Tuesday, September 4, 2012

செப்டம்பர் 5 - இன்று ஆசிரியை தினம்

சமீப காலமாக ஆசிரியர்களைப் பற்றிய செய்திகளைப் படித்ததனால் என்ன எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். 5/9/2012 ஆனந்தவிகடன் இதழ் பார்த்தீர்களா? ஆசிரியர் தகுதி தேர்வில் 6,72,204 பேர் பரீட்சை எழுத 2,448 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றார்களாம். ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெண்கள். அதனால்தான் ஆசிரியை தினம் என்றேன்.
திவ்யா
அரசுப் பள்ளிகளில் தமிழ் மீடியத்தில் படித்து, எம்.எஸ்ஸி, பி.எட் படித்த திவ்யா +2 முடித்ததும் "டீச்சிங்தான் தன் ரூட்" என்று முடிவெடுத்து, தன் நோட்டில் 10/12 வகுப்புகளுக்கு மேத்ஸ் டீச்சர் ஆகணும் என்று இம்போஸிஷன் போல ஆயிரம் தடவை எழுதினாராம். சமச்சீர் கல்வி புத்தகங்களை முழுவதும் புரிஞ்சு படிச்சா ஆசிரியர்களும் ஆல் பாஸ்தான் என்கிறார்.

சித்ரா
தன் அப்பா, அண்ணன், கணவர் போல சித்ராவுக்கு தானும் ஆசிரியர் ஆக வேண்டும் என்பது லட்சியமானதாம். வீட்டு வேலைகள் முடிந்ததும், "சீரியல், தூக்கம், அரட்டைனு நேரத்தை வீணாக்காமல்" மகளின் 10ம் வகுப்பு பாடம் சொல்லிக் கொடுக்கும்போதே தானும் பாடம் படிச்சாராம். "120 மார்க் நிச்சயம்னு நினைச்சேன். ஆனா இப்படி முதல் மார்க் வாங்குவேன்னு சாமி சத்தியமா நினைக்கலே" என்கிறார்.

அருள்வாணி
காலேஜ் முடிந்ததும் கல்யாணம்னு அப்பா சொன்னதும், வாத்தியார் மாப்பிள்ளைதான் வேணும்னு பிடிவாதம் பண்னி ஹரிபாஸ்கரை கட்டிக்கிட்டாராம். சின்ன வயசிலே பிள்ளைகளுடன் ஸ்கேலை கையில் வைத்துக் கொண்டு டீச்சர் விளையாட்டு விளையாடுவாராம். _ஹரி சொன்னபடி பரீட்சைக்கு முன் 6 முதல் 10ம் வகுப்பு சமச்சீர் புத்தகங்களை, சொந்த பந்தங்களின் கல்யாணம் காட்சிகளுக்குக்கூட போகாமல் படிச்சது கஷ்டமே இல்லை என்கிறார்.



மூவரையும் பேட்டி கண்டு, அவர்கள் சொன்னதை நாமே கேட்பது போல அதே நடையில் எழுதிய, நிருபர்கள் - ஷக்தி, முத்து, சரவணக்குமார் அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.

என்ன ஆசிரியை தினம்னு சொல்லிட்டீங்க? நல்ல ஆசிரியர் இல்லையா என்ற் நீங்கள் கேட்பது புரிகிறது.

எனக்கும் பிடிச்ச சார் ஸ்டாலின் சார்தான்.
7ம் வகுப்பு C பிரிவில் (நான் விரும்பிப் பார்க்கும் ஒரே சீரியல்) நேற்று DEO
வருகிறாரே என்று ஸ்டாலின் டென்ஷனாக இருக்க, மாணவர்கள் பயப்படாதீங்க சார், அவர் என்ன கேள்வி கேட்டாலும் நாங்கள் சரியான பதில் சொல்வோம்னு சொல்லி கட்டிப்பிடி வைத்தியம் தந்தார்கள்.
க்ரூப் போட்டோ எடுத்த போட்டோகிராபரிடம், ஸ்டாலின், ஒரே மாதிரி இல்லாமல் வித்தியாசமாக படம் எடுங்கனு சொல்லி பிள்ளைகளை அழைக்க,



அவரகள் ஸ்டாலினை சூழ்ந்து கொள்ள, எல்லோர் முகத்திலும் சிரிப்புடன் வந்த போட்டோவின் அழகு நேற்று பார்த்தவர்களுக்கெ புரியும்.

Saturday, July 14, 2012

எத்தனை கோடி இன்பம் பெற்றாய் சூர்யா?


மகனை "அவையகத்து முந்தியிருப்ப" செய்த சிவகுமாரையும், "இவன் தந்தை என்னோற்றான்" என்று மக்களை சொல்ல வைத்த சூர்யாவையும் நிறைவு நாளான வியாழனன்று, ஒன்றாகப் பார்த்த நாம் எல்லோரும் வென்றோம் ஒரு கோடி இன்பம்.

ஹாட் சீட்டில் அமர்ந்து லட்சங்கள் வென்ற பல போட்டியாளர்களை அழைத்து, எல்லா வயதினரும் வந்து ஆடியன்ஸாக கலந்து கொண்டு, "என் கேள்விக்கென்ன பதில்" என்று அன்று பாடிய சிவகுமாரை தங்கள் கேள்வி மழையில் நனைய வைத்து விட்டார்கள்.

பார்வதி அம்மாள் கேட்டார், 'இத்தனை திறமை, பணிவான குணங்களுடன் உங்கள் பிள்ளைகளை எப்படி வளர்த்தீர்கள்?' அதற்கு அவர், நான் மட்டும் இல்லை, சூர்யாவின் அம்மா, பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் எல்லோருக்கும் அதில் பங்கு உண்டு என்று சொன்ன பதில், ஒரு பெண் கோவையில் தன் பள்ளி விழாவில் நீங்கள் தலைமை தாங்கி எனக்கு பரிசு தந்தீர்கள் என்று சொல்ல, அவர் எந்த பள்ளி என சொல்லி, அன்று நீ ஒரு ப்ரெளன் கலர் உடை அணிந்திருந்தாய் என்று நினைவு கூர்ந்த விதம், மேலும் அவர் சொன்ன மகாபாரத கதைகள் எல்லாம் பிரமிக்க வைத்தன.

சூர்யா, தன்னால் இந்த நிகழ்ச்சியை நடத்த முடியுமா என்று முதலில் தயங்கியபோது, விஜய் டிவி குழுவினர் கொடுத்த தைரியம், பிரபல க்விஸ் மாஸ்டர் சித்தார்த்த பாஸு தந்த பயிற்சி பற்றி எல்லாம் நன்றியுடன் சொல்லிவிட்டு, குழுவில் தன்னுடன் பணியாற்றியவர்கள் - கேள்விகள் அமைத்த ஜீனியஸ், விடியோகிராபர், மேக்கப்மேன், லைட்மேன், தனக்கு சூட் தைத்து தந்தவர், சாரதிகள், தான் சொல்ல மறந்துவிட்ட டெக்னிஷியன்கள் எல்லோருக்கும், ஒரு குடும்பத்தை பிரிந்து செல்வது போல குரல் தழுதழுக்க நன்றி கூறினார்.

திருமதி பார்வதி அம்மாள், தான் உருவாக்கிய பள்ளிக்கூடத்தை மேம்படுத்துவதற்காக, ஹாட் சீட்டில் விளையாடிய போது, ரூ 12,50,000 வென்ற நிலையில் ரூ25,00,000க்கான கேள்விக்கு விடை தனக்கு தெரிந்தும் உறுதியாக சொல்ல முடியாமல், தவறானால் ரூ3,25,000 ஆகிவிடுமே என்று ரூ12,50,000 உடன் விலகிக் கொண்டார். அவர் வெல்லத் தவறிய ரு12,50,000ஐ சூர்யா, தன் அகரம் பெளண்டேஷனிலிருந்து பார்வதி அம்மாவுக்கு, அவரது பள்ளிக்காக வழ்ங்கியது பாராட்டுக்குரியது.

திங்கள்-வியாழன் மாலை எங்கு வெளியே சென்றாலும் மணி அண்ணன்,
'9 ஆகப்போகிறது வீட்டுக்குப்போ' என்று என்னை விரட்டுவார். எனக்கும் அந்த ஹாட் சீட்டில் உட்கார ஆசைதான். இது போல ஒரு நல்ல நிகழ்ச்சி இனி வருமா?

Sunday, April 15, 2012

PIT -ல் ஏப்ரல் மாதப் போட்டி தலைப்பு 'வழி நடத்தும் கோடுகள்'.


எனக்கு உடனே நினைவு வந்தது, கையெழுத்து திருத்தமாகவும் அழகாகவும் இருக்க 'வழி நடத்தும் நாலு கோடுகள்தான். இப்போ ஸ்லேட் பலப்பம் எல்லாம் இல்லை. இலவச LAPTOP தருகிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் நோட், பேனா எதுவும் வேண்டாம் போல. மாணவர்கள் கீ போர்டில் தட்டியே பரீட்சை எழுதுவார்களோ?

போட்டிக்கு என் போட்டோ.

Friday, February 10, 2012

"ஆல் இஸ் வெல்"

"ஆல் இஸ் வெல்"

ஐந்து மாதமாச்சு வலையில் எழுதி. என்ன காரணம் சொல்ல? பிரச்னை, கவலைதான். யாருக்குத்தான் இல்லை. தினம் படிக்கும்/டிவியில் பார்க்கும் விபத்து, கொலை, ஊழல் பற்றிய செய்திகள் வேறு.



சென்ற மாதம் நண்பர்களுடன் சென்னை வந்தபோது அவர்களுடன் "நண்பன்" தியேட்டரில் பார்த்தேன். மாணவன் பன்னீர்செல்வம், தன் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாததால் படிக்க முடியவில்லை, அதனால் மார்க் கிடைக்கலை என்று சொல்ல, பிரின்சிபல் வைரஸ், "தினம் சாப்பிடாமல் இருந்தியா? குளிக்காமல் இருந்தியா, ஏன் படிக்க மட்டும் முடியவில்லை?" என்று கேட்டாரே. நாமும் தினம் எல்லா வேலையும் செய்கிறோம், ஏன் ப்ளாக் எழுதக்கூடாது என்று நினைத்து விஜய் சொன்ன மாதிரி,


'ஆல் இஸ் வெல்', 'ஆல் இஸ் வெல்'


சொல்லிக் கொண்டு வந்து விட்டேன்.

"ஒய் தி கொல வெறி டா" என்று எல்லோரும் கேட்டுவிட்டார்கள். சினிமா பார்த்துதான் அப்படி செய்தேன் என்று சொன்னான். சினிமா மட்டும்தான் மக்களை கெடுக்கிறதா?
முன்னாளில் வந்த சினிமாக்களை கதை, பாடல்கள், இசை, என்று எல்லா வயதினரும் ரசிக்க முடிந்தது. வழக்கம் போல இன்றும் ஒரு பழைய பாட்டு சொல்கிறேனே:

மாதா பிதா குரு தெய்வம் - அவர்
மலரடி தினம் தினம் வணங்குதல் செய்வோம்
மாதா பிதா ........

ஓதாதிருப்பது தீது - நாம்
ஒழுங்குடன் பள்ளிக்கு செல்வோம் தப்பாது
ஓதி உணர்ந்தது போலே என்றும்
உண்மையாய் நடந்து
உயர்வோம் மண் மேலே
மாதா பிதா......
காலையில் எழுந்ததும் படிப்பு, பின்பு
காலைக் கடனையும் உணவையும் முடித்து
நூலைக் கையிலே எடுத்து பள்ளி நோக்கி
நடந்து கற்பதே சிறப்பு
மாதா பிதா......

தெய்வம் தொழுதிட வேண்டும் - நம்
தேசத்தின் மீதன்பு செலுத்திட வேண்டும்
கைத்தொழில் பழகிட வேண்டும் - மகாத்மா
காந்தியின் சொல் படி நடந்திட வேண்டும்
மாதா பிதா.....

நான் பெற்ற செல்வம் படத்தில் அக்கா ஸ்தானத்தில் தங்கள் வீட்டில் வளரும் சிறுவனை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் சிறுமி பாடும் பாட்டு. ஜி.ராமநாதன் இசையில் ஏ.பி.கோமளா பாடிய ஒரு அருமையான பாட்டு. எழுதியவர் யார் என்று நினைவில்லை.

15 வயது சிறுவன் செயலுக்கு யார் காரணம்? மாதாவா, பிதாவா, குருவா என்று எல்லோரும் பல இடங்களில் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். கல்வியே ஒரு வியாபாரம் ஆகிவிட்ட நிலையில் தெய்வம்தான் ஏதாவது செய்ய வேண்டும்.

Wednesday, August 31, 2011

ஆயிரம் பிறை கண்ட பேராசிரியர் சிவ.ராமச்சந்திரன்.

திருநெல்வேலி ம.தி.தா இந்து கல்லூரியில் 1950- 70களில் படித்த மாணவர்கள், ஆசிரியப் பெருமக்கள், இன்று உலகில் எங்கிருந்தாலும் இந்த பெயரைக் கேட்டாலே மகிழ்ச்சி அடைவார்கள். எகனாமிக்ஸ் லெக்சரராக தொடங்கி முதல்வராகி ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு.சிவ.ராமச்சந்திரனுக்கு சதாபிஷேகம்



ஆகஸ்ட் 10, புதன்கிழமையன்று அவர் இல்லத்தில்(203, ஐந்தாவது தெரு, பெருமாள்புரம், திருநெல்வேலி 627 007) சிறப்பாக நடந்தது.



எண்பது வயது நிறைவானவரை ஆசீர்வதிக்கவும், ஆசி பெறவும் கூடியவர்களைப் பார்க்கவே பரவசமானது.





ராமச்சந்திரன் - ராஜலக்ஷ்மி தம்பதியின் மகள் பகவதி, மருமகன் கோபாலகிருஷ்ணன், மகன் கண்ணன், மருமகள் பிரதிமா, பேத்திகள் கோ.பூர்ணிமா, க.அனிக்கா, விழாவை மிக நேர்த்தியாக் ஏற்பாடு செய்திருந்தார்கள்.








வள்ளியூரை சேர்ந்த திரு.ராமச்சந்திரன் நெல்லையில் முதன் முதல் அறிமுகமானது எங்களுக்குத்தான். என் பெரியண்ணன் திரு.முத்துவேல்(அம்மா, அப்பா கூப்பிடுவது குட்டி என்று)1951 - 52 ல், மெட்ராஸ் லொயோலா காலேஜில் பி.எஸ்ஸி படித்தார். ஹாஸ்டலில் நண்பரான ராமச்சந்திரன் பி.ஏ மாணவர்.

திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் மட்டும் தான் அப்போ எல்லாம். லீவில் ஊருக்கு வரும்போது சேர்ந்தே வருவார்கள். அண்ணனுடன் அவரும் எங்கள் வீட்டுக்கு வந்து, குளித்து, லஞ்ச் சாப்பிட்டு, மதியம் பயோனியர் பஸ்ஸில் வள்ளியூர் செல்வார். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அவரை ரொம்பப் பிடிக்கும். எங்கள் குடுமபத்தில் ஒருவராகவே ஆனார். அவருடைய கல்யாணத்திற்கு அப்பா, அம்மா நாங்கள் எல்லோரும் மதுரைக்கு சென்றோம். வீட்டு விசேஷம் எல்லாவற்றிலும் கலந்து கொண்டார். நல்லது செய்தால் பாராட்டியவர், தவறு செய்தால் கண்டிக்கவும் செய்தார். என் சின்ன அண்ணன் சண்முகம் இந்து கல்லூரியில் அவருடைய மாணவர்.

ஒருநாள் கல்யாண விருந்து முடிந்ததும் என் மாமா, அண்ணன் ராமச்சந்திரனிடம் தாம்பூலத் தட்டை தந்து வெற்றிலை போடு என்றார். வேண்டாம் பழக்கமில்லை என்றார். நீயும் குட்டி மாதிரி தானா என்று கேட்க, குட்டி காபி குடிப்பானே என்றார் ராமச்சந்திரன். அவ்வளவு ஹெல்த் கான்ஷியஸ்.கல்லூரில் என்.சி.சி ஆபீசர். லெப்டினென்ட் ராங்க் எல்லாம் அடைந்தவர்.




படத்தில் என் அண்ணன் திரு.சுப்பிரமணியன். இவருக்கு அடுத்த ஆண்டு சதாபிஷேகம். அருகில் மதினி திருமதி லோகா.





நான் எடுத்த படங்களை ஆல்பம் போட்டு மறுநாள் காலை கொடுத்தேன். எங்கள் கல்யாணத்தில் குட்டி போட்டோ எடுத்தான், சதாபிஷேகத்தில் நீ செய்து விட்டாய் என்றார் அண்ணன் ராமச்சந்திரன். எழுத உட்கார்ந்ததும் மலர்ந்த நினைவுகளால் பதிவிட நாட்களாகி விட்டன.

Wednesday, July 20, 2011

முக்கனி, முப்பால், த்ரீ ரோஸஸ்

1) விரும்பும் மூன்று விஷயங்கள்?
1.முக்கனி,
2.முப்பால் (குறள்)
3.த்ரீ ரோஸஸ் டீ (டிவி விளம்பரங்க. நான் காபி பிரியன்)

2) விரும்பாத மூன்று விஷயங்கள்?
1.மூணு சீட்டு ஆடுவது,
2.நான் பிடித்த முயலுக்கு மூணு கால் எனும் பிடிவாதம்
3.டிக்கெட் வாங்க ரெண்டு பேர்தான் கவுண்டரில் நிற்கிறோம்.
மூணாவது ஆள் முந்திச் செல்வது.

3) பயப்படும் மூன்று விஷயங்கள்?
1.மூணாம் உலகப் போர் வந்துவிடுமோ?
2.மரங்களை எல்லாம் வெட்டி வருகிறோம்.இனி காடுகளே இல்லாமல்ஆகிவிடுமோ?
இப்பவே யானை, சிறுத்தை எல்லாம் உணவு தேடி நகருக்குள் வருவதாக
தினம் பேப்பரில் படிக்கிறோம்
3.கார் ஓட்டவே பயமா இருக்கு.
யாருமே (என்னைத் தவிர)சாலை விதிகளை மதிப்பதில்லை.

4) புரியாத மூன்று விஷயங்கள்?
1.நியூட்டனின் மூன்றாம் விதி - நாம் செய்யும் நல்ல ஆக்ஷ்னுக்கு கூட
-ஈக்வல் இல்லை-மூன்று மடங்கு ஆப்போசிட் ரியாக்ஷன் வருவது.
2.மூன்றாம் மாடியிலிருந்து நாம் லிஃப்டில் இறங்கும் போது கதவு
திறந்ததும் நம்மை வெளியே வர விடாமல் நுழைபவர்களுக்கு என்ன அவசரம்?
3./ஒண்ணுமே புரியலே உலகத்திலே/
சந்திரபாபு பாடிய பாட்டுதான் ஞாபகம் வருது.

5) மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?
1.மூணு ரூபாய் சில்லரை காசு
2.ஃபோன் ,
3.லாப் டாப்,

6) சிரிக்கவைக்கும் மூன்று விசயங்கள் அல்லது மனிதர்கள்?
1.டாம் அண்ட் ஜெர்ரி,
2.பேரக்குழந்தைகள்,
3.வடிவேலு.

7) தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?
1.மூணு நாளா யோசிச்சு யோசிச்சு இந்த பதிவு டைப் செய்கிறேன்.
2.டாக்டர் தந்த மூன்று மாத்திரை, மூன்றவேளையும் விழுங்கிக் கொண்டிருக்கிறேன்.
3.வேறு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்

8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?
அன்னிக்கு ஒருவர் என் கைரேகை பார்த்து, நீங்கள் 96 வயது
வரை இருப்பீர்கள் என்றார்.அடேயப்பா!
இன்னும் 26 வருஷமா? அப்படியானால்:
1.பேத்திகள் கல்யாணம் பார்க்கணும்,
2.கொள்ளுப் பேரக்குழந்தைகளுடன் விளையாடணும்
3.யாருக்கும் தொந்திரவு கொடுக்காமல்
என் வேலைகளை நானே பார்த்துக்கொண்டு,
இரவில் படுத்தார், காலையில் எழுந்திருக்கலை
என்று சொல்லுமாறு போய்விட வேண்டும்

9) செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?
1.ஒண்ணு இல்லை 2.ரெண்டும் இல்லை 3.மூணும் இல்லை

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?
1.பொது இடங்களில் அசிங்கமாக செல் போனில் பேசுவது.
2.பொய் சொல்லுவது
3.நம்மை இந்திரன், சந்திரன், (எந்திரன் - மூணாவதாக சேர்த்துக்கலாமா?)
என்று புகழ்வது. என் திறன் எனக்குத் தெரியாதா.

11) கற்றுக் கொள்ள விரும்(பிய)பும் மூன்று விஷயங்கள்?
1.தபேலா வாசிக்க.
2.ப்ளேன் ஓட்ட
3.டைப் அடிக்க.

அந்நாளில் எங்க ஊரில் ரிப்போர்ட்டர்ஸ் ஹோம் தான்
பெரிய டைப் இன்ஸ்டிட்டியூட்.. அதில் சேர்ந்து asdfgf ;lkjhj
என்ற முதல் பாடம் மட்டும் படித்தேன்

12) பிடித்த மூன்று உணவு வகைகள் ?
1.காலை டிபன் ஹோட்டலில் என்றால் பொங்கல், வடை
2.மதியம் வீட்டில் சொதி.
3.இரவில் இட்லி

13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?
1.மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது...
2.மூன்று தமிழ் தோன்றியது...( படம்-பிள்ளையோ பிள்ளை )
3.கூகுளில் தேடினேன் மூணாவது பாட்டு கிடைக்கவில்லை.)

14) பிடித்த மூன்று படங்கள்?
1.மூன்று முகம 2.மூன்றாம் பிறை 3.மூன்று முடிச்சு.
இது மூன்றுக்காக சொன்னது. பிடித்த 3 படங்கள்:
சந்திரலேகா, மலைக்கள்ளன், பராசக்தி

15)இல்லாம வாழமுடியாதுனு சொல்லும்படியான மூணு விஷயம்? 1.கம்ப்யூட்டர் 2.செல்போன் 3.ப்ளாக்(blog)

16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்?
அந்த மூவர், என் பதிவுகளுக்கு தவறாமல் பின்னூட்டம் இடும்
1.நானானி 2.கோமா 3. ராமலக்ஷ்மி

Thursday, June 30, 2011

மதி தா என்று நான் கேட்ட ம.தி.தா பள்ளிக்கு 150 வயது


திருநெல்வேலி ஜங்ஷனில் அமைந்த துரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரி உயர்நிலைப் பள்ளி(ம.தி.தா இந்து......)யின் 150வது ஆண்டுவிழாவின் முதல் நிகழ்ச்சி நன்கொடையாளர் தினம்.






அந்நாளில் ரூ. 1,00,000 வழங்கிய வள்ளல்களை நினைவு கூறும் வகையில் பள்ளியின் கல்விச் சங்கம் இன்று 30/06/2011 கொண்டாடியது.

நெல்லை மாநகராட்சி மேயர் திரு,ஏ.எல்.சுப்பிரமணியன் எல்லோரையும் வரவேற்றுப் பேசினார். கல்விச் சங்க்த்தின் தலைவர் திரு.எஸ்.மீனாட்சிசுந்தரம் தலைமை உரையில் திருநெல்வேலியில் ம.தி.தா, புனித சேவியர், புனித யோவான் பள்ளிகள்தான் அந்நாளில் பிரபலம். அதில் ம.தி.தா முதலில் தோன்றியது என்றார்.
கல்விச் சங்கத்தின் செயலாளராக 15 ஆண்டுகள் பணியாற்றிய திரு.அம்மையப்ப முதலியாரின் திரு உருவப் படத்தை கல்விச் சங்கத்தின் நன்கொடையாளர் வழிவழி உறுப்பினர் திரு.T.சந்தீஷ் திறந்து வைத்தார்.



சிறப்பு விருந்தினர் திருமதி உஷாராமன் - முதல்வர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொன்விழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சங்கர்நகர்)தன் உரையில் மகாகவி பாரதி, வ.உ.சி, போன்ற கவியும் சுதந்திரப் போராட்ட வீரரும் பயின்ற பள்ளியின் ஆண்டுவிழாவில் தம்மை பேச அழைத்ததை பெருமையாக் கருதுவதாகக் கூறி மாணவ மாணவியருக்கு அந்த தலைவர்கள் போல வாழ வேன்டும் என்று அறிவுரை கூறினார்.

கல்விச் சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் வாழ்த்துரை வழங்கினர். பொருளாளர் திரு.தளவாய்.தி.ராமசாமி நன்றி கூறினார். வெள்ளி (01/07), சனி(02/07) இருநாளும் முனைவர்.கு.ஞானசம்பந்தன் நடுவராக பட்டிமன்றம் - சின்னதிரையும் வெள்ளித்திரையும் மக்களை பண்படுத்துகிறதா? பாழ் படுத்துகிறதா? -என்ற தலைப்பில் பட்டிமன்றம் உட்பட சுவையான நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

பள்ளியின் பழைய மாணவனாக நானும் கலந்து கொண்டு நினைவுகளில் மூழ்கி எழுந்து வந்தேன். நினைவுகள் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்