ரீடர்ஸ் டைஜஸ்ட் புத்தகங்களை நான் படித்துவிட்டோமே என்று பழைய பேப்பருடன் போட்டுவிடாமல் வைத்திருக்கிறேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் எடுத்துப் படிப்பேன். நவம்பர் 1989 இதழில் இன்று நான் படித்த ஒரு செய்தி.
மோகன்சிங் பயாஸ் என்று ஒரு போலீஸ் ஆபீஸர் நேருவுடன் தான் பெற்ற அனுபவத்தை எழுதியிருக்கிறார். அவர் சொல்வது போலவே சொல்கிறேனே.
"1954-ல் நான் ஒரு ஜுனியர் போலீஸ் ஆபீஸர். பிரதமர் ஜவஹர்லால் நேரு பம்பாயில் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டபோது நான் செக்யூரிட்டி இன்சார்ஜ் ஆக இருந்தேன். கூட்டம் முடிந்தவுடன் நேரு மேடையிலிருந்து இறங்கி மூங்கில் வேலியைக் கடந்து மக்களை சந்திக்க விரைந்தார். நான் அவரைத் தொடர்ந்து என் லத்தியைச் சுழற்றிக் கொண்டு கூட்டத்தை சமாளிக்க முனைந்தேன்.
திடீரென்று என் லத்தி என்னிடமிருந்து பறிக்கப் பட்டது. திரும்பிப்பார்த்தால் நேரு அதைக் கையில் வைத்துக்கொண்டு என்னை அடிப்பது போல் வந்து 'நீ என்ன செய்கிறாய்' என்று கோபமாய் கேட்டார். தன் பெர்சனல் செக்யூரிட்டி ஆபீஸரிடம் என்னை அந்த இடத்தை விட்டு அகற்றும்படிக் கூரினார். கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் இடத்தை விட்டு நான் சென்றேன்.
சிறிது நேரத்திற்குப் பிறகு என்னை பிரதமர் வரச் சொன்னதாகத் தகவல் வந்து அவரைப் பார்க்கச் சென்றேன். அப்போது மொரார்ஜி தேசாயும் வேரு சில தலைவர்களும் அவருடன் இருந்தனர். பிரதமர் என்னிடம், 'நீ என்ன செய்ய முயன்றாய்' என்று கேட்டார். ப்ளூ புத்தகத்தில் (வி.வி.ஐ.பி பாதுகாப்பு முறைகளை விளக்கும் புத்தகம்) சொல்லியபடிதான் செய்தேன் என்று தைரியமாகச் சொன்னேன். மொரார்ஜி தேசாயும், நேருவின் செக்யூரிட்டி ஆபீஸரும் அவரிடம் ஏதோ சொன்னார்கள்.
அதைக்கேட்டதும் பிரதமர் என்னை அருகில் அழைத்து, 'நீ செய்தது சரி, நான் தான் தவறு. ஐ ஆம் ஸாரி' என்றார். அது பிரதமர் தன் வருத்தத்தை ஒரு இளம் போலீஸ் ஆபீஸரிடம் தெரிவித்த விதம். பண்டிட்ஜியின் பெருந்தன்மை என் கண்களில் நீர் வர வைத்து விட்டது. இம்முறை நான் கட்டுப் படுத்த முயலவில்லை."
-மோகன்சிங் பயாஸ்
இன்று இப்படி நடக்குமா?