Sunday, July 6, 2008

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்

4/7 வெள்ளியன்று தென்காசியில் ஒரு கல்யாண வரவேற்பு நிகழ்ச்சிக்காக இரு நண்பர்களுடன் சென்றேன்.

மெல்லிசைக் குழு வல்லிசை முழங்கிகொண்டிருந்தார்கள். இசைக்குழுவினர் தங்கள் வால்யூம் லெவலை சபையின் அமைப்பு, விருந்தினர் எண்ணிக்கை என்று அநுசரித்து வைத்துக் கொண்டால் கேட்க நன்றாக இருக்கும், கல்யாண வீட்டில் உறவினர், நண்பர்களை பல நாட்களுக்குப் பிறகு சந்திப்போம். அவர்களுடன் பேசமுடிவதில்லை.

பாடிக்கொண்டிருந்த பெண் பாட்டுக் கேற்றபடி ஆட்டம் போட்டாள். கல்யாண வீட்டில் பாட என்று பாடல்களைத் தேர்வு செய்து ரிஹர்சல் பார்த்து வந்து பாடினால் கேட்க சுவையாக இருக்கும்.

குழுவின் லீடர் ஒரு கேள்வி கேட்டார், பதிலை சீட்டில் எழுதி தருமாறும் நிறைய சரியான பதில் இருந்தால் குலுக்கல் முறையில் பரிசு என்றும் சொன்னார்.

"எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே....." மலைக்கள்ளன் படத்தில் செளந்தரராஜன் பாடிய இப்பாட்டை எழுதியவர் யார்? இதுதான் கேள்வி.

படத்தை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். எம்.ஜி.ஆர் நடித்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் அது. மேடை ஏறி அந்த பாட்டை பாடவேண்டும் என்று சொல்லியிருந்தால் கூட தாளம்/வரி பிசகாமல் பாடியிருப்பேன். யார் எழுதியது என்று மறந்து விட்டேனே என்று வெட்கமாக இருந்தது.

வந்த சீட்டுக்கள் எல்லாமே--உடுமலை நாராயண கவி, தஞ்சை ராமையாதாஸ், மருதகாசி, கா.மு.ஷெரிப்----தவறான பதில் என்று சொல்லிவிட்டார்.
படத்தின் வசனகர்த்தா மு.கருணாநிதியே இந்தப் பாட்டெழுதினாரோ என நினைத்தேன்.
நாமக்கல் கவிஞரோ? கதை தானே அவருடையது?

நீங்கள் யாராவது சொல்லுங்களேன்

Friday, July 4, 2008

ப்ளெஷர் கார் ?

ரொம்ப வருஷத்திற்கு முன், 'அவர் ப்ளெஷரில் வந்தார்' (அதாவது காரில் வந்தார்) என்பார்கள். காரில் பயணிப்பதும் கார் ஓட்டுவதும் மிகுந்த ப்ளெஷராக(மகிழ்ச்சியாக) இருந்தது.

இன்று ஜனத்தொகைக்குப் போட்டியாக கார்த்தொகை பெருகிக்கொண்டே போகிறது. பன்னாட்டு கார் உற்பத்தியாளர்கள் இந்தியாவைத் தேடி வந்து கார் தயாரிக்க தொடங்கிவிட்டார்கள். அவர்கள் நாட்டை விட இங்கு லேபர் மலிவாக இருப்பதும் ஒரு காரணம்.

இருக்கும் அதே சாலையில் புதிது புதிதாக கார்கள், பஸ், லாரி, மோட்டார்பைக் எல்லாம் எதிரும் புதிருமாக கடும் வேகத்தில் செல்வதும், முந்த முயல்வதுமாக இருப்பதால் தினமும் விபத்துக்களும் உயிரிழப்புகளும் நேர்கின்றன.

நால்வழிச்சாலை போடுகிறோம் என்று அசோகர் அந்த நாளில் நட்ட சாலையோர மரங்களை எல்லாம் வெட்டித் தள்ளி அகலப் படுத்தி விட்டாரகள். ஆனால் சாலைப் பணிகள் விரைந்து முடியவில்லை.

மதுரைக்கு நான் என் பியட் காரில் 80 கிலோமீட்டர் வேகம் தாண்டாமல் 2 மணி, 45 நிமிடங்களில் செல்வேன். இன்று இனோவாவில் 3 மணி 15 நிமி. ஆகிறது. இப்போதும் 80கிமீ தாண்டுவதில்லை. சாலையில் தார் வேலை முடியாததால் டயர் கெட்டுவிடக் கூடாதென்று பல இடங்களில் லோயர் கியரிலேயே செல்ல வேண்டி இருக்கிறது. முந்த முயலும் பஸ் கார் எல்லாவற்றிர்க்கும் வழி விடுவேன். ஆனால் எதிர் வரும் கார்கள் அசுர வேகத்தில் வலது புறமாக-நம் லேனில்-மற்ற வண்டிகளை முந்திக்கொண்டு வரும் போது நான் ஒதுங்கி நின்று வழி விடவேண்டும்.

நாலைந்து பேர் செல்லும் போது, காரில் எனக்கு எப்போதும் செளகரியமான சீட், ட்ரைவர் சீட்தான். ஆனால் கார் ஒட்டுவது இன்று ப்ளெஷராகவே இல்லை. விபத்துக்களை தவிர்க்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 80கிமீ வேகத்திற்கு மேல் எந்த காரும் செல்லக்கூடாது.

ஹைவேயில் நடப்பது கார் ரேஸ் இல்லை. அதில் தோற்றால் எவ்வளவு பெரிய தண்டனை என்பதை எல்லோரும் உணர்ந்தால் தான் கார் ஓட்டுவதும் பயணிப்பதும் மீண்டும் ப்ளெஷ்ர் ஆகும்

Tuesday, June 24, 2008

தித்திப்பான பத்து விஷயங்கள்

வாழ்க்கை எவ்வளவு இனிமையானது என்பதைக் கண்டுகொள்ளுங்கள். எக்ஸ்ட்ரா சர்க்கரை எடுத்துக்கொள்வதை தவிர்த்து விடுங்கள் என்று உலக டயபட்டீஸ் தினத்தன்று ஹார்லிக்ஸ் லைட் விளம்பரத்தில் பார்த்தேன். நவம்பர் 2006 (தேதி நினைவில்லை) செய்தித் தாளிலிருந்து வெட்டி பத்திரமாக வைத்திருக்கிறேன். நீங்களும் பார்த்திருக்கலாம், மறந்தும் இருக்கலாம்.

தித்திப்பான இந்த பத்து விஷயங்களை செய்து பாருங்களேன்.

1. ஒரு நாள் மாலை வேளையில் சந்தித்துப் பேச உங்கள் நண்பர்களை அழையுங்கள்.

2. உங்கள் அன்பு மனைவி/கணவருக்கு ஒரு காதல் கடிதம் எழுதி போஸ்ட் செய்யுங்கள்.

3. "முத்து" திரைப்படத்தில் ரஜினியின் அமர்க்களமான நடிப்பை ரஸித்திடுங்கள்.

4. "ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்"-என்றும் பசுமையான இது போன்ற பாடலை பாத்ரூமில் பாடுங்கள்

5.தெருமுனை கிரிக்கெட் மேட்ச்சில் அம்பயரிங் செய்யுங்கள்.

6. பழைய கல்லூரி போட்டோவைப் பார்த்து நினைவில் மூழ்குங்கள்.

7. பறவைகளுக்கு இரை போடுங்கள்.

8. தெருவோர ஏழைப் பிள்ளைகளுக்கு க்ரேயான் கலர்கள் கொடுங்கள்.

9. உங்கள் பக்கத்து வீட்டுக்காரரை பாராட்டி மகிழ்வியுங்கள்.

10. கொஞ்சமும் எதிர்பார்க்காத உங்கள் பழைய கால நண்பருக்கு போன் சேய்து பேசுங்கள்.

நான் என் நண்பர்/உறவினர் வீட்டிற்கு (டிவி சீரியல் தொடங்குமுன்) சென்று பேசி வருவேன்.
பழைய கல்லூரி குரூப் போட்டோக்களை எடுத்து நண்பர்களை நினைத்து மகிழ்வேன்.
எங்கள் வீட்டருகில் பூட்டியுள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் மயில்கள் உள்ளன. அவை இரை தேடி எங்கள் வீட்டுத் தோட்டத்திற்கு வரும். தினமும் பேத்திகளுடன், மயில்களுக்கு பொட்டுக் கடலை தூவினால் கொத்தி சாப்பிட்டுச் செல்லும்.
குழந்தைகளுக்கு ஒரு படம் தந்து வர்ணம் தீட்டும் போட்டி நடத்தினேன். எல்லாருக்கும் ஒரு சிறிய க்ரேயான் பாக்ஸ் தந்தேன். பரிசு முதல் மூன்று பேருக்குத்தானே. க்ரேயான் பாக்ஸ் எல்லோருக்கும் பரிசு என்றதும் அவர்கள் முகத்தில் எவ்வளவு சந்தோஷம் தெரியுமா?

நீங்களும் செய்து பாருங்களேன். சம்பாத்தியம் , குடும்பம், டிவி, சினிமா எல்லாம் தாண்டி வாழ்க்கை எவ்வளவு தித்திப்பானது என்று பாருங்கள்.

Saturday, June 14, 2008

கமல்ஹாசன், கமல்ஹாசன் மற்றும் பல கமல்ஹாசன்கள்

அடுத்த கமல் படத்தின் விளம்பரத்தில் நடிகர் லிஸ்ட் இப்படி இருக்குமோ?

இது கமலோ, இதுவும் கமலோ என்று வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் (பாத்திரம்தான், கதையில்லை)கமல்ஹாசனோ என்று நினைக்க வைக்கும் அளவுக்கு வேடங்கள் அணிந்து நடித்துள்ள படம் தசாவதாரம்.

வசனமும் அவர்தானாம். நெப்போலிய குலோத்துங்கன், "யாம் அறிவோம், யாம் அறிவோம்" என்று சொன்னதும், ரங்கராஜன், "உன்னை அறியாமல் ஹரிஓம், ஹரிஓம் என்று எத்தனை முறை சொல்லிவிட்டய்", என்று கேட்டதில் கற்பனையும்,
கோவிந்தன், போலீஸ் ராவ் இடமும் நரசிம்மராவ் இடமும், ராவோட ராவாக இருந்து செய்து விடுங்கள் என்று சொல்வதில் ந்கைச்சுவையும் நன்றாக இருக்கிறது.

6.30க்கு தொடங்கிய படம் இன்னும் இன்டர்வல் வரவில்லையே என நினைக்க, 8 மணிக்கு இன்டர்மிஷன் வந்தது. சரிதான் இன்னும் 1 1/2 மணி நேரம் ஓடுமே என்று நினைத்து ஒரு ப்ரூ காபி சாப்பிட்டுவிட்டு அவளுக்கு ஒரு கோன் ஐஸ்க்ரீம் வாங்கிக் கொண்டு வந்தேன்

டைரக்டர்கள் பி.வாசு, சந்தானபாரதி எல்லோரும் வந்துவிட்டார்கள், ரவிக்குமார் வந்ததும் படம் முடிந்துவிடுமே என்று எதிர்பார்க்க வைத்துவிட்டார், படத்தின் டைரக்டர்.

Friday, June 13, 2008

மூவர் ஏற்றிய தமிழ் விளக்கு

'இணையத்தில் வளர் தமிழ்' என்ற தலைப்பில், வலைப்பதிவின் வளர்ச்சியும் தமிழ் ஆய்வின் பயன்பாடும் பற்றிய கருத்தரங்கு நெல்லையில் சென்ற வாரம் நடந்தது. திரு.சேகர் பொன்னையா, திரு.முல்லை ச.முருகன் இருவரும் ஒருங்கிணைத்திருந்தார்கள்.

வாஷிங்டனிலிருந்து வந்த முனைவர் சொ.சங்கர பாண்டி பேசுகையில், அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் தமிழில் பேசும் வாய்ப்பே மிகவும் குறைந்து வருகிறது என்றார். அமெரிக்க மாநிலங்களில் உள்ள தமிழ் சங்கங்கள், தமிழ் பள்ளிக்கூடங்கள் அமைக்க கூட்டு முயற்சி செய்து வருகின்றன என்றும், தமிழ் நாட்டில்கூட பள்ளிகளில் தமிழ் பேசக்கூடாது, ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என் கட்டாயப்படுத்தும் நிலை உருவாகி வருகிறது. தமிழ் மொழியை மதிக்கவும், ஆங்கிலக் கலப்பில்லாமல் பேசும் நிலை வர வேண்டும் என்றார்.

தமிழ் வலைப்பதிவு பற்றி சொல்கையில் சங்கர பாண்டி, நம் கதையோ, கட்டுரையோ, கருத்துக்களோ பத்திரிகைக்கு அனுப்பி வெளிவருவதைப் பார்க்கக் காத்திருக்க வேண்டியதில்லை. நம் எழுத்தை உலகத்தமிழர்கள் அனைவரும் உடனே படிக்க வைக்க முடிகிறது என்றார்.

கோவை வாசியான திரு.காசி ஆறுமுகம், தான் அமெரிக்காவில் நான்கு ஆண்டுகள் இருந்தபோது தமிழ்மணம் வலைத்திரட்டியை தொடங்கியதையும், அதில் பதிவுகள் நேரம் வாரியாக வெளியிடப்படுவதையும், பின்னூட்டங்கள் மூலம் வாசகர்கள் பதில் எழுதுவதால் வேகமான கருத்துப் பரிமாற்றம் நிகழ்வதையும் கூறினார். நாம் எழுதுவதை நாமே தணிக்கை செய்து, நல்ல தமிழில் நல்ல கருத்துக்களை எழுதி இந்த உயிருள்ள ஊடகத்தை எல்லோரும் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அடுத்துப் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், திரு.கோ.பிரகாஷ் அவர்கள், மொழிதான் ஒரு சமூகத்தின் அடையாளம். தமிழன் என்று சொல்லிக்கொள்ளவே நாம் கர்வப் படவேண்டுமென்றார்.மூன்று தமிழ் சங்கங்கள் தொடங்கியதே தமிழ் வளர்ச்சிக்காகத்தான். இலக்கியமே கற்பனை கலந்த கதையின் வடிவமைப்புதான். திராவிட மொழிகள் அனைத்துக்கும் ஆணிவேர் தமிழ்தான் என்று கால்டுவெல் போன்ற மேல்நாட்டு அறிஞர்கள் கூட எழுதிச் சென்றார்கள்

திரு. பிரகாஷ், தான் ஐ.ஏ.எஸ் பயிலும் போது தமிழை இரண்டாவது மொழியாக எடுத்துக்கொண்டதாகவும் அப்பொழுதுதான் தமிழ் மொழியின் நீளம், அகலம், விஸ்தீரணம் தன்னால் அறிந்து கொள்ள முடிந்தது என்றும் கூறினார். இந்திய மொழிகளிலேயே ஆங்கிலத்திற்கு அடுத்த படியாக தமிழ்தான் வலைப்பதிவில் அதிகம் காண முடிவதால் உலகெங்கிலும்தமிழர்கள் வாழ்ந்து தமிழைப் பரப்புவது தெரிகிறது.

நாணயத்தின் மறு பக்கத்தை காட்டிய திரு.பிரகாஷ், நகரத்தன்மை வாய்ந்த ஊர்களில் தமிழ் எழுதுவது, பேசுவது, படிப்பதையே சமூகம் கீழ்நிலையில் பார்க்கிறது என்றார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தமிழ் பேசுவதை ஊக்குவிக்க வேண்டும், ஏனென்றால் ஞாயிறு முதல் சனி வரை கிழமைகள் கூட அவர்களுக்கு தமிழில் சொல்லத்தெரிவதில்லை. அடுத்த தலைமுறை தமிழை மறந்துவிடாமல் பெருமை வாய்ந்த தமிழ் மொழியை பல்லாண்டு திகழச்செய்ய வேண்டும் என்றார்.

ஹுஸ்டன் நகரில் நாசா விண்வெளி மையத்தில் பணிபுரியும் முனைவர்.நா.கணேசன், முதுகலையிலும் தமிழ் ஒரு விருப்பப் பாடமா இருக்க வேண்டும் என்றார். தமிழ் பத்திரிகைகள் குமுதம், விகடன் யுனிகோட் முறைக்கு மாறி தங்கள் இதழ்களை வெளியிடுகின்றன என்றும் தமிழில் எழுத விரும்பும் பதிவர்கள் தமிழ்நெட் 99 தட்டச்சு பயன் படுத்தி சுலபமாக தங்கள் பதிவுகளை வெளியிடலாம் என்றும் கூறினார்.

முனைவர்.மு.இளங்கோவன், கருத்தரங்கு நடந்துகொண்டிருக்கும் போதே நிகழ்ச்சிகளை புகைப் படங்களுடன் தன்னுடைய வலைப்பதிவில் பதிவு செய்து கொண்டிருந்தார்.
வழக்கறிஞர் டி.ஏ. பிரபாகர் நன்றி கூறினார்.

Monday, June 2, 2008

ஹீரோவுக்கு புதிய தோழர்கள்.

சந்தோஷ் சுப்பிரமணியம் படம் 50 நாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறது.நேற்றுதான் திரையரங்கில் பார்த்தேன்.
தனி காமெடி ட்ராக், வில்லன், பாட்டு/டான்ஸ், எதுவுமில்லாமல் நம்மையும் சந்தோஷின் குடும்பத்தில் ஒருவராக 3 மணி நேரம் கட்டிப்போட்டு விட்ட கதை. நிச்சயிக்கப் பட்ட கல்யாணம் என்னாகும் என்ற டென்ஷன் நமக்கு.
ஹீரோவுக்கு தோழர்களாக விவேக், சார்லி, தாமு, வையாபுரி யாரும் இல்லாமல் மூன்று புதிய முகங்களைப் பார்த்தது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.

Saturday, May 17, 2008

Be SILENT and LISTEN: இரண்டு வார்த்தைகளுக்கும் அதே ஏழு எழுத்துக்கள்தான்

சென்ற வாரம் ரோட்டரி க்ளப்களில் ஜூலை முதல் பதவி ஏற்க இருக்கும் புதிய தலைவர்,செயலாளர்,டைரக்டர்கள்களுக்கான பயிற்சி கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது. (நாங்கள் ராமேஸ்வரத்தில் தங்கி தனுஷ்கோடிக்கும் சென்றிருந்தோம். அதைப்பற்றி ஃபோட்டோவுடன் அடுத்த பதிவில் சொல்கிறேன்)
நிகழ்ச்சியை தொடங்கி வைத்த ட்ரெயினர் சொன்ன முதல் வார்த்தை -"உங்கள் செல் போன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்யுங்கள், Be SILENT and LISTEN".
நாம் ஒரு நிகழ்ச்சிக்கு செல்கையில் நம் கவனம் முழுதும் அதில் தான் இருக்கவேண்டும். இன்று எல்லோருக்கும் வேண்டிய ஒரு அறிவுரை.