Friday, October 1, 2010

ராமனும் பாபரும் ஒண்ணுதான்னு சொல்லிட்டாங்க.

02/10/2010


அன்புள்ள இந்தியர்களே,

எதோ எல்லா ஊர்களிலும் அங்கங்கே நான் நின்று கொண்டிருப்பதால்
நீங்கள் என்னை மறக்கவில்லை என்று அறிய மகிழ்ச்சி.

ஜனவரி மாதம் குளித்தது. மேலெல்லாம் கசகசன்னு இருக்கு.
அப்பாடா, இன்னிக்குஎன்னை குளிப்பாட்டிட்டாங்க.
ஆளாளுக்கு ஒரு சிலைஉயர மாலை கொண்டு வந்து
என் முகத்தைக் கூட பார்க்காமல் மீடியா கேமராவைப்
பார்த்தபடி போட்டுட்டு போவாங்க. அது வாடி உதிர்ந்து
நாராகும் வரை என் தோள் வலி தாங்கமுடியாது.

ஆமா, அயோத்தி தீர்ப்பு வந்துட்டதாமே. ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே.

ராமனும் பாபரும் ஒண்ணுதான்னு சொல்லிட்டாங்க.

அடுத்த வருஷம் பார்க்கலாம்.

ஹே ராம்
என்றும் உங்கள்

Thursday, September 30, 2010

அக்டோபர் 2 அன்று பிறந்த இருவர் பெயர் பெற்றவர்கள்

அக்டோபர் 1 - இன்று பிறந்த இவருக்கு கிட்டத்தட்ட 290க்கு மேல் பெயர்கள்.

எல்லா பெயர்களையும் எழுத ஆசைதான். நினைவில் உள்ள பெயர்களை எழுதுகிறேன். பாக்கியை நீங்கள் சொல்லுங்களேன்.

குணசேகரன், பரந்தாமன், மனோகரன், சுந்தராங்கதன், பார்த்திபன், விக்ரமன், அம்பிகாபதி, கட்டபொம்மன், ரஹீம்,சிதம்பரம், சுந்தரம்பிள்ளை, சண்முகசுந்தரம், கன்னையா, காளிதாஸ், பத்மநாபன், ரெங்கன், பாபு, பரதன், கோபிநாத், ப்ரேம்நாத், ரெங்கதுரை,

சில சந்தர்ப்பங்களில் ஒரு மூன்று மணி நேரத்தில் இரண்டு, மூன்று, நான்கு, ஏன் ஒன்பது பெயர்கள் கூடப் பெற்றிருக்கிறார். அப்பா விழுப்புரம் சின்னையாவும் அம்மா ராஜாமணி அவர்களும் இவருக்கு இட்டது பிள்ளையார் பெயர்.

21/07/2001ல் மறைந்த இவர் பிறந்தநாளை தமிழ்நாடு முழுதும் இன்று நினைவு கூர்ந்து விழா நடக்கும்.

Monday, September 27, 2010

கலைஞருக்கு நன்றி

சென்ற மாதம் நானும் மகன் சோமுவும் திருச்சிக்கு காரில் சென்றோம். நால்வழி சாலையானதும் வழியில் எல்லா ஊர்களிலும் பைபாஸ் ஆனதால் தூரம் குறைந்தது போனது. மேலும் புதுப் புது கார்கள் எல்லாம் 140 - 160 கிமீ வேகத்தில் செல்கின்றன. பைபாஸ்ஸில் ஊர்களை ஒட்டி மாற்று வழி தெரிந்து கொள்ள முடியாமல் சில வண்டிகள்/பஸ் கூட வழி மாறி நாம் செல்லும் இடது லேனில் எதிராக வருகின்றன.

மேலூர் தாண்டி சிறிது தூரத்தில் வலது லேனில் சென்ற ஒரு மஹிந்திரா ஸ்கார்பியோ கவிழ்ந்து கிடந்தது. அருகில் ஒருவர் கீழே விழுந்திருந்தார். காரின் உள்ளே எத்தனை பேர் என்று தெரியாது. கூட்டம் சேரத் தொடங்கியது. கொஞ்சம் முன்னேதான் நடந்திருக்கும். சோமு உடனே தன் செல்லில் 108 ஆம்புலன்ஸ்க்கு ஃபோன் செய்தான். எந்த இடம் என்று சொல்ல அந்த ஊர் பெயர் தெரியவில்லை. லைனில் இருக்கும் போதே மாங்குளத்துப்பட்டி போர்டு பார்த்தோம். சோமுவின் பெயர் விலாசம் எல்லாம் கேட்டதும் ஆம்புலன்ஸ் அனுப்புகிறோம் என்றார்கள்.

சில வினாடிகளிலேயே சோமுவுக்கு ஃபோன். "நீங்கள் சொன்னது போல எங்களுக்கு இன்னொரு கால் வந்தது. ஆம்புலன்ஸ்க்கு தகவல் சொல்லி விட்டோம்" என்றார். என்ன ஒரு நெட்வொர்க் பாருங்கள். அடுத்த நிமிடத்தில் ஆம்புலன்ஸ் எங்கள் எதிரே விரைந்தது.
விபத்துகளில் காயமடைந்தோருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைத்தால் தான் உயிர் காக்க முடியும். சன் டிவியில் அரசு விளம்பரத்தில் வரும் பெண் சொல்வாளே? அது போல நானும் மனதில் "கலைஞருக்கு நன்றி" சொன்னேன்.