Tuesday, October 9, 2012

அவர் இல்லை என்று சொல்லுவதில்லை..


தபால்காரரிடம் எனக்கு கடிதம் இருக்கா என்று கேட்டால் நாளை என்றுதான் சொல்வார். மகனிடமிருந்து கடிதம் எதிர்பார்க்கும் தாய்க்கு, இல்லை என்று சொன்னால் எவ்வளவு வருந்துவாரென்று தெரிந்தவர் அவர்.
தபாலை எதிர்பார்த்து பெற்றோரும், கணவன் மனைவியும், மணி ஆர்டருக்காக காத்திருக்கும் மகன்களும் இருந்தது ஒரு காலம். இன்று செல்போன், இன்டர்நெட் எல்லாம் வந்த பிறகு தபால்துறைக்கு வேலை இல்லாமல் போய் விடுமோ

இன்று உலக தபால் தினம்.
தபால்காரர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

Tuesday, September 4, 2012

செப்டம்பர் 5 - இன்று ஆசிரியை தினம்

சமீப காலமாக ஆசிரியர்களைப் பற்றிய செய்திகளைப் படித்ததனால் என்ன எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். 5/9/2012 ஆனந்தவிகடன் இதழ் பார்த்தீர்களா? ஆசிரியர் தகுதி தேர்வில் 6,72,204 பேர் பரீட்சை எழுத 2,448 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றார்களாம். ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெண்கள். அதனால்தான் ஆசிரியை தினம் என்றேன்.
திவ்யா
அரசுப் பள்ளிகளில் தமிழ் மீடியத்தில் படித்து, எம்.எஸ்ஸி, பி.எட் படித்த திவ்யா +2 முடித்ததும் "டீச்சிங்தான் தன் ரூட்" என்று முடிவெடுத்து, தன் நோட்டில் 10/12 வகுப்புகளுக்கு மேத்ஸ் டீச்சர் ஆகணும் என்று இம்போஸிஷன் போல ஆயிரம் தடவை எழுதினாராம். சமச்சீர் கல்வி புத்தகங்களை முழுவதும் புரிஞ்சு படிச்சா ஆசிரியர்களும் ஆல் பாஸ்தான் என்கிறார்.

சித்ரா
தன் அப்பா, அண்ணன், கணவர் போல சித்ராவுக்கு தானும் ஆசிரியர் ஆக வேண்டும் என்பது லட்சியமானதாம். வீட்டு வேலைகள் முடிந்ததும், "சீரியல், தூக்கம், அரட்டைனு நேரத்தை வீணாக்காமல்" மகளின் 10ம் வகுப்பு பாடம் சொல்லிக் கொடுக்கும்போதே தானும் பாடம் படிச்சாராம். "120 மார்க் நிச்சயம்னு நினைச்சேன். ஆனா இப்படி முதல் மார்க் வாங்குவேன்னு சாமி சத்தியமா நினைக்கலே" என்கிறார்.

அருள்வாணி
காலேஜ் முடிந்ததும் கல்யாணம்னு அப்பா சொன்னதும், வாத்தியார் மாப்பிள்ளைதான் வேணும்னு பிடிவாதம் பண்னி ஹரிபாஸ்கரை கட்டிக்கிட்டாராம். சின்ன வயசிலே பிள்ளைகளுடன் ஸ்கேலை கையில் வைத்துக் கொண்டு டீச்சர் விளையாட்டு விளையாடுவாராம். _ஹரி சொன்னபடி பரீட்சைக்கு முன் 6 முதல் 10ம் வகுப்பு சமச்சீர் புத்தகங்களை, சொந்த பந்தங்களின் கல்யாணம் காட்சிகளுக்குக்கூட போகாமல் படிச்சது கஷ்டமே இல்லை என்கிறார்.மூவரையும் பேட்டி கண்டு, அவர்கள் சொன்னதை நாமே கேட்பது போல அதே நடையில் எழுதிய, நிருபர்கள் - ஷக்தி, முத்து, சரவணக்குமார் அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.

என்ன ஆசிரியை தினம்னு சொல்லிட்டீங்க? நல்ல ஆசிரியர் இல்லையா என்ற் நீங்கள் கேட்பது புரிகிறது.

எனக்கும் பிடிச்ச சார் ஸ்டாலின் சார்தான்.
7ம் வகுப்பு C பிரிவில் (நான் விரும்பிப் பார்க்கும் ஒரே சீரியல்) நேற்று DEO
வருகிறாரே என்று ஸ்டாலின் டென்ஷனாக இருக்க, மாணவர்கள் பயப்படாதீங்க சார், அவர் என்ன கேள்வி கேட்டாலும் நாங்கள் சரியான பதில் சொல்வோம்னு சொல்லி கட்டிப்பிடி வைத்தியம் தந்தார்கள்.
க்ரூப் போட்டோ எடுத்த போட்டோகிராபரிடம், ஸ்டாலின், ஒரே மாதிரி இல்லாமல் வித்தியாசமாக படம் எடுங்கனு சொல்லி பிள்ளைகளை அழைக்க,அவரகள் ஸ்டாலினை சூழ்ந்து கொள்ள, எல்லோர் முகத்திலும் சிரிப்புடன் வந்த போட்டோவின் அழகு நேற்று பார்த்தவர்களுக்கெ புரியும்.

Saturday, July 14, 2012

எத்தனை கோடி இன்பம் பெற்றாய் சூர்யா?


மகனை "அவையகத்து முந்தியிருப்ப" செய்த சிவகுமாரையும், "இவன் தந்தை என்னோற்றான்" என்று மக்களை சொல்ல வைத்த சூர்யாவையும் நிறைவு நாளான வியாழனன்று, ஒன்றாகப் பார்த்த நாம் எல்லோரும் வென்றோம் ஒரு கோடி இன்பம்.

ஹாட் சீட்டில் அமர்ந்து லட்சங்கள் வென்ற பல போட்டியாளர்களை அழைத்து, எல்லா வயதினரும் வந்து ஆடியன்ஸாக கலந்து கொண்டு, "என் கேள்விக்கென்ன பதில்" என்று அன்று பாடிய சிவகுமாரை தங்கள் கேள்வி மழையில் நனைய வைத்து விட்டார்கள்.

பார்வதி அம்மாள் கேட்டார், 'இத்தனை திறமை, பணிவான குணங்களுடன் உங்கள் பிள்ளைகளை எப்படி வளர்த்தீர்கள்?' அதற்கு அவர், நான் மட்டும் இல்லை, சூர்யாவின் அம்மா, பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் எல்லோருக்கும் அதில் பங்கு உண்டு என்று சொன்ன பதில், ஒரு பெண் கோவையில் தன் பள்ளி விழாவில் நீங்கள் தலைமை தாங்கி எனக்கு பரிசு தந்தீர்கள் என்று சொல்ல, அவர் எந்த பள்ளி என சொல்லி, அன்று நீ ஒரு ப்ரெளன் கலர் உடை அணிந்திருந்தாய் என்று நினைவு கூர்ந்த விதம், மேலும் அவர் சொன்ன மகாபாரத கதைகள் எல்லாம் பிரமிக்க வைத்தன.

சூர்யா, தன்னால் இந்த நிகழ்ச்சியை நடத்த முடியுமா என்று முதலில் தயங்கியபோது, விஜய் டிவி குழுவினர் கொடுத்த தைரியம், பிரபல க்விஸ் மாஸ்டர் சித்தார்த்த பாஸு தந்த பயிற்சி பற்றி எல்லாம் நன்றியுடன் சொல்லிவிட்டு, குழுவில் தன்னுடன் பணியாற்றியவர்கள் - கேள்விகள் அமைத்த ஜீனியஸ், விடியோகிராபர், மேக்கப்மேன், லைட்மேன், தனக்கு சூட் தைத்து தந்தவர், சாரதிகள், தான் சொல்ல மறந்துவிட்ட டெக்னிஷியன்கள் எல்லோருக்கும், ஒரு குடும்பத்தை பிரிந்து செல்வது போல குரல் தழுதழுக்க நன்றி கூறினார்.

திருமதி பார்வதி அம்மாள், தான் உருவாக்கிய பள்ளிக்கூடத்தை மேம்படுத்துவதற்காக, ஹாட் சீட்டில் விளையாடிய போது, ரூ 12,50,000 வென்ற நிலையில் ரூ25,00,000க்கான கேள்விக்கு விடை தனக்கு தெரிந்தும் உறுதியாக சொல்ல முடியாமல், தவறானால் ரூ3,25,000 ஆகிவிடுமே என்று ரூ12,50,000 உடன் விலகிக் கொண்டார். அவர் வெல்லத் தவறிய ரு12,50,000ஐ சூர்யா, தன் அகரம் பெளண்டேஷனிலிருந்து பார்வதி அம்மாவுக்கு, அவரது பள்ளிக்காக வழ்ங்கியது பாராட்டுக்குரியது.

திங்கள்-வியாழன் மாலை எங்கு வெளியே சென்றாலும் மணி அண்ணன்,
'9 ஆகப்போகிறது வீட்டுக்குப்போ' என்று என்னை விரட்டுவார். எனக்கும் அந்த ஹாட் சீட்டில் உட்கார ஆசைதான். இது போல ஒரு நல்ல நிகழ்ச்சி இனி வருமா?

Sunday, April 15, 2012

PIT -ல் ஏப்ரல் மாதப் போட்டி தலைப்பு 'வழி நடத்தும் கோடுகள்'.


எனக்கு உடனே நினைவு வந்தது, கையெழுத்து திருத்தமாகவும் அழகாகவும் இருக்க 'வழி நடத்தும் நாலு கோடுகள்தான். இப்போ ஸ்லேட் பலப்பம் எல்லாம் இல்லை. இலவச LAPTOP தருகிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் நோட், பேனா எதுவும் வேண்டாம் போல. மாணவர்கள் கீ போர்டில் தட்டியே பரீட்சை எழுதுவார்களோ?

போட்டிக்கு என் போட்டோ.

Friday, February 10, 2012

"ஆல் இஸ் வெல்"

"ஆல் இஸ் வெல்"

ஐந்து மாதமாச்சு வலையில் எழுதி. என்ன காரணம் சொல்ல? பிரச்னை, கவலைதான். யாருக்குத்தான் இல்லை. தினம் படிக்கும்/டிவியில் பார்க்கும் விபத்து, கொலை, ஊழல் பற்றிய செய்திகள் வேறு.சென்ற மாதம் நண்பர்களுடன் சென்னை வந்தபோது அவர்களுடன் "நண்பன்" தியேட்டரில் பார்த்தேன். மாணவன் பன்னீர்செல்வம், தன் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாததால் படிக்க முடியவில்லை, அதனால் மார்க் கிடைக்கலை என்று சொல்ல, பிரின்சிபல் வைரஸ், "தினம் சாப்பிடாமல் இருந்தியா? குளிக்காமல் இருந்தியா, ஏன் படிக்க மட்டும் முடியவில்லை?" என்று கேட்டாரே. நாமும் தினம் எல்லா வேலையும் செய்கிறோம், ஏன் ப்ளாக் எழுதக்கூடாது என்று நினைத்து விஜய் சொன்ன மாதிரி,


'ஆல் இஸ் வெல்', 'ஆல் இஸ் வெல்'


சொல்லிக் கொண்டு வந்து விட்டேன்.

"ஒய் தி கொல வெறி டா" என்று எல்லோரும் கேட்டுவிட்டார்கள். சினிமா பார்த்துதான் அப்படி செய்தேன் என்று சொன்னான். சினிமா மட்டும்தான் மக்களை கெடுக்கிறதா?
முன்னாளில் வந்த சினிமாக்களை கதை, பாடல்கள், இசை, என்று எல்லா வயதினரும் ரசிக்க முடிந்தது. வழக்கம் போல இன்றும் ஒரு பழைய பாட்டு சொல்கிறேனே:

மாதா பிதா குரு தெய்வம் - அவர்
மலரடி தினம் தினம் வணங்குதல் செய்வோம்
மாதா பிதா ........

ஓதாதிருப்பது தீது - நாம்
ஒழுங்குடன் பள்ளிக்கு செல்வோம் தப்பாது
ஓதி உணர்ந்தது போலே என்றும்
உண்மையாய் நடந்து
உயர்வோம் மண் மேலே
மாதா பிதா......
காலையில் எழுந்ததும் படிப்பு, பின்பு
காலைக் கடனையும் உணவையும் முடித்து
நூலைக் கையிலே எடுத்து பள்ளி நோக்கி
நடந்து கற்பதே சிறப்பு
மாதா பிதா......

தெய்வம் தொழுதிட வேண்டும் - நம்
தேசத்தின் மீதன்பு செலுத்திட வேண்டும்
கைத்தொழில் பழகிட வேண்டும் - மகாத்மா
காந்தியின் சொல் படி நடந்திட வேண்டும்
மாதா பிதா.....

நான் பெற்ற செல்வம் படத்தில் அக்கா ஸ்தானத்தில் தங்கள் வீட்டில் வளரும் சிறுவனை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் சிறுமி பாடும் பாட்டு. ஜி.ராமநாதன் இசையில் ஏ.பி.கோமளா பாடிய ஒரு அருமையான பாட்டு. எழுதியவர் யார் என்று நினைவில்லை.

15 வயது சிறுவன் செயலுக்கு யார் காரணம்? மாதாவா, பிதாவா, குருவா என்று எல்லோரும் பல இடங்களில் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். கல்வியே ஒரு வியாபாரம் ஆகிவிட்ட நிலையில் தெய்வம்தான் ஏதாவது செய்ய வேண்டும்.