணியன் நன்றி கூறினார்

Wednesday, January 22, 2014

விபத்தில்லா வாழ்க்கை

திங்கட்கிழமை 20/01/14 அன்று பள்ளி மாணவ/மாணவிகள் விபத்தில்லா வாழ்க்கை பெற சாலை பாதுகாப்பு  உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி மாநிலம் முழுதும் நடந்தது.

நெல்லை மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரி மேல் நிலை பள்ளியில் திரு மு.செல்லையா - செயலர், கல்வி சங்கம், திருநெல்வேலி மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்கம் - வரவேற்க,
 திரு.ப.தி.சிதம்பரம் -ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் தலைமை வகிக்க,
சிறப்பு விருந்தினர், திரு.ச.தங்கவேலு-R.T.O., திருநெல்வேலி,  தேசியக்கொடி ஏற்றினார்.

பாரதியார் படித்த பள்ளி அல்லவா? மாணவ/மாணவிகள், கடவுள் வாழ்த்தாக
                                               "ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் -பராசக்தி
                                                ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்"
என்ற பாரதி பாடலும் தமிழ்த் தாய் வாழ்த்தும் கோரஸாக பாடினர்.


திரு.தங்கவேலு, "ஓட்டுனர் உரிமம் இல்லாமல் பைக் ஓட்ட வேண்டாம். உரிமம் பெற R.T.O.,  அலுவலத்தில் ஏற்பாடு செய்கிறோம். சாலை விதிகளை மதிக்க வேண்டும்" என்றும் கூறினார். 


திரு செந்தில்குமார் -M.V.I .Gr.I., வாசிக்க, எல்லோரும் விபத்தில்லா தமிழகம் உருவாக்கிட உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.

                                     

முன் தினம் பள்ளியில் நடந்த பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகளும், N S S மாணவர்களுக்கு
 T ஷர்ட்டும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் திரு.S.வடிவேல் முருகன், திரு K.G.கிருஷ்ணன் -முறையே தலைவர், பொருளாளர், பஸ் உரிமையாளர்கள் சங்கம், திரு.சீ.வ.ஜானகிராம் அந்தோணி-மாநில செயற்குழு உறுப்பினர், பஸ் உரிமையாளர் சங்கங்களின் சம்மேளனம்  ஆகியோரும் கலந்து கொண்டனர்.  பள்ளி தலைமை ஆசிரியர், திரு சூ.அழகிய சுந்தரம் நன்றியுரை அளித்தார்

Monday, January 13, 2014

சாலை பாதுகாப்பு வாரம் - மாணவர் பேரணி.

 

பொங்கல் விடுமுறை வருவதால், வட்டார போக்குவரத்து அதிகாரி கேட்டுக்கொண்டபடி, 17ம் தேதி வெள்ளிக்கிழமையன்று மாணவ/மாணவிகள் பேரணி நடத்த திருநெல்வேலி மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்கத்தில் திட்டமிட்டோம்.
தலைமைச் செயலகத்திலிருந்து 13ந்தேதி திங்களன்று மாநில அளவில் எல்லா மாவட்டத்திலும் பேரணி நடத்த வேண்டும் என்று வந்த உத்தரவால், போக்குவரத்து ஆய்வாளர்கள் கேட்டதும் எங்கள் சங்க செயலாளர் எம். செல்லையா விரைந்து செய்த ஏற்பாட்டினால் பள்ளி மாணவர்கள் திரண்டனர். சங்கரன்கோவில், அம்பாசமுத்திரத்திலிருந்தும் பிள்ளைகள்.வந்தனர்.


பாளை வ.உ.சி மைதானத்தில் அணிவகுத்த பேரணி, மாவட்ட ஆட்சியாளர் கருணாகரன் பகல் 3.00 மணிக்கு கொடி அசைக்க,




குலவணிகர்புரம் லெவல் க்ராஸ் வரை ஊர்வலம் சென்றது. சங்கத்திலிருந்து கொண்டு சென்ற பிஸ்கட், தண்ணீர் பாக்கெட் பிள்ளைகளுக்கு கொடுத்து, பின் அவர்களை சங்க பொருளாளர் கே.ஜி.கிருஷ்ணன்(SGKR),
-ஸ்ரீதர்(KVS) தங்கள் சிடி பஸ்ஸில் பள்ளிகளுக்கு அனுப்பி வைத்தார்கள்.

                                     

தன்னார்வத் தொண்டர்களுக்கு சங்கம் சார்பில் டீ ஷர்ட் வழங்கினோம்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்:
திருநெல்வேலியில் இன்று பதவி வகுத்த வட்டார போக்குவரத்து அதிகாரி தங்கவேல், மாற்றலாகி செல்லும் முத்துசாமி, ராஜசேகர்(தென்காசி), மகாதேவன்(சங்கரன்கோவில்)
காவல்துறை டெபுடி கமிஷனர் தாம்ஸன், போக்குவரத்து ஆய்வாளர்கள் - செந்தில்குமார், இளமுருகன், சசி மேடம், விநாயகம்(வள்ளியூர்),
ராம்குமார்(அம்பை)

                                     

பஸ் உரிமையாளர்கள் -எஸ்.வடிவேல்முருகன்(தலைவர்),
மு.செல்லையா(செயலாளர்),   கபீர்(உபதலைவர்), கே.ஜி.கிருஷ்ணன்(பொருளாளர்)  ஸ்ரீதர்,  நாராயணம்குமார், வாலைமுருகன்,

ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள், வக்கீல் பிரபாகரன் ஆகியோருடன் பலர் வந்திருந்தார்கள்.