Sunday, April 10, 2011

ஹஸாரே -இந்த பேரை முன்னே கேட்ட மாதிரி இருக்கே

யோசித்துப் பார்த்தால் - முந்நாள் கேப்டன் விஜய் ஹஸாரே; வினு மன்காட்; நாரி கண்ட்ராக்டர் என்று கிரிக்கெட்டர்கள் பெயர் எல்லாம் ஞாபகம் வந்தது. அப்போ எல்லாம் டெஸ்ட் மாட்ச் தான். ஒன் டே மாட்ச் இல்லை. ட்வென்டி/ட்வென்டி வரலை. டிவி கிடையாது. ரேடியோவில் தான் கிரிக்கெட் கமென்டரி மக்கள் கேட்பார்கள். மறுநாள் பேப்பரில் பார்த்தார்கள்.

இன்று போல் அவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கவில்லை. பரிசு மழையும் பெய்யவில்லை. ஒருவேளை அந்த ஹஸாரேதான் தங்களுக்கும் ஹன்டே வெர்னா கார்கள்; பாரத் ரத்னா விருதுகளும் வேண்டும் என்று உண்ணாவிரதம் இருக்கிறாரோ என்று நினைத்தேன்.

மகாத்மா காந்தி போல அன்னா ஹஸாரே அவர்களின் அஹிம்சை போராட்டம் எவ்வளவு உயர்ந்தது. ஊழல் இல்லாத அரசு நாடு முழுதும் அமைய ஜன் லோக்பால் அமைப்பு முழு வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்திப்போம்

Sunday, April 3, 2011

சத்யராஜின் அடுத்த வேஷம் என்ன?

மும்தாஜ் :- ஜெஹாம்பனா .பாண்டிய மன்னனைத் தொடர்ந்து பல்லவனும் சேரனும் தங்கள் நாட்டில் தொடங்கி விட்டார்கள். நாம் என்ன அவர்களுக்கு சளைத்தவர்களா? நீங்களும் உடனே அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.

ஷாஜஹான்:- என்ன பேகம் சொல்கிறாய். எந்த நாட்டின் மீது படை எடுக்க வேண்டும்? சொல்.

மும்தாஜ்:- படை இல்லை ஜெஹாம்பனா. உடை. எனக்கும் தமிழ்நாட்டுப் பெண்கள் போல பட்டு சேலை உடுத்த வேண்டும் சுடிதார் அணிய வேண்டும் என்று ஆசை. ஔரங்கசீப்க்கும் விதம் விதமான பேண்ட் ஜீன்ஸ் எல்லாம் வேண்டுமாம்.

ஷாஜஹான்:- சரி நாம் எந்த கடைக்கு போகணும்?

மும்தாஜ்:- உங்களுக்கு ராஜாங்க வேலையே நாள் முழுதும் சரியாகி விடுகிறது. பேப்பர் படிப்பதில்லை. டிவி பார்ப்பதில்லை. உங்களுக்கு ஜி.கே ஸீரோதான்.

ஷாஜஹான்:- மந்திரியாரே ராணி என்ன சொல்கிறார்? உங்களுக்கு புரிகிறதா?

மும்தாஜ்:- நானே சொல்கிறேன் ஜெஹாம்பனா. நீங்கள் எனக்கு தாஜ் மஹால் ஒன்றும் கட்ட வேண்டாம். நம் நாட்டு மக்களுக்கு அழகான ஜவுளிகளின் ஆலயம் கட்டுங்கள். புரியலையா?போத்தீஸ்.

ஷாஜஹான்:- ஓ அதுவா? நானும் கேள்விப்பட்டேன். மந்திரியாரே உடனே தூதர்களை தமிழ்நாடு அனுப்பி போத்தீஸை அழைத்து வரச் சொல்லுங்கள்.

புனேயில் சிவாஜி/ ஹைதராபாத் நிஜாம்/ மைசூர் மகராஜா அரண்மனைகளில் என்ன நடக்கும் என்று சொல்லுங்களேன்.

Friday, March 11, 2011

பெயர் காரணம்

என் பெயருக்கு என்ன காரணம் தெரியாது. அப்பா அம்மா இட்ட பெயர் - நான் வடிவேல் முருகன் தான். வெடிவால் என்று என் தமிழாசிரியர் அழைத்த பெயர். காரணம் என் முதல் பதிவிலேயே சொன்னேன். தொடர் பதிவில் எழுதும் அளவு ஏதுமில்லை.

சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன் இருவருக்கும் அந்தப் பெயர் வந்த காரணம் எல்லோருக்கும் தெரியும். அதுபோல வெண்ணிற ஆடை மூர்த்தி வெண்னிற ஆடை நிர்மலா பெயர் காரணமும் தெரியும்.
இவர்கள் பெயரின் காரணம் என்ன சொல்லுங்களேன்.

காத்தாடி ராமமூர்த்தி

கல்லாப்பெட்டி சிங்காரம்

கள்ளபார்ட் நடராஜன்

ஒருவிரல் கிருஷ்ணாராவ்

நிழல்கள் ரவி

ஜெயம் ரவி

ஜாவர் சீதாராமன்

காக்கா ராதாகிருஷ்ணன்

க்ரேஸி மோகன்

டெல்லி கணேஷ்

டெல்லி குமார்

Wednesday, February 16, 2011

மெய் மறந்தேன் ராஜா

வினாடிகள் மட்டும் ஓடும் டிவி விளம்பரங்கள் சில நம்மை மெய் மறக்க வைக்கின்றன.
ஜுவல்லரி விளம்பரத்தில் அந்த பெண் கோவிலில் பாடிக்கொண்டிருக்கிறாள். அழகாக கம்பீரமாக நடந்து வரும் இளையராஜா -மெய் மறந்தேன் கண்ணா- என்று முடிப்பார். தன்னை வணங்கும் அப்பெண்ணை ஆசீர்வதித்து ஆட்டோகிராப் போடுகிறார். நிஜமாக நான் மெய் மறந்தேன். இந்த வார குமுதத்தில் டைரக்டர் கிருஷ்ணா ராஜா தன்னிடம் எனக்கு எதற்கு மேக்கப். கறுப்பு போதாதா என்றும் கேமரா கோணங்கள் பற்றியும் கேட்டாராம். பாட்டும் ராஜாதான் எழுதினாராம். ஒளிப்பதிவு P.C.Sriram.

.

வீட்டு மொட்டை மாடியில் ஆவலுடன் காத்திருக்கும் சிறுமி கார் வருவதைப் பார்த்து இறங்கி ஓடி வருகிறாள். புதிய நானோவைப் பார்த்ததும் அவள் பிரமிப்பதும் தங்கள் காரை எல்லோரும் பார்க்கிறார்களே என்று தன் கண்ணில் இருந்து கண்மை எடுத்து காருக்கு திருஷ்டிப் பொட்டு வைக்கிறாள். அருமையான நடிப்பு.
அப்போ எனக்கு எட்டு வயது. எங்கள் வீட்டுக்கு புது கார் இன்று டிவிஎஸ்ஸிலிருந்து வரும் என்று அப்பா சொன்னார். அந்த கார் வரும் வரை நான் வாசலில் காத்திருந்த நினைவுதான் வந்தது.

Friday, January 28, 2011

ஹே ராம்




ஜவஹர்லால் நேரு பிர்லா ஹவுஸ் வெளியே கூடியிருக்கும் மக்களுக்கு மஹாத்மா காந்தி மறைந்து விட்டார் என்று என்பதை அறிவிக்கிறார். கார்டியர் ப்ரெஸ்ஸன் என்ற புகைப்படக்காரர் இரவில் ஃப்ளாஷ் இல்லாமல் விளக்குகளின் வெளிச்சத்திலேயே எடுத்த படம்.

Thursday, January 13, 2011

சந்தையிலே விற்கும் பொருளல்ல கீதம்...

கோகிலவாணி என்று ஒரு படம் வந்தது தெரியுமா? ஜி.ராமநாதன் இசையில் சீர்காழி கோவிந்தராஜனும் ஜிக்கியும் பாடிய அருமையான, மறக்க முடியாத பாடல்கள். வில்லன் நடிகர் எஸ்.ஏ.நடராஜன் (மந்திரிகுமாரி)தயாரித்தது. தாம்பரம் லலிதா, ரகுவீர் ஜோடியாக நடித்தது. ஏனோ படம் நன்றாக ஓடவில்லை.
திரைக்கு வந்து பல ஆண்டுகள் ஆனாலும் டிவியில் கூட பார்க்க முடியவில்லை.

சீர்காழி பாடும் இந்தப் பாட்டைப் பாருங்களேன்.

சரச மோகன சங்கீதாம்ருத சாரலில்
மாங்குயில் கூவுது பார்
சுவையில் தேனிசை கேட்பவர் யாவரும்
சித்திரம் ஆகும் விசித்திரம் பார்

சரச மோகன......

சந்தையிலே விற்கும் பொருளல்ல கீதம்
சிந்தையிலே எழும் ஜீவ லயம்
சுந்தர வான்கவி சுகக்குரலில் எழும்
சுதந்திர நாதமே சங்கீதம்

சரச மோகன...

மந்தை மேகங்கள் மாமழை பொழியும்
விந்தையாய் மயில் வளைந்தசைந்தாடும்
மந்த மாருதம் மலரிசை பாடும்
அந்த கீதமே அமர சங்கீதம்

சரச மோகன.....


ஜிக்கியின் ஹம்மிங்குடன் சீர்காழி பாடும்
"திருவே என் தேவியே வாராய், தேனார் மொழி,
மானார் விழி என்னைப் பாராய்"
,
ஜிக்கி பாடும்
"அழகோடையில் நீந்தும் இள அன்னம்,
உமதெண்ணம்",

என இனிமையான பாடல்கள் எஸ்.டி.சுந்தரம் எழுதியது.

பாலஸ்-டி-வேல்ஸ் தியேட்டரில்தான் படம் ஓடியது. நெல்லையில் மூடப்பட்ட சில தியேட்டர்களில் ஒன்று(எங்களுடையதுதான்). பாட்டு சீன்கள் நேரத்தில் போய் பலமுறை பார்த்தேன். நானானிக்கும் இந்தப் பாட்டு ரொம்பப் பிடிக்கும்.
டிஸ்க் கிடைத்தால் வாங்கி கேட்டுப் பாருங்கள்.

Friday, December 31, 2010

சாலை பாதுகாப்பு வாரம்

ஜனவரி முதல் வாரம் ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு வாரம் அனுசரிக்கிறோம். சாலைக்கே பாதுகாப்பு இல்லை. போன மாதம்தான் செப்பனிடப்பட்ட சாலையை இன்று இ.பி காரர்கள் வந்து தோண்டி சாலை குறுக்கே பள்ளம் உண்டாக்குவார்கள். நாளை டெலிபோன்காரர்கள் அவர்கள் பங்குக்கு வேறிடத்தில் தோண்டுவார்கள். கட்சிக்காரர்கள் வந்து உங்கள் வேலையை சீக்கிரம் முடியுங்கள். மந்திரி வருகிறார். நாளை நாங்கள் ஆர்ச் நிறுத்த தோண்டணும் என்பார்கள். மீண்டும் செப்பனிட எத்தனை நாளாகுமோ?

நமக்கு நாமே என்பது போல நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். கொழும்பிலிருந்து வந்த என் சகலை, அங்குள்ள சாலை விதி புத்தகம் தந்தார். அதன் பெயர், "வீதி ஒழுங்கு". அந்த ஒழுக்கம் ரொம்ப முக்கியம்.

* இடது புறமாகவே செல்லுங்கள்.


* வலது புறமாகவே முந்துங்கள்.


* மிதமான வேகத்தில் செல்லுங்கள். இன்று நால்வழி சாலை.
எல்லா ஊர்களிலும் பை பாஸ். அதிவேகம் செல்லும் புதுப்புது கார்கள்.

என் நண்பர் ஒருவர் தூத்துக்குடி - சென்னை 7 மணி நேரத்தில் போய் விட்டேன் என்றார். என்ன அவசரம்? ஹைவேயில் வேகக் கட்டுப்பாடு கட்டாயம் தேவை. மணிக்கு 100 கி.மீ வேகம் போதுமே.
* இரவில் அதிக கவனம் - ஹைவேயில் எதிரே வண்டி வருகையில் ஹெட்லைட் லோ பீம் போடுங்கள். நான் டி.வி.எஸ்ஸில் இருந்தபோது கம்பெனி டிரைவர் கந்தசாமி சொன்னார். எங்கள் பாஸ் திரு.டி.எஸ்.கிருஷ்ணா அவர்கள் எதிரே மாட்டு வண்டி வந்தால், டிரைவர் பின்னந்தலையில் அடித்து 'மாடு கண் அவிஞ்சு போகும். டிம் போடுடா' என்பாராம் (அப்ப எல்லாம் ஹெட்லைட் பல்ப் 60 வாட்ஸ்தான். இன்று ஹேலொஜென் பல்ப் 100- 125 வாட்ஸ்)

இன்னும் சொல்லலாம். வீதி ஒழுங்கு எல்லோரும் அறிந்ததுதான். அதனால் ஒழுங்காக செல்லுங்கள்.

சுருக்கமாக: START SOONER, DRIVE SLOWER, LIVE LONGER.