Wednesday, December 31, 2008

அடுத்த 12 மாதங்கள், 52 வாரங்கள், 365 நாட்கள்

இவைதான் புது வருடம். என்ன வித்தியாசம்? நாளை காலையும் சூரியன் வழக்கம் போல கிழக்கில்தான் உதிக்கும். பால்காரர் வருவார், பேப்பர் வரும். டிவியில் குடியரசு தலைவி, பிரதமர், முதலமைச்சர், நடிகநடிகையர், மற்றும் பலர் வாழ்த்து சொல்வார்கள். இன்று இரவு 12 மணி வரை கொண்டாட்டம் என்று கூத்து நடக்கும். நாமும் பார்க்கும் எல்லோருக்கும் ஹாப்பி நியூ இயர் சொல்வோம். ஏன் வருடம் முழுதும் தினம், ஹாப்பி டுடே சொல்லக்கூடாது.

புத்தாண்டு தீர்மானம் என்று ஏதாவது நினைத்து மறுநாளே மறந்து விடுவோம். புது டைரி வாங்கி மார்ச் மாதம் வரை எழுதுவோம்.

என் தீர்மானங்கள்:

தினம் முடியாவிட்டாலும் வாரம் ஒரு பதிவு எழுத வேண்டும். விசேஷ வீடுகளில் மட்டுமே சந்திக்கும் உறவினர்கள் வீட்டுக்கு மாதம் ஒரு முறையாவது சென்று வரணும். கடிதம் எழுதும் பழக்கம் அடியோடு போய்விட்டது. நிறைய எழுதணும். நம்மிடம் வேலை பார்ப்பவர் யாரும் சொன்னதை செய்யவில்லை அல்லது தப்பாக செய்தாலோ கோபப் படக்கூடாது.இப்போது ஆள் கிடைப்பதே அரிது. தினம் குட் மார்னிங் போல ஹாப்பி டுடே சொல்லணும். இந்த தீர்மானங்களை நாளை மறந்துவிடக் கூடாது

ஹாப்பி டுடே

Monday, December 29, 2008

A reque$t and an ackNOwledgement
One day an employee sends a letter to his boss asking for a raise in his salary!

Dear Bo$$.
In thi$ life, we all need $omething
mo$t de$perately. I think you $hould
be under$tanding the need$ of u$.
We are worker$ who have given
$o much $upport including
$weat and $ervice
to your company.
I am $ure you will gue$$
what I mean and re$pond $oon.

Your$ $incerely,

The next day the employee received this letter of reply.

Dear,
I kNOw you have been working very hard.
NOwadays NOthing much has changed.
You must have NOticed that our company
is NOt doing NOticably well. NOw the
newspapers are saying the world’s leading
ecoNOmists are NOt sure if the United States
may go into aNOther recession.
After the NOvember presidency elections
things may turn bad. I have NOthing more
to add NOw. You kNOw what I mean.

Your boss.


courtesy: "Coral Voice" - weekly bulletin of Rotary Club of Pearl City,

Thoothukudi

Monday, December 15, 2008

P I T டிஸம்பர் போட்டியின் தலைப்புக்கேற்ற படம்

நிழல்கள்

இவர் படம் கிடைக்காதா என்று
எல்லா பத்திரிகைகளையும்
புரட்டிக்கொண்டிருந்தேன்.
மாலை K டிவியில் சிவசக்தி
படத்தில் ரவியும் இருந்தார்.
உடனே என் செல் காமெராவில்
க்ளிக் பண்ணி பதிந்து விட்டேன்.
இது நான் எடுத்த படம்தான்.
அதனால் போட்டிக்கு என் என்ட்ரி.
சகாதேவன்

Saturday, December 13, 2008

பெரிய திரையிலும் 2 மணி நேர கர்நாடக இசை.

"மார்கழி ராகம்" என்று ஒரு 2மணி நேர திரைப்படம் டிசம்பர் 18 அன்று உலகெங்கும் ரிலீஸாகுமாம். கர்நாடக இசைக்கென்று ஒரு தனி டிவி சானல் வராதா என நான் நினைத்துக் கொண்டிக்கையில் சினிமாவே வருகிறது என்று அறிய மகிழ்ச்சி.

விகடன் 10/12/08 இதழில் படித்தேன். இயக்குநர் ஜெயேந்திரா வழக்கமான சபா கச்சேரி போலவே பரிச்சயமான ராகங்களில் ஜனரஞ்சகமான பாடல்களுடன் தயாரித்திருக்கிறார்.
முன்னெல்லாம் எல்லா ஊர்களிலும் சபா கச்சேரிகள் எல்லா மாதங்களிலும் நடக்கும்.

பாடகர்கள் எல்லோரும் சென்னையில் இருப்பதாலும் அவர்கள் கேட்கும் சன்மானத்தால் சபா செயலாளர்களால் நிகழ்ச்சி நடத்த முடிவதில்லை. ஸ்பான்சரும் கிடைப்பதில்லை. டிவியில் கூட தொடர்ந்து நிகழ்ச்சி பார்க்க முடிவதில்லை. இடையிடையே கமெர்ஷியல், அடுத்த சானலில் என்ன என்று பார்க்கும் ஆர்வத்தால் இசையை ரசிக்க மாட்டோம். இப்போதெல்லாம் எப்போ கரண்ட் கட் ஆகும் தெரியாது. சினிமா என்றால் அப்படி இல்லை.

பாம்பே ஜெயஸ்ரீயும் டி,எம்.கிருஷ்ணாவும் பாடியிருக்கிறார்கள். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவாம். தூர்தர்ஷ்னில் தம்புராவை மேலிருந்து கீழ் வரை அடிக்கடி காட்டுவார்களெ, அது போல் இல்லாமல், மிக அழகாக பாடகர்களையும், பக்க வாத்தியக் காரர்களின் முகபாவம் கைவீச்சு எல்லாம் ரசிக்கும் படி படமாக்கியிருப்பார்.

18 அன்று நெல்லையில் எந்த தியேட்டரில் என்று பார்த்து அன்றே பார்த்துவிட வேண்டும் என்றிருக்கிறேன்.

Wednesday, December 3, 2008

இந்த காரைப் பார்த்திருக்கிறீர்களா?1948ல் ஆஸ்டின் A 40 என்று ஒரு அழகிய கார் வந்தது.

49 - 50ல் என் சித்தப்பா ஒரு புது கார் வாங்கினார். அவர் மத்தியானம் தூங்கும்போது என் கஸின் அதை எடுத்துக்கொண்டு வருவான். நாங்கள் இருவரும் டிரைவர் ரவீந்திரனுடன் ஹைகிரொளண்ட் சென்று ஓட்டிப் பழகினோம். ஊரில் அது போல வேறு யாரிடமும் இருந்ததாக நினைவில்லை.

"காஞ்சனா" என்று ஒரு படம் வந்ததே அதில் ஒரு பாடல் காட்சியில் இந்த பெடல் கார் வரும். A 40 காரே குட்டி போட்டது போல அத்தனை அழகு. சித்தப்பாவும் நீண்ட நாள் தன் A40 காரை வைத்திருந்து பின் ஸ்பேர் சாமான்கள் கிடைக்காததால் விற்று விட்டார். அதன் பின் நான் அந்த காரை மறந்துவிட்டேன்.

நேற்று தினமணி நாளிதழில் செய்தி- "பெடல் கார்- உலகப்போருக்குப் பிறகு ஆஸ்டின் நிறுவனம் குழந்தைகளுக்காக வடிவமைத்த பெடல் கார் 'J40' தற்போது லண்டனில் உள்ள அருங்காட்சியத்தில் விற்பனைக்கு வந்துள்லது. ரூ 1.5 லட்சம் வரை இது ஏலம் போகும் என எதிபார்க்கப்படுகிறது".

ஆர்வத்துடன் கூகிளில் ஆஸ்டின் J 40 என்று அடித்து ப்ரொளஸ் செய்தால் கிடைத்த தகவல்:

1948 ஆஸ்டின் A 40 காரை அப்படியே ஸ்கேல் மாடலில் (நீளம் 5' 3"; அகலம் 2' 3 1/2" ; உயரம் 1' 10" ) 1949 லிருந்து 1971 வரை தயாரிப்பில் இருந்ததாம். அமெரிக்கா, டென்மார்க், கனடா நாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதியானதாம். ஆரம்பத்தில் இதன் விலை 27 பவுண்டு.


இன்று ஏலத்தில் என்ன விலை போகுமோ?

Friday, November 14, 2008

தினம் தினம் ஒரு தினம்

ஆசிரியர் தினம் அன்று ஒரு பதிவு எழுதினேன். இன்று குழந்தைகள் தினம். இடையில் தினம் தினம் நான் எழுத வேண்டும் என்று நினைத்தாலும் முடியவில்லை.

ஒரு தினம் நெட் வேலை செய்யவில்லை. பி.எஸ்.என்.எல் க்கு போன் செய்து, மாலையில் சரியாகிவிடும் என்று நினைத்தேன். ஒரு வாரம் தினம் தினம் போன் செய்தால், "முந்திய வாரம் பெய்த இடி மழையால் பல வீடுகளில் மோடம், டிவி எல்லாம் பழுதாகி விட்டது. உங்கள் மோடத்தை செக் பண்ணுங்கள்" என்றார்கள்.

மறுதினம் ரூ 1600 கொடுத்து புது மோடம் வாங்கினேன். அந்த தினம் தான் சீர்காழி அவர்கள் பாடியது போல என் சுபதினம் என்று எண்ணினேன்.

ஆனால் தினம் ஏதாவது ஒரு முக்கியமான வேலையாக வெளியே செல்ல வேண்டி வந்துவிடும். தினம் லேட்டாக வந்து, மறுதினம் எழுதலாம் என்று தூங்கிவிடுவேன்.

இந்த வாரம் நாட்டின் முதல் கல்வி அமைச்சர், மெளலானா அபுல் கலாம் ஆஸாத் அவர்கள் ஞாபகம் வந்து கல்வி தினம் என்றார்கள். நவம்பர் 14 ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த தினம். பல ஆண்டுகளாக குழந்தைகள் தினம் ஆக கொண்டாடுகிறோம். இன்று உலக டயபட்டீஸ் தினம் கூட.
நவம்பர் 15 அன்று என்ன தினம்? ஆண்டின் 320 வது தினம்தான். எண்ணிப்பார்த்து 319 வது தினம்தானே என்று சொல்லிவிடாதீர்கள். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 29 தினங்கள்.

Thursday, September 4, 2008

செப்டம்பர் 5 - ஆசிரியர் தினம்

ஹாப்பி நியூ இயர், ஹாப்பி தீபாவளி, ஹாப்பி பொங்கல் என்று வாழ்த்துவது போல ஹாப்பி டீச்சர்ஸ் டே என்று சொல்ல முடிகிறதா?மாணவ மாணவிகளும் ஹாப்பியாக இல்லை, டீச்சர்களும் ஹாப்பியாக இல்லை. மாணவர்களுக்கு டைட் சிலபஸ், ஹோம் ஒர்க், விளையாடக்கூட நேரமில்லாமல் படிப்பு, கம்ப்யூட்டர், கிடைக்கும் நேரத்தில் டிவி.
டீச்சர்கள், பைக்/கார் வாங்கியதில் ட்யூ கட்டவும், வீடு வாங்க/கட்ட பெற்ற லோனுக்கு ட்யூ கட்டவும், என்ன சம்பளம் வந்தாலும் ப்ரெஷர்.மேலும், டிவி/சினிமா பார்த்து ஒழுக்கம் கெட்டு வரும் மாணவர்கள், மாணவிகளிடம் தவறாக நடக்கும் ஆசிரியர்கள் பற்றி செய்திகள் படிக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
டாக்டர் ராதாகிருஷ்ணன் 1962-ல் நாட்டின் ஜனாதிபதியாக பதவி ஏற்றதும் அவர் பிறந்தநாளான 5/9ஐ கொண்டாட அனுமதி கேட்டார்களாம். அதற்கு அவர், என் பிறந்தநாள் என்பதைவிட ஆசிரியர் தினம் என்று சொல்லுங்கள் என்றாராம். தான் பார்த்து வந்த தொழில் மீது அவர் காட்டிய மரியாதையால், ஆசிரியர்களுக்கு அவர் தந்த கெளரவம் அது.
அரசு இன்று நல்லாசிரியர் விருது வழங்கி ஆசிரியர்களை பாராட்டினாலும், ஒரு பெண் கல்வி அதிகாரி பள்ளி வந்து சம்பந்தமில்லாத கேள்விகள் மாணவிகளிடம் கேட்டு சரியான பதில் சொல்லவில்லையென்று இளம் பெண் ஆசிரியையை மாணவிகள் முன்னிலையில் கன்னா பின்னா என்று திட்டியதால் அந்த ஆசிரியை தற்கொலை செய்து கொண்டார் என்பது சமீபத்தில் வந்த செய்தி.
அரசு இலவச டிவி, இலவச சைக்கிள் வழங்கி விளம்பரம் தேடுவதை விட்டு, வியாபாரமாகி விட்ட கல்வியை முறைப்படுத்தி வருங்கால இளைஞர்களை நாட்டின் சிறந்த குடிமகன்களாக-ஸாரி சிறந்த பிரஜைகளாக- உருவாக்க வேண்டும்.
பள்ளி தலைமை ஆசிரியர்கள் இன்று அசெம்பிளியில் (சட்டசபையில் இல்லீங்க, பள்ளி தொடங்குமுன் ப்ரேயர் எல்லாம் சொல்வார்களே அப்போ) மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் ஆசிரியர் தினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி மீண்டும் ஒரு நல்லுறவை ஏற்படுத்த வேண்டும்

Friday, August 29, 2008

நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது...

நேற்று மாலை நான் எங்கள் வீட்டு வரவேற்பு அறையில் மேலே, கீழே, ஷெல்ஃபில், சோபாவுக்கு அடியில் எல்லாம் தேடிப் பார்த்தேன்.
தாமரை: என்ன தேடுகிறீகள், ரூபாய் தவற விட்டீர்களா?
நான்: எங்காவது கேமராக்கள் ஒளித்து வைக்கப் பட்டிருக்கிறதா என்று பார்க்கிறேன்.
தாமரை: கேமராவா? என்ன சொல்கிறீர்கள்?
நான்: டிவியில் அந்த ஆளுக்கு நான் என்ன செய்கிறேன் என்று எப்படி தெரியும்? அடிக்கடி,
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கே டிவி
என்கிறானே.

Sunday, August 24, 2008

கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்.

ஆங்கில எழுத்து A கொண்ட எண்ணை கண்டுபிடிக்க நீங்கள் நிறைய எண்ணிப் பார்க்க வேண்டும்.
விடை, நம்ப முடியவில்லையா? one thousand தான்.

2. சைபரை விட பெரிய எண் எழுதிக் கொள்ளுங்கள். மூன்றால் பெருக்குங்கள். ஒன்றைக் கூட்டுங்கள். அதை மூன்றால் பெருக்குங்கள். இப்போது நீங்கள் நினைத்த எண்ணைக் கூட்டுங்கள். விடை எப்போதும் மூன்றில் முடியும். அந்த மூன்றை அடித்துவிடுங்கள். நீங்கள் நினைத்த எண்ணே மிஞ்சும்.

3. ஏதாவது மூன்று எண்களை அதன் வரிசையில் எழுதிக் கொள்ளுங்கள். அதை ரிவெர்ஸ் ஆர்டரில் எழுதுங்கள். பெரிய எண்ணிலிருந்து சிறியதைக் கழியுங்கள். விடை எப்போதும் 198 தான் வரும். உ-ம்:- 123 321. முயன்று பாருங்கள்.

4. ஒரு பெருக்கல் கணக்கு:

1 1 1 1 1 1 1 1 1
x 1 1 1 1 1 1 1 1 1செய்து பாருங்களேன். நல்ல பொழுது போகும்

Saturday, August 16, 2008

நான் 1941 மாடல். நீங்க?

டாக்டர் : ஒரு சின்ன வேலைக்கா இவ்வளவு சார்ஜ்?

கார் மெக்கானிக் : நீங்கள் ஒரே மாடலில்தான் வேலை செய்கிறீர்கள். ADAM மாடலுக்கும் எனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் நான் அப் டு டேட் ஆக இருக்க எவ்வளவு படிக்கணும். தினம் ஒரு புது கார் வந்துகொண்டிருக்கிறது. அதான்.

சில நாட்கள் கழித்து.

மெக்கானிக்
: என்ன டாக்டர், ஹார்ட் ஆபரேஷனுக்கு இவ்வளவு ஃபீஸா? நான் கார் இன்ஜினைப் பிரித்து பிஸ்டன், வால்வ் எல்லாம் மாற்றினாலும் இவ்வளவு ஆகாதே.

டாக்டர் : நான் ஹார்ட் வேலை செய்து கொண்டிருக்கும் போதே செய்கிறேன். நீ இன்ஜின் ஒடிக்கொண்டிருக்கையில் பிஸ்டன் மாற்றுவாயா?

Tuesday, August 5, 2008

"ப்ரிட்டிஷ் முறையில் அமைந்துள்ள சட்டத்தையும், நடைமுறைகளையும்.....

...... இந்திய நிலைமைக்கும், வழிமுறைகளுக்கும் ஏற்றார்ப்போல மாற்றி அமைக்க வேண்டும். சட்டம் சாதாரண மனிதன் கூட படித்து புரிந்து கொள்ளுமாறு இருக்க வேண்டும்"

என்று 04/08/1958 அன்று, ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் கூறினார்.
சுப்ரீம் கோர்ட்டில் ஒரு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தபோது அவர் மேலும் சொன்னார்,

"நாட்டின் உடனடி தேவை, தாமதமில்லாமல் தீர்ப்பு வழங்குதலும், கோர்ட் செலவு அதிகமில்லாமலும் இருக்க வேண்டும். நாட்டின் ஒரு நிரந்தர உறுப்பாக விளங்கும் சட்டமுறைக்கும், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கும் எல்லா ஹைகோர்ட் நீதிபதிகளுக்கும் என் பாராட்டுக்கள்."
நன்றி- தி ஹிண்டு, 04/08/08

ஐம்பது ஆண்டுகள் ஆகியும் எந்த மாறுதலும் ஆனதாக தெரியவில்லையே. நாட்டின் ஒரு முதல்வருக்கெ அரசு நியமித்த சுப்ரீம் கோர்ட் வக்கீல்கள், உரிய காலத்தில் தகவல்
தராததால் சங்கடம்.

பொல்லாத் தனத்தை என்ன சொல்வேன் கண்ணா

இன்று கே டிவி பார்த்தீர்களா. பழைய படங்களை மிஸ் பண்ணாதீங்க. நல்ல பாடல்கள் கேட்கலாம். ஏவிஎம்மின் பெண் படம். அதில் எல்லா பாடல்களுமே நன்றாக இருக்கும். சுதர்சனம் இசை.

இந்த பாட்டை கேளுங்களேன் ஸாரி படியுங்கள்.

பொல்லாத் தனத்தை என்ன சொல்வேன் கண்னா
இனி போதும் மலர் கண்ணனே

புல்லாங்குழலில் உள்ளம் எல்லாம் மயக்கியே
புல்லாங்குழலில் உள்ளம் எல்லாம் மயக்கி
கண்ணைப் பொத்தி மெல்ல அழ வைக்காதடா
உனது பொல்லாத் தனத்தை......

பத்து ஜனங்கள் நடுவிலே உன்னை பாலனென்று தூக்கி எடுத்தால்
கட்டி முத்தமிட்டு வம்புகள் செய்வாய்
வெட்கக் கேட்டினை எவரிடம் சொல்வேன்

உன்னை காணாதிருந்தால் கணம் ஓர் யுகமாகுதே
காணாதிருந்தால் கணம் ஓர் யுகமாகுதே


கட்டிப் போடுவேன், எந்தன் அருகில் விரைந்து வருவையே
உன்னை கட்டி போடுவேன் எந்தன் அருகில் விரைந்து வருவையே

உனது பொல்லாத் தனத்தை என்ன சொல்வேன் கண்ணா
இனிபோதும் மலர் கண்ணனே.

சிட்டை ஸ்வரங்களுடன் டி.எஸ்.பகவதி அழகாக பாடியிருப்பார்.
அஞ்சலி தேவி பாட ஜெமினி கணேசன் வீணை வாசிப்பது போல காட்சி.

பாடல்களை ரீமிக்ஸ் என்று கெடுப்பதை விட அப்படியே இன்றைய பாடகி/பாடகர்களை பாட வைத்து காட்சிகள் எடுத்தால் எத்தனை நல்ல பாட்டுக்கள் கேட்கலாம்.

Saturday, August 2, 2008

கெட்டிக்காரன் யார்? ரோல் பிலிம் கேமராவா, டிஜிட்டல் கேமராவா?

பாக்ஸ் கேமரா, ஃபோல்டிங் கேமரா, ட்வின் லென்ஸ் ரிஃப்ளெக்ஸ், 35எம்.எம் கேமரா, ரேஞ்ச் ஃபைண்டர், எக்ஸ்போஷர் மீட்டர்,, சிங்கிள் லென்ஸ் ரிஃப்ளெக்ஸ், வைட் ஆங்கிள்/டெலிபோட்டோ லென்ஸ், ஜூம் லென்ஸ், இப்படி எல்லாம் புதுப் புது
கண்டுபிடிப்புகளுடன் கேமரா சென்ற நூற்றாண்டில் வளர்ச்சி அடைந்திருக்கிறது.
என்றாலும் அன்று போட்டோ நன்றாக அமைந்தது "க்ளிக்" செய்த
கெட்டிக்காரர்களால்தான்.

அப்படி ஒரு கெட்டிக்காரர் என் பெரிய அண்ணன்.

காஸ்ட்லி ஹாபி என்று கருதப்பட்ட அந்நாளில் தன் ரோலில் ஒரு ஃப்ரேம் கூட வீணாகாமல் அழகான படங்களை தன் Rolleiflex f 2.8 கேமராவில் எடுப்பார். 35எம் எம் கேமராவில் 36 படம் எடுக்கும் வரை காத்திருக்கக் கூடாது, அதற்காக படங்கள் எடுத்துத் தள்ளக் கூடாது என்றும் நெகட்டிவ் சின்னதானதால் என்லார்ஜ்மெண்ட் நன்றாக இராது என்பார். அதனால்
6cm*6cm ஸ்கொயர் நெகடிவ் தரும் 120 ரோல் தான் அவருக்குப் பிடிக்கும். ரோல் பிலிமில் இல்லாத மெகாபிக்ஸலா? தன் படங்களுக்கு பெரிய என்லார்ஜ்மெண்ட் போட்டு வாங்குவார்.

எங்கள் வீட்டு கல்யாணம், பிற விசேஷங்களில் எல்லாம் போட்டோ எடுத்து, ரோலை தானே டெவலப் செய்வார். ப்ரிண்ட்/என்லார்ஜ்மெண்ட் மட்டும்தான் ஸ்டூடியோவில்.
திருநெல்வேலியில் அன்று பிரபலமான ஸ்டூடியோ அதிபர்கள் எல்லோரும் அண்ணனிடம் கருத்துக் கேட்டு தங்கள் போட்டோகிராபர்களிடம் சொல்வார்கள். எங்கள் வீட்டில் எல்லோருக்கும் போட்டோ எடுக்க கற்றுத் கந்தார். எனக்கு அவர் முதலில் வாங்கித் தந்தது கோடக் ப்ரொளனி பாக்ஸ் கேமரா. 620 ரோலில் 6*9cm சைஸில் 8 படம் எடுக்கும்.

போட்டோகிராபியை தொழிலாக எண்ணியிருந்தால், தீரஜ் செளடா (பம்பாய்), சந்தாமியான் (மெட்ராஸ்) போல புகழ் பெற்றிருப்பார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் 1960களில் நடந்ததே (வருஷம் நினைவில்லை,1961- 65 இருக்கலாம்) அப்போது கும்பாபிஷேக சிறப்பு மலரை கோவில் போட்டோக்களுடன் வெளியிட, குழுவின் தலைவர் திரு.பி.டி.ராஜனிடம், கோவில் நிர்வாகத்தில் இருந்த திரு.பழனி(எங்களூர்க்காரர்) அண்ணன் பற்றி அவரிடம் சொல்ல, பி.டி.ஆரின் அழைப்பின் பேரில், இரண்டு கேமராக்கள், ஃப்ளட் லைட், ஃப்ளாஷ், B&W/கலர் ரோல் பிலிம்களுடன் golfer உடன் செல்லும் caddie போல அண்ணனுடன் நானும் சென்றேன்.
அன்று அவர் எடுத்த படங்களில் என்னிடம் உள்ள சிலவற்றைப் பாருங்கள்.


அவருடைய கேமராக்கள்- 8எம் எம் மூவி கேமரா கூட உண்டு- நெகட்டிவ் ஆல்பம். போட்டோ ஆல்பம் எல்லாவற்றையும் அண்னன் மகன் பத்திரமாக வைத்திருக்கிறான்.

இன்று எத்தனை டிஜிட்டல் கேமராக்கள், எத்தனை மாடல்கள். அவை என்னவெல்லாம் செய்கின்றன? ஷட்டர் ஸ்பீட், அபெர்ச்சர் எல்லாம் செலக்ட் செய்கிறது, பட்டனை தள்ளினால் ஜூம் ஆகிறது. பிலிம் ஸ்பீட்(I S O)லைட்டைப் பார்த்து அதுவே எடுத்துக்கொள்கிறது. படத்தை நாம் உடனே பார்த்துக்கொள்ளலாம். ரோல் பிலிம் வாங்க வேண்டியதே இல்லை. பாட்டரி சார்ஜ் நிலையில் 300 படங்கள் எடுக்கலாம்.

அன்று குரூப் போட்டோ எடுக்க நேர்கோடாக seat போட்டால் ஒரங்களில் உள்ளவர்கள் முகம் ஃபோகஸ் ஆகாது என்று வில் (arc) வடிவில் seat போடுவார்கள். கேமராவை tripod-ல் மாட்டி, போட்டோகிராபர் தன் மேல் கருப்புதுணியை போர்த்திக்கொண்டு, க்ரவுண்ட் க்ளாஸில் ஃபோகஸ் செய்து, ப்ளேட் பிலிமை சொருகிவிட்டு, லென்ஸில் அபெர்ச்சர் செட் பண்ணி, ஸ்மைல் சொல்லி, கையால் லென்ஸ் cap-ஐ எடுத்து மூடிவிடுவார்(ஷட்டர் ஸ்பீட் லென்ஸில் கிடையாது). அந்த படங்கள் இன்னும் எவ்வளவு அழகாக இருக்கிறது?

புதிய டிஜிட்டல் கேமரா சில, முகங்களை தனித்தனியாக ஃபோகஸ் செய்து விடுமாம். யாராவது அசைந்தால் கூட ஷேக் இல்லாமல் படம் தருமாம். சிரிப்பதை பார்த்து தானே க்ளிக் செய்து விடுமாம். கம்போஸ் செய்வது மட்டும் தான் நம் வேலை.

அப்படியானால் இப்ப டிஜிட்டல் கேமராதானே கெட்டிக்காரன்?

அண்ணன் இருந்தால் இன்று எந்த டிஜிட்டல் கேமரா வாங்குவார் என்று எண்ணினேன். கூகிளில் பார்த்தபோது எனக்கு ஆச்சரியம். அவருக்கு பிடித்த ட்வின் லென்ஸ் ரிஃப்ளெக்ஸ், ஸ்கொயார் ஃபார்மட் - ரோலீ பிரியர்களுக்காகவே செய்தது போல
rollei MINI DIGI உள்ளங்கை அளவில் இருக்கிறது. இதுதான் அவருக்கு ரொம்ப பிடிக்கும்.இந்த மினிடிஜி, அண்ணனுக்கு என் சமர்ப்பணம்

Thursday, July 31, 2008

எதிலும் கையெழுத்திடும் முன் நன்றாக படித்துப் பாருங்கள்

திரு.கே.வைத்தியநாதன் ,தி.நகர், அப்போலோ டைம்ஸ் (1.8.08) நாளிதளில் எழுதியிருக்கிறார்.
சில வருஷங்களுக்கு முன்னால் லிப்டன் இந்தியா லிட். தங்கள் சேல்ஸ்மன் வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு டீ தூள் சப்ளை செய்யாததால் அவர்கள் எல்லோரும் ப்ரூக் பாண்ட்க்கு மாறிவிட்டார்கள் என்று அவர் மீது ஒரு குற்றச்சாட்டு எழுதியதாம். இந்த வழக்கில் வைத்தியநாதனின் சகோதரர், திரு.கே. சிவராமகிருஷ்ணன் குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் ஆஜரானாராம்.
குற்றச்சாட்டு: "சேல்ஸ்மன் பாண் ஷாப்களுக்கு டீ தூள் சப்ளை செய்யவில்லை. அதனால் அவர் தண்டிக்கப்பட வேண்டும்"
தன் வாதத்தில் வக்கீல், சேல்ஸ்மன் பாண் (PAWN)ஷாப்களுக்கு செல்லாததில் தவறே இல்லை. அவருடைய வேலை டீ தூள் தரவேண்டியது பான் (PAN)ஷாப்களுக்குத்தான், என்று கூறினாராம். பிறகென்ன. ஒரு எழுத்துப் பிழையால் சேல்ஸ்மன் குற்றவாளி அல்ல என்று தீர்ப்பானதாம்.

(நன்றி: அப்போலோ டைம்ஸ்- 1 ஆக.08 நாளிதழ்)

Tuesday, July 22, 2008

கல்லைப் பிளந்து சொத்தைப் பிரித்தாள்....

...பிளவுக்கல் இசக்கி அம்மன். ஒருவருக்கு தன்னுடைய மூன்று பிள்ளைகளூக்கும் சொத்து எப்படி பிரித்து தருவது என்பதில் சிக்கல். காரணம் அவருக்கு இரண்டு மனைவிகள். மூத்தவளுக்கு ஒரு மகனும் இளையவளுக்கு இரண்டு மகன்களும். மூத்தவள் சொத்தை பாதியாக பிரித்து தன் மகனுக்கு தர வேண்டும் என்றாளாம். இசக்கி அம்மனிடம் வேண்டிக்கொள்ள, அம்மன் அவர் கனவில் வந்து, கோவில் அருகே முழுதாக இருக்கும் பாறையை காலையில் சென்று பார் என்று சொன்னாளாம்.பார்த்தால், பாறை 1/3 அளவிலும் 2/3 அளவிலும் பிளவு பட்டு இருந்தது. அம்மன் ஆணை படி பிள்ளைகளுக்கு தந்தாராம். பத்தமடைக்கு தெற்கே 10 கிமீ தொலைவில் உள்ள இந்த இசக்கி அம்மன் தான் எங்கள் குலதெய்வம். சின்ன வயதில் அப்பா, அம்மாவுடன் சென்றிருக்கிறேன்.
நேற்று ஆடிச் செவ்வாய். ரொம்ப நாட்களூக்குப் பிறகு நான், தாமரை(என் மனைவி), என் அண்ணன், மதினி எல்லோரும் சென்றோம். கோவிலில் முன் போல அடுப்பு கட்டிகளில்லாமல் அடுப்பே வைத்திருந்தார்கள்.

மதினிஅதிலும் அட்வான்ஸ். காஸ் ஸ்டவ் கொண்டு வந்திருந்தார்கள். சர்க்கரைப் பொங்கல் இட்டு, புது சேலை, மாலை எல்லாம் சமர்ப்பித்து வணங்கி வந்தோம்.

Wednesday, July 16, 2008

பண வீக்கம்

Inflation என்றால் கார் டயரின் டியூபில் காற்றடிக்கும் போது வீங்கி விடுமே அது போல பண வீக்கம் என்றால் 2ரூ, 5ரூ நாணயங்கள் பர்ஸில் போடமுடியாமல் வீங்கி(பெரிதாகி)விடுமோ என்று நினைத்தேன். நேற்று எங்கள் ரோட்டரி க்ளப்-ல் பேசிய, நெல்லையில் பிரபல ஆடிட்டர் சொன்னார்:

முன்பு நல்லெண்ணை தேங்காய் எண்ணையை விட விலை குறைவு. இன்று? காரணம் எள் கிடைப்பதில்லை. கிராமங்களில் எல்லாம் இளைஞர்கள் இல்லை. பிழைப்பு தேடி, வேறு வேலைக்காக நகரங்களுக்கு போய் விட்டார்கள். அதனால் விவசாயமே குறைந்துவிட்டது. நகரிலும் எந்த வேலையென்றாலும் கூலி பயங்கரமாக உயர்ந்து விட்டது. கொத்தனார் வேலைக்கு தினக்கூலி இன்று 350ரூ (இலவசக்கொத்தனார் இந்த பதிவை படித்தால் என்னா சொல்வார்).

நகரங்களிலும் இளைஞர்கள் ஐ.டி படித்ததால் வெளிநாட்டுக்கும் மெட்ரோபாலிட்டன் சிடிக்கும் குடி பெயர்ந்துவிட்டார்கள். தனியாக வசிக்கும் பென்ஷனில் வாழும் பெற்றோர்கள் எந்த ரிப்பேர் வேலைக்கும் தங்கள் ஒரு மாத பென்ஷனையே கூலியாகத் தரவேண்டியுள்ளது.

அரசு எந்திரம் பழுதடைந்து கெட்டுப் போய்க் கொண்டிருக்கிறது. எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு ஆகும் செலவுக்காக தொழில் நிறுவனங்களையே நம்பியிருக்கின்றன. நாட்டில் பதுங்கி இருக்கும் கருப்புப் பணம் அப்போதுவெளிவருகிறது. பட்ஜெட்டும் அடுத்த தேர்தலை மனதில் கொண்டே தயாராகிறது.

சம்பளம் குறைய வேண்டுமென்று பெரிய நிறுவனங்கள் ஆள் குறைப்பு செய்து, கட்டிட பராமரிப்பு, சுத்தம் செய்தலுக்கெல்லாம் வருட காண்ட்ராக்ட் முறையில் ஒரு அமைப்புக்கு விட்டு விடுகிறார்கள். இதில் கிடைக்கக்கூடிய தொகையைப் பார்த்த அரசு, சர்வீஸ் டாக்ஸ் என்று கொள்ளை அடிக்க ஆரம்பித்து விட்டது. அதை ரோடு போடும் காண்ட்ராக்ட்காரர்களிடமும் வசூலிக்க முனைகிறது. இதனால் 1 கோடி ரூ காண்ட்ராக்ட் எடுப்பவர் 36 லட்சம் வரை கட்டவேண்டும். அவர் போடும் ரோடு எப்படி இருக்கும்?

ரிலயன்ஸ் கச்சா எண்ணை இறக்குமதி செய்து, சுத்திகரித்து, பெட்ரோல்/டீஸல் ஏற்றுமதி செய்யத் துவங்கியது. உள்நாட்டிலும் விற்பனை செய்ய பல இடங்களில் பங்க் நிர்மாணித்தது. பாரத்/ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனங்கள் பாதிக்கப் படுமோ என்று ரிலையன்ஸுக்கு புதிய windfall gain tax என்றதும் உள்நாட்டு வியாபாரத்தை ரிலையன்ஸ் நிறுத்தி விட்டது.

வீக்கம் இன்று 11.96 % என்கிறார்கள். நம் கையில் சிறிய வீக்கம் என்றால் எவ்வளவு அவஸ்தை படுகிறோம். பணவீக்கத்தை மக்கள் கண்டுகொள்கிற மாதிரியே தெரியவில்லை. செலவைக் குறைக்க வேண்டும், சேமிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை. நான்வெஜிடேரியன் சாப்பிடுகிறவர் இனி நான், வெஜிடேரியன் என்று சொல்கிறாரா? பெட்ரோல் விற்பனை குறைந்ததா? வீட்டு வாடகை 50% கூடி விட்டது

ஒஹோ. இவ்வளவு விஷயம் இருக்கிறதா என்று ஆடிட்டரின் பேச்சைக் கேட்டதும் புரிந்தது. நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் வீட்டுக்கு 8"*8" சதுரத்தில் 15" உயரம் கொண்ட டின்னில் நல்லெண்ணை செக்கிலிருந்து (பாங்க் செக் இல்லீங்க, செக்கு- இன்றைய இளைஞர்கள் செக்கை பார்த்திருப்பார்களா) வரும். சாப்பாட்டுக்கு, விளக்கேற்ற, எண்ணைக்குளியல் எல்லாம் அதில் இருந்துதான். இன்று சாப்பாட்டுக்கு மட்டுமே இதயம். விளக்கு ஏற்ற லூஸ் எண்ணைதான். எண்ணைக் குளியல் மறந்தேபோய்விட்டது.

politician எல்லாரும் statesmen ஆகி, அடுத்த தேர்தலை மட்டும் நினைக்காமல் அடுத்த தலைமுறையைக் கருதி திட்டமிட்டு, பட்ஜெட் போட்டால்தான் இந்த வீக்கம் குறையும்.

பாரத மாதாவை கடவுள் காப்பாராக.

Sunday, July 6, 2008

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்

4/7 வெள்ளியன்று தென்காசியில் ஒரு கல்யாண வரவேற்பு நிகழ்ச்சிக்காக இரு நண்பர்களுடன் சென்றேன்.

மெல்லிசைக் குழு வல்லிசை முழங்கிகொண்டிருந்தார்கள். இசைக்குழுவினர் தங்கள் வால்யூம் லெவலை சபையின் அமைப்பு, விருந்தினர் எண்ணிக்கை என்று அநுசரித்து வைத்துக் கொண்டால் கேட்க நன்றாக இருக்கும், கல்யாண வீட்டில் உறவினர், நண்பர்களை பல நாட்களுக்குப் பிறகு சந்திப்போம். அவர்களுடன் பேசமுடிவதில்லை.

பாடிக்கொண்டிருந்த பெண் பாட்டுக் கேற்றபடி ஆட்டம் போட்டாள். கல்யாண வீட்டில் பாட என்று பாடல்களைத் தேர்வு செய்து ரிஹர்சல் பார்த்து வந்து பாடினால் கேட்க சுவையாக இருக்கும்.

குழுவின் லீடர் ஒரு கேள்வி கேட்டார், பதிலை சீட்டில் எழுதி தருமாறும் நிறைய சரியான பதில் இருந்தால் குலுக்கல் முறையில் பரிசு என்றும் சொன்னார்.

"எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே....." மலைக்கள்ளன் படத்தில் செளந்தரராஜன் பாடிய இப்பாட்டை எழுதியவர் யார்? இதுதான் கேள்வி.

படத்தை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். எம்.ஜி.ஆர் நடித்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் அது. மேடை ஏறி அந்த பாட்டை பாடவேண்டும் என்று சொல்லியிருந்தால் கூட தாளம்/வரி பிசகாமல் பாடியிருப்பேன். யார் எழுதியது என்று மறந்து விட்டேனே என்று வெட்கமாக இருந்தது.

வந்த சீட்டுக்கள் எல்லாமே--உடுமலை நாராயண கவி, தஞ்சை ராமையாதாஸ், மருதகாசி, கா.மு.ஷெரிப்----தவறான பதில் என்று சொல்லிவிட்டார்.
படத்தின் வசனகர்த்தா மு.கருணாநிதியே இந்தப் பாட்டெழுதினாரோ என நினைத்தேன்.
நாமக்கல் கவிஞரோ? கதை தானே அவருடையது?

நீங்கள் யாராவது சொல்லுங்களேன்

Friday, July 4, 2008

ப்ளெஷர் கார் ?

ரொம்ப வருஷத்திற்கு முன், 'அவர் ப்ளெஷரில் வந்தார்' (அதாவது காரில் வந்தார்) என்பார்கள். காரில் பயணிப்பதும் கார் ஓட்டுவதும் மிகுந்த ப்ளெஷராக(மகிழ்ச்சியாக) இருந்தது.

இன்று ஜனத்தொகைக்குப் போட்டியாக கார்த்தொகை பெருகிக்கொண்டே போகிறது. பன்னாட்டு கார் உற்பத்தியாளர்கள் இந்தியாவைத் தேடி வந்து கார் தயாரிக்க தொடங்கிவிட்டார்கள். அவர்கள் நாட்டை விட இங்கு லேபர் மலிவாக இருப்பதும் ஒரு காரணம்.

இருக்கும் அதே சாலையில் புதிது புதிதாக கார்கள், பஸ், லாரி, மோட்டார்பைக் எல்லாம் எதிரும் புதிருமாக கடும் வேகத்தில் செல்வதும், முந்த முயல்வதுமாக இருப்பதால் தினமும் விபத்துக்களும் உயிரிழப்புகளும் நேர்கின்றன.

நால்வழிச்சாலை போடுகிறோம் என்று அசோகர் அந்த நாளில் நட்ட சாலையோர மரங்களை எல்லாம் வெட்டித் தள்ளி அகலப் படுத்தி விட்டாரகள். ஆனால் சாலைப் பணிகள் விரைந்து முடியவில்லை.

மதுரைக்கு நான் என் பியட் காரில் 80 கிலோமீட்டர் வேகம் தாண்டாமல் 2 மணி, 45 நிமிடங்களில் செல்வேன். இன்று இனோவாவில் 3 மணி 15 நிமி. ஆகிறது. இப்போதும் 80கிமீ தாண்டுவதில்லை. சாலையில் தார் வேலை முடியாததால் டயர் கெட்டுவிடக் கூடாதென்று பல இடங்களில் லோயர் கியரிலேயே செல்ல வேண்டி இருக்கிறது. முந்த முயலும் பஸ் கார் எல்லாவற்றிர்க்கும் வழி விடுவேன். ஆனால் எதிர் வரும் கார்கள் அசுர வேகத்தில் வலது புறமாக-நம் லேனில்-மற்ற வண்டிகளை முந்திக்கொண்டு வரும் போது நான் ஒதுங்கி நின்று வழி விடவேண்டும்.

நாலைந்து பேர் செல்லும் போது, காரில் எனக்கு எப்போதும் செளகரியமான சீட், ட்ரைவர் சீட்தான். ஆனால் கார் ஒட்டுவது இன்று ப்ளெஷராகவே இல்லை. விபத்துக்களை தவிர்க்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 80கிமீ வேகத்திற்கு மேல் எந்த காரும் செல்லக்கூடாது.

ஹைவேயில் நடப்பது கார் ரேஸ் இல்லை. அதில் தோற்றால் எவ்வளவு பெரிய தண்டனை என்பதை எல்லோரும் உணர்ந்தால் தான் கார் ஓட்டுவதும் பயணிப்பதும் மீண்டும் ப்ளெஷ்ர் ஆகும்

Tuesday, June 24, 2008

தித்திப்பான பத்து விஷயங்கள்

வாழ்க்கை எவ்வளவு இனிமையானது என்பதைக் கண்டுகொள்ளுங்கள். எக்ஸ்ட்ரா சர்க்கரை எடுத்துக்கொள்வதை தவிர்த்து விடுங்கள் என்று உலக டயபட்டீஸ் தினத்தன்று ஹார்லிக்ஸ் லைட் விளம்பரத்தில் பார்த்தேன். நவம்பர் 2006 (தேதி நினைவில்லை) செய்தித் தாளிலிருந்து வெட்டி பத்திரமாக வைத்திருக்கிறேன். நீங்களும் பார்த்திருக்கலாம், மறந்தும் இருக்கலாம்.

தித்திப்பான இந்த பத்து விஷயங்களை செய்து பாருங்களேன்.

1. ஒரு நாள் மாலை வேளையில் சந்தித்துப் பேச உங்கள் நண்பர்களை அழையுங்கள்.

2. உங்கள் அன்பு மனைவி/கணவருக்கு ஒரு காதல் கடிதம் எழுதி போஸ்ட் செய்யுங்கள்.

3. "முத்து" திரைப்படத்தில் ரஜினியின் அமர்க்களமான நடிப்பை ரஸித்திடுங்கள்.

4. "ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்"-என்றும் பசுமையான இது போன்ற பாடலை பாத்ரூமில் பாடுங்கள்

5.தெருமுனை கிரிக்கெட் மேட்ச்சில் அம்பயரிங் செய்யுங்கள்.

6. பழைய கல்லூரி போட்டோவைப் பார்த்து நினைவில் மூழ்குங்கள்.

7. பறவைகளுக்கு இரை போடுங்கள்.

8. தெருவோர ஏழைப் பிள்ளைகளுக்கு க்ரேயான் கலர்கள் கொடுங்கள்.

9. உங்கள் பக்கத்து வீட்டுக்காரரை பாராட்டி மகிழ்வியுங்கள்.

10. கொஞ்சமும் எதிர்பார்க்காத உங்கள் பழைய கால நண்பருக்கு போன் சேய்து பேசுங்கள்.

நான் என் நண்பர்/உறவினர் வீட்டிற்கு (டிவி சீரியல் தொடங்குமுன்) சென்று பேசி வருவேன்.
பழைய கல்லூரி குரூப் போட்டோக்களை எடுத்து நண்பர்களை நினைத்து மகிழ்வேன்.
எங்கள் வீட்டருகில் பூட்டியுள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் மயில்கள் உள்ளன. அவை இரை தேடி எங்கள் வீட்டுத் தோட்டத்திற்கு வரும். தினமும் பேத்திகளுடன், மயில்களுக்கு பொட்டுக் கடலை தூவினால் கொத்தி சாப்பிட்டுச் செல்லும்.
குழந்தைகளுக்கு ஒரு படம் தந்து வர்ணம் தீட்டும் போட்டி நடத்தினேன். எல்லாருக்கும் ஒரு சிறிய க்ரேயான் பாக்ஸ் தந்தேன். பரிசு முதல் மூன்று பேருக்குத்தானே. க்ரேயான் பாக்ஸ் எல்லோருக்கும் பரிசு என்றதும் அவர்கள் முகத்தில் எவ்வளவு சந்தோஷம் தெரியுமா?

நீங்களும் செய்து பாருங்களேன். சம்பாத்தியம் , குடும்பம், டிவி, சினிமா எல்லாம் தாண்டி வாழ்க்கை எவ்வளவு தித்திப்பானது என்று பாருங்கள்.

Saturday, June 14, 2008

கமல்ஹாசன், கமல்ஹாசன் மற்றும் பல கமல்ஹாசன்கள்

அடுத்த கமல் படத்தின் விளம்பரத்தில் நடிகர் லிஸ்ட் இப்படி இருக்குமோ?

இது கமலோ, இதுவும் கமலோ என்று வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் (பாத்திரம்தான், கதையில்லை)கமல்ஹாசனோ என்று நினைக்க வைக்கும் அளவுக்கு வேடங்கள் அணிந்து நடித்துள்ள படம் தசாவதாரம்.

வசனமும் அவர்தானாம். நெப்போலிய குலோத்துங்கன், "யாம் அறிவோம், யாம் அறிவோம்" என்று சொன்னதும், ரங்கராஜன், "உன்னை அறியாமல் ஹரிஓம், ஹரிஓம் என்று எத்தனை முறை சொல்லிவிட்டய்", என்று கேட்டதில் கற்பனையும்,
கோவிந்தன், போலீஸ் ராவ் இடமும் நரசிம்மராவ் இடமும், ராவோட ராவாக இருந்து செய்து விடுங்கள் என்று சொல்வதில் ந்கைச்சுவையும் நன்றாக இருக்கிறது.

6.30க்கு தொடங்கிய படம் இன்னும் இன்டர்வல் வரவில்லையே என நினைக்க, 8 மணிக்கு இன்டர்மிஷன் வந்தது. சரிதான் இன்னும் 1 1/2 மணி நேரம் ஓடுமே என்று நினைத்து ஒரு ப்ரூ காபி சாப்பிட்டுவிட்டு அவளுக்கு ஒரு கோன் ஐஸ்க்ரீம் வாங்கிக் கொண்டு வந்தேன்

டைரக்டர்கள் பி.வாசு, சந்தானபாரதி எல்லோரும் வந்துவிட்டார்கள், ரவிக்குமார் வந்ததும் படம் முடிந்துவிடுமே என்று எதிர்பார்க்க வைத்துவிட்டார், படத்தின் டைரக்டர்.

Friday, June 13, 2008

மூவர் ஏற்றிய தமிழ் விளக்கு

'இணையத்தில் வளர் தமிழ்' என்ற தலைப்பில், வலைப்பதிவின் வளர்ச்சியும் தமிழ் ஆய்வின் பயன்பாடும் பற்றிய கருத்தரங்கு நெல்லையில் சென்ற வாரம் நடந்தது. திரு.சேகர் பொன்னையா, திரு.முல்லை ச.முருகன் இருவரும் ஒருங்கிணைத்திருந்தார்கள்.

வாஷிங்டனிலிருந்து வந்த முனைவர் சொ.சங்கர பாண்டி பேசுகையில், அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் தமிழில் பேசும் வாய்ப்பே மிகவும் குறைந்து வருகிறது என்றார். அமெரிக்க மாநிலங்களில் உள்ள தமிழ் சங்கங்கள், தமிழ் பள்ளிக்கூடங்கள் அமைக்க கூட்டு முயற்சி செய்து வருகின்றன என்றும், தமிழ் நாட்டில்கூட பள்ளிகளில் தமிழ் பேசக்கூடாது, ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என் கட்டாயப்படுத்தும் நிலை உருவாகி வருகிறது. தமிழ் மொழியை மதிக்கவும், ஆங்கிலக் கலப்பில்லாமல் பேசும் நிலை வர வேண்டும் என்றார்.

தமிழ் வலைப்பதிவு பற்றி சொல்கையில் சங்கர பாண்டி, நம் கதையோ, கட்டுரையோ, கருத்துக்களோ பத்திரிகைக்கு அனுப்பி வெளிவருவதைப் பார்க்கக் காத்திருக்க வேண்டியதில்லை. நம் எழுத்தை உலகத்தமிழர்கள் அனைவரும் உடனே படிக்க வைக்க முடிகிறது என்றார்.

கோவை வாசியான திரு.காசி ஆறுமுகம், தான் அமெரிக்காவில் நான்கு ஆண்டுகள் இருந்தபோது தமிழ்மணம் வலைத்திரட்டியை தொடங்கியதையும், அதில் பதிவுகள் நேரம் வாரியாக வெளியிடப்படுவதையும், பின்னூட்டங்கள் மூலம் வாசகர்கள் பதில் எழுதுவதால் வேகமான கருத்துப் பரிமாற்றம் நிகழ்வதையும் கூறினார். நாம் எழுதுவதை நாமே தணிக்கை செய்து, நல்ல தமிழில் நல்ல கருத்துக்களை எழுதி இந்த உயிருள்ள ஊடகத்தை எல்லோரும் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அடுத்துப் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், திரு.கோ.பிரகாஷ் அவர்கள், மொழிதான் ஒரு சமூகத்தின் அடையாளம். தமிழன் என்று சொல்லிக்கொள்ளவே நாம் கர்வப் படவேண்டுமென்றார்.மூன்று தமிழ் சங்கங்கள் தொடங்கியதே தமிழ் வளர்ச்சிக்காகத்தான். இலக்கியமே கற்பனை கலந்த கதையின் வடிவமைப்புதான். திராவிட மொழிகள் அனைத்துக்கும் ஆணிவேர் தமிழ்தான் என்று கால்டுவெல் போன்ற மேல்நாட்டு அறிஞர்கள் கூட எழுதிச் சென்றார்கள்

திரு. பிரகாஷ், தான் ஐ.ஏ.எஸ் பயிலும் போது தமிழை இரண்டாவது மொழியாக எடுத்துக்கொண்டதாகவும் அப்பொழுதுதான் தமிழ் மொழியின் நீளம், அகலம், விஸ்தீரணம் தன்னால் அறிந்து கொள்ள முடிந்தது என்றும் கூறினார். இந்திய மொழிகளிலேயே ஆங்கிலத்திற்கு அடுத்த படியாக தமிழ்தான் வலைப்பதிவில் அதிகம் காண முடிவதால் உலகெங்கிலும்தமிழர்கள் வாழ்ந்து தமிழைப் பரப்புவது தெரிகிறது.

நாணயத்தின் மறு பக்கத்தை காட்டிய திரு.பிரகாஷ், நகரத்தன்மை வாய்ந்த ஊர்களில் தமிழ் எழுதுவது, பேசுவது, படிப்பதையே சமூகம் கீழ்நிலையில் பார்க்கிறது என்றார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தமிழ் பேசுவதை ஊக்குவிக்க வேண்டும், ஏனென்றால் ஞாயிறு முதல் சனி வரை கிழமைகள் கூட அவர்களுக்கு தமிழில் சொல்லத்தெரிவதில்லை. அடுத்த தலைமுறை தமிழை மறந்துவிடாமல் பெருமை வாய்ந்த தமிழ் மொழியை பல்லாண்டு திகழச்செய்ய வேண்டும் என்றார்.

ஹுஸ்டன் நகரில் நாசா விண்வெளி மையத்தில் பணிபுரியும் முனைவர்.நா.கணேசன், முதுகலையிலும் தமிழ் ஒரு விருப்பப் பாடமா இருக்க வேண்டும் என்றார். தமிழ் பத்திரிகைகள் குமுதம், விகடன் யுனிகோட் முறைக்கு மாறி தங்கள் இதழ்களை வெளியிடுகின்றன என்றும் தமிழில் எழுத விரும்பும் பதிவர்கள் தமிழ்நெட் 99 தட்டச்சு பயன் படுத்தி சுலபமாக தங்கள் பதிவுகளை வெளியிடலாம் என்றும் கூறினார்.

முனைவர்.மு.இளங்கோவன், கருத்தரங்கு நடந்துகொண்டிருக்கும் போதே நிகழ்ச்சிகளை புகைப் படங்களுடன் தன்னுடைய வலைப்பதிவில் பதிவு செய்து கொண்டிருந்தார்.
வழக்கறிஞர் டி.ஏ. பிரபாகர் நன்றி கூறினார்.

Monday, June 2, 2008

ஹீரோவுக்கு புதிய தோழர்கள்.

சந்தோஷ் சுப்பிரமணியம் படம் 50 நாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறது.நேற்றுதான் திரையரங்கில் பார்த்தேன்.
தனி காமெடி ட்ராக், வில்லன், பாட்டு/டான்ஸ், எதுவுமில்லாமல் நம்மையும் சந்தோஷின் குடும்பத்தில் ஒருவராக 3 மணி நேரம் கட்டிப்போட்டு விட்ட கதை. நிச்சயிக்கப் பட்ட கல்யாணம் என்னாகும் என்ற டென்ஷன் நமக்கு.
ஹீரோவுக்கு தோழர்களாக விவேக், சார்லி, தாமு, வையாபுரி யாரும் இல்லாமல் மூன்று புதிய முகங்களைப் பார்த்தது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.

Saturday, May 17, 2008

Be SILENT and LISTEN: இரண்டு வார்த்தைகளுக்கும் அதே ஏழு எழுத்துக்கள்தான்

சென்ற வாரம் ரோட்டரி க்ளப்களில் ஜூலை முதல் பதவி ஏற்க இருக்கும் புதிய தலைவர்,செயலாளர்,டைரக்டர்கள்களுக்கான பயிற்சி கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது. (நாங்கள் ராமேஸ்வரத்தில் தங்கி தனுஷ்கோடிக்கும் சென்றிருந்தோம். அதைப்பற்றி ஃபோட்டோவுடன் அடுத்த பதிவில் சொல்கிறேன்)
நிகழ்ச்சியை தொடங்கி வைத்த ட்ரெயினர் சொன்ன முதல் வார்த்தை -"உங்கள் செல் போன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்யுங்கள், Be SILENT and LISTEN".
நாம் ஒரு நிகழ்ச்சிக்கு செல்கையில் நம் கவனம் முழுதும் அதில் தான் இருக்கவேண்டும். இன்று எல்லோருக்கும் வேண்டிய ஒரு அறிவுரை.

Sunday, May 4, 2008

அர்ஜுன் ஒரு நாள் முதல்வர் ஆனது போல........

(தலைப்புக்காகத்தான்) நான் ஒரு நாளாவது பிரதமராக இல்லாமல் ஒரு இந்தியக் குடிமகனாக(பிரஜைதான்)என் தினசரி வேலைப்பளுவிலிருந்து ஓய்வு பெற நினைக்கிறேன் என்று பிரதமர் நேரு, ஏப்ரல் 29, 1958 அன்று காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் கூறிவிட்டு தன் சக அங்கத்தினர்களிடம் ஐடியாவும் அனுமதியும் கேட்டார்.
நேரு மேலும் சொன்னார். "சில வாரங்களுக்கு முன் நான் மாற்றம் இல்லாத வேலை செய்வதாலும், களைப்பாலும் ஒரு மாற்றம் வேண்டி அவ்வாறு சொன்னேன். எல்லோரும் எனக்கு உடல் நிலை சரியில்லை என்று நினைத்து விட்டார்கள். பத்திரிகைகளும் தங்கள் ஊகங்களை எழுதின. உழைக்க வேண்டும், புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இன்னும் உண்டு. மக்களுடன் எனக்குரிய இணைப்பு உறுதியாக உள்ளதுடன் அவர்களுக்காக மேலும் உழைத்து, அவர்கள் குறை தீர்க்க வேண்டும் என்ற என் ஆசை தீரவில்லை. உடல் அளவில் நான் நன்றாகவே இருக்கிறேன். இன்னும் பல ஆண்டுகள் திறமையாக பணி புரிவேன் என்று நம்புகிறேன்".
மே 1, 1958 அன்று நடந்த காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் நேரு இவ்வாறு நினைக்க காரணம் என்ன என்று விவாதித்தார்கள்.
நேரு, தான் உடல் நிலை சரியில்லாததால் ஓய்வு விரும்பவில்லை என்றும், பல விஷயங்கள் காங்கிரஸ் கட்சியிலும் நாட்டிலும் வித்தியாசமாக நடப்பதுதான் என்றார். பொது வாழ்க்கை சரியான வழியில் செல்லவில்லை என்றும் அது ஒரு உத்தியோகம் போலவும், பதவி, அதிகாரம்தான் முக்கியம் என்று நினைப்பதால் அடிப்படை சேவை ஒதுக்கப் படுகிறது என்றார். காங்கிரஸ் கட்சியில் மட்டும் நான் சொல்லவில்லை நாடு முழுவதும்தான் என்று கூறி அதனால்தான் என் வழக்கமான தினசரி வேலையிலிருந்து ஓய்வு பெற்று அமைதியாக யோசித்துப் பார்க்கவே விரும்புகிறேன் என்றார்.
ஹிந்து நாளிதளில் This Day That Age பகுதி படிப்பீர்களா? மே 1, மே 3 இதழ்களில் நான் படித்ததுதான் இது.

Monday, April 28, 2008

பல்லாங்குழியா, அப்படின்னா?

என் அக்கா மகன் கல்யாணம் சென்ற புதனன்று நடந்தது. அதிகாலை முகூர்த்தம் என்பதால் நிறைய டயம் கிடைத்தது. மாப்பிள்ளையும் பெண்ணும் நலுங்கு விளையாடச்சொன்னோம். முன்னெல்லாம் எங்கள் வீட்டில் இதற்காகவே ஒரு பித்தளை தேங்காய் உண்டு அவர்கள் உருட்டி விளையாட. கல்யாணமோ உட்லண்ட்ஸில். நிஜத் தேங்காய் வைத்து தொடங்கினோம்.
அடுத்து பல்லாங்குழி. வீட்டில் கூட இப்ப எல்லாம் கிடையாது. பல்லாங்குழியா, அப்படின்னா? என்று மாப்பிள்ளையும் பெண்ணும் கேட்டார்கள். வேறு என்ன செய்யலாம் என்று யோசித்தோம். பல்லாங்குழியும் கைவசம் இல்லை.யாருக்குத் தோன்றியதோ
அந்தாக்ஷிரி விளையாடலாம் என்றார்கள்.
மாப்பிள்ளை முதலில் தொடங்க பெண், அவர் விட்ட எழுத்தில் பாடணும் என்றதும் இருவரும் குழியாக பாடினார்கள். "இஞ்ஜி இடுப்பழகா" பாட்டை இருவரும் ஒரு டூயட் மாதிரி பாடி முடித்தார்கள்.
நாங்கள் விளையாட ஸ்க்ராபிள் வாங்கி வைத்திருந்தோம். அதையும் அவர்கள் அழகாக ஆடி தாங்கள் மகிழ்ந்ததோடு எங்களையும் மகிழ்வித்தார்கள்.
பிறகு அப்பளம் நொருக்கல். சாப்பாடு நேரம் நெருங்கியதால் சுமார் ஒரு டஜன் அப்பளம் நொருங்கியது.
என்ன, உங்கள் வீட்டு கல்யாண நலுங்குக்கு புது ஐடியா கிடைத்ததா?

Wednesday, April 16, 2008

சென்னை டாக்டரும் நெல்லை வக்கீலும்

1. மூன்று பெண்கள். ஒவ்வொருவர்க்கும் இரண்டு பெண்கள். இவர்கள் எல்லோரும் சாப்பிட ஹோட்டலுக்கு வந்தார்கள். அங்கே ஏழு நாற்காலிகள் தான் இருந்தது. ஆனால் அவர்கள் எல்லோரும் உட்கார முடிந்தது. எப்படி?

2. சென்னையில் இருக்கும் ஒரு டாக்டருக்கு நெல்லையில் ஒரு வக்கீல் சகோதரர். ஆனால் அந்த நெல்லை வக்கீலுக்கு சென்னையில் ஒரு டாக்டர் சகோதரர் கிடையாது. ஏன்?

3. நான் இரண்டு பக்கெட்டில் தண்ணீர் வைத்திருந்தேன். ஒரு பக்கெட் தண்ணீர் 15 டிகிரி சென்டிகிரேட். மற்ற பக்கெட் தண்ணீர் 15 டிகிரி ஃபாரன் ஹீட். என் பேத்தி வந்து இரண்டு பக்கெட்டிலும் ஒரு 5 ரூபாய் நாணயத்தை ஒரே சமயத்தில் போட்டாள். எந்த பக்கெட்டில் நாணயம் முதலில் அடியைத் தொடும்.

எப்படி, ஏன், எது. சொல்லுங்கள் பார்க்கலாம்

Thursday, March 13, 2008

"நீ செய்தது சரி. நான் தான் தவறு. ஐ ஆம் ஸாரி" --ஜவஹர்லால் நேரு.

ரீடர்ஸ் டைஜஸ்ட் புத்தகங்களை நான் படித்துவிட்டோமே என்று பழைய பேப்பருடன் போட்டுவிடாமல் வைத்திருக்கிறேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் எடுத்துப் படிப்பேன். நவம்பர் 1989 இதழில் இன்று நான் படித்த ஒரு செய்தி.

மோகன்சிங் பயாஸ் என்று ஒரு போலீஸ் ஆபீஸர் நேருவுடன் தான் பெற்ற அனுபவத்தை எழுதியிருக்கிறார். அவர் சொல்வது போலவே சொல்கிறேனே.

"1954-ல் நான் ஒரு ஜுனியர் போலீஸ் ஆபீஸர். பிரதமர் ஜவஹர்லால் நேரு பம்பாயில் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டபோது நான் செக்யூரிட்டி இன்சார்ஜ் ஆக இருந்தேன். கூட்டம் முடிந்தவுடன் நேரு மேடையிலிருந்து இறங்கி மூங்கில் வேலியைக் கடந்து மக்களை சந்திக்க விரைந்தார். நான் அவரைத் தொடர்ந்து என் லத்தியைச் சுழற்றிக் கொண்டு கூட்டத்தை சமாளிக்க முனைந்தேன்.
திடீரென்று என் லத்தி என்னிடமிருந்து பறிக்கப் பட்டது. திரும்பிப்பார்த்தால் நேரு அதைக் கையில் வைத்துக்கொண்டு என்னை அடிப்பது போல் வந்து 'நீ என்ன செய்கிறாய்' என்று கோபமாய் கேட்டார். தன் பெர்சனல் செக்யூரிட்டி ஆபீஸரிடம் என்னை அந்த இடத்தை விட்டு அகற்றும்படிக் கூரினார். கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் இடத்தை விட்டு நான் சென்றேன்.
சிறிது நேரத்திற்குப் பிறகு என்னை பிரதமர் வரச் சொன்னதாகத் தகவல் வந்து அவரைப் பார்க்கச் சென்றேன். அப்போது மொரார்ஜி தேசாயும் வேரு சில தலைவர்களும் அவருடன் இருந்தனர். பிரதமர் என்னிடம், 'நீ என்ன செய்ய முயன்றாய்' என்று கேட்டார். ப்ளூ புத்தகத்தில் (வி.வி.ஐ.பி பாதுகாப்பு முறைகளை விளக்கும் புத்தகம்) சொல்லியபடிதான் செய்தேன் என்று தைரியமாகச் சொன்னேன். மொரார்ஜி தேசாயும், நேருவின் செக்யூரிட்டி ஆபீஸரும் அவரிடம் ஏதோ சொன்னார்கள்.
அதைக்கேட்டதும் பிரதமர் என்னை அருகில் அழைத்து, 'நீ செய்தது சரி, நான் தான் தவறு. ஐ ஆம் ஸாரி' என்றார். அது பிரதமர் தன் வருத்தத்தை ஒரு இளம் போலீஸ் ஆபீஸரிடம் தெரிவித்த விதம். பண்டிட்ஜியின் பெருந்தன்மை என் கண்களில் நீர் வர வைத்து விட்டது. இம்முறை நான் கட்டுப் படுத்த முயலவில்லை."
-மோகன்சிங் பயாஸ்

இன்று இப்படி நடக்குமா?

Thursday, March 6, 2008

மார்ச் போட்டிக்கு என் பிரதிப(தி)லிப்புகள்.

சிகாகோ மிலெனியம் பார்க்கில் "க்ளொவுட் கேட்".

ப்ளாக்கில் உள்ள என்படமும் அதில் நான் எடுத்த செல்ஃப் போர்ட்ரெய்ட்தான்.Thursday, February 28, 2008

ஹாப்பி பெர்த்டே லீப்பர்ஸ்

பிப்ரவரி 29 அன்று பிறந்தவர்கள்
நான்கு ஆண்டுக்கொரு முறைதான்
பிறந்த நாள் கொண்டாடுவார்களா?
பிப்ரவரி 28 அல்லது மார்ச் 1 அன்று
என நினைக்கிறேன். எனக்குத் தெரிந்து
மொரார்ஜி தேசாய் ஒருவர்தான்.
உங்களுக்கு யாராவது தெரியுமா?
பிப்ரவரி 29 அன்று
பிறந்த அனைவருக்கும்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

சகாதேவன்

எம்.ஆர்.ராதா தெரியும், எம்.கே.ராதா தெரியுமா?

மதராஸ் கந்தசாமி முதலியார் க்ரிஸ்டியன் காலேஜில் பி.ஏ ஆங்கில இலக்கியம் படித்தவர். கல்லூரி நாட்களிலேயே ஷேக்ஸ்பியர் நாடகங்களை ப்ரின்ஸிபல் மில்லருடைய மேற்பார்வையில் அழகாக ஆங்கிலத்தில் பேசி நடிப்பாராம். பின் தமிழ், ஆங்கில நாடகங்களை மேடைகளில் நடித்துப் புகழ் பெற்றார். நாடகம் எழுதுவதுலும், நடிப்பு சொல்லிக்கொடுத்து டைரக்ட் செய்வதிலும் வாத்தியார் என்று அழைக்கப் பட்டார்.
கந்தசாமி முதலியார் தன் ஒரே மகன் எம்.கே.ராதாவை தமிழ் நாடக மேடைக்கு அறிமுகம் செய்தார். தான் பார்க்கும் ஆங்கிலப் படங்களுக் கெல்லாம் ராதாவையும் அழைத்துச் சென்று மேடை நடிப்புக்கும் சினிமா நடிப்புக்கும் உள்ள வித்தியாசங்களை விளக்கி பின் ராதா சினிமாவில் வரக் காரணமானார். ராதா நடித்த முதல் படம் எல்லிஸ் ஆர்,டங்கன் டைரக்ட் செய்த சதி "லீலாவதி". எம்.ஜி.ஆர்., டி.எஸ்.பாலையா கூட இந்தப்படத்தில் புதியவர்கள். முதலியார் பற்றி ஹிந்து நாளிதழில் 15/02/08 அன்று ராண்டார் கை எழுதிய கட்டுரையில் படித்தேன்.
பிறகு எம்.கே.ராதா ஜெமினி ஸ்டூடியோவில் சேர்ந்து பல படங்களில் நடித்தார். 'சந்திரலேகா', 'அபூர்வ சகோதரர்கள்' (இரட்டை வேடம்- கமல் நடித்தது இல்லீங்க), 'சம்சாரம்' எல்லாம் ஜெமினியின் முத்திரைப் படங்கள்
கத்திச் சண்டை-இப்போது ஆ, ஊ என்று கத்தி சண்டை போடுகிறார்களே அது இல்லை.-வாள் சண்டை. சந்திரலேகா டைட்டிலில் "ஃபென்ஸிங்"-ஸ்டண்ட் சோமு என்று வரும். ரஞ்சனுடன் சந்திரலேகாவிலும், நாகேந்திர ராவுடன் அ.சகோதரர்களிலும் ராதா போட்ட ஃபென்சிங் போல அதற்குப் பிறகு எந்தப் படத்திலும் நான் பார்க்கவில்லை.ஆங்கிலப்படங்களில் எரால் ஃப்ளின் போட்டது போல.
சந்திரலேகா ரிலீஸ் க்கு முன் எங்கள் ஊர் கொட்டகையில் சிங்கிள் புரொஜெக்டர்தான். படம் 3 1/2 மணி நேரம் ஓடும்.அதனால் ட்புள் புரொஜெக்டர் வாங்கி விடுங்கள் என்று தயாரிப்பாளர், டைரக்டர் எஸ்.எஸ்.வாசன் சொன்னதால் டபுள் புரொஜெக்டர் வந்தது என்று என் அப்பா சொல்லக்கேட்டிருக்கிறேன். படங்களின் ஸ்டில் எதுவும் கைவசம் இல்லை. விரைவில் தேடி எடுத்து காட்டுகிறேன்.
அதன் பிறகு எம்.கே.ராதா, 'புதையல்', 'அம்பிகாபதி', 'வணங்காமுடி' என பல படங்களில் அப்பா வேடத்தில் நடித்திருக்கிறார்.

சகாதேவன்

Wednesday, February 27, 2008

தமிழ் எழுத்துக்கு ஒரு பேரிழப்பு

இன்று காலை எழுந்ததும் வலையில்
பார்த்த செய்தி சுஜாதா அவர்களின் மறைவுதான்.
அவருடன் பேசியவர்கள், அவர் எழுதியதைப் படித்தவர்கள்,
எனப் பலரின் அனுபவங்களைப் படிக்க முடிந்தது.
மிகச் சிறந்த எழுத்தாளர். திரையிலும் சில நல்ல விஷயங்கள் சொன்னார்.
சிவாஜி படத்தில் இரு பெண்களுக்கு அங்கவை, சங்கவை என்று
பெயர் சூட்டியதற்காக அவரையும் சாலமன் பாப்பையாவையும்
வலையில் எப்படியெல்லாமோ திட்டித் தீர்த்தார்கள்,
நகைச்சுவை உணர்வே இல்லாதவர்கள்.
இன்று அவர்களே சுஜாதாவைப் புகழ்ந்து எழுதுவார்கள்.
அந்த இரு பெயர்களும் பலருக்குப் புதுசு.
சின்ன வயதிலேயே ஒளவையார் படம் பார்த்ததால்
என் போன்றவர்களுக்குத் தெரியும்.
அவர் மறைவு
தமிழ் எழுத்துக்கு ஒரு பேரிழப்பு.
சகாதேவன்

Friday, February 8, 2008

செல் போனில் இனி விளம்பரமா?

செல் போனில் விளம்பரம் செய்தால் என்ன என்று செல் தயாரிப்பாளர்கள் யோசனை செய்கிறார்களாம். போன் என்பதே அவசரமாக செய்தி பரிமாற்றத்திற்காக கண்டுபிடிக்கப் பட்டது.
டெக்னாலஜி வளர்ச்சி வரவேற்கத் தக்கதுதான்.
செல் போனில் காமிரா, இன்டர்னெட், என்று எல்லாம் வந்து விட்டது. எல்லாம் தவறான வழிகளிலும் பயன் படுகிறது. செல்களின் விலையும் 1000 ரூபாயிலிருந்து கன்னா பின்னா என்று கூடுகிறது.
சிம் கார்டுகள் ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்டு என்று அதிகக் கட்டணங்கள் ஆகிறது.
விளம்பரத்திலேயே அதிக வசூலாகுமே. அதனால் இனி காலுக்கு ப்ரீ என்பார்களா?

சகாதேவன்

Tuesday, February 5, 2008

344/365 - என்ன மார்க்கா?

இல்லையாம்.அரசு போக்குவரத்து அதிகாரி சொல்கிறார்-"மார்க் என்றால் மகிழ்ச்சி அடையலாம்.ஆனால் சென்ற வருடம் 365 நாட்களில் 344 விபத்துக்கள் என்றால் மனம் பதைக்கிறது".
சாலை விதிகளை மதித்து, மனநிலை பாதிக்கப்பட்டபோது வண்டி ஓட்டாமல், போட்டி போடாமல், பழுதடைந்த சாலைகளில் வேகமாகச் செல்லாமல் இருந்தால் விபத்தைத் தவிர்க்கலாம். மீறி விபத்து நடந்தால் அடி பட்டவர்க்கு முதலுதவி, சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்ப்பது எல்லாம் செய்ய வேண்டும் என்று ஊழியர்களுக்கு அறிவுரை செய்திருக்கிறார். விபத்து ந்டந்த இடத்தில் கூடும் மக்களின் அடிக்குப் பயந்து டிரைவர் ஓடிவிடுகிரார்களே.

சென்ற மாதம் சாலை பாதுகாப்பு வாரம் நடந்தது. சாலைக்கே பாதுகாப்பு இல்லையே?. ஒரு இதழில் படித்தேன். சாலை போட்டுக்கொண்டிருக்கும் தொழிலாளர்களிடம் தொண்டர்கள் கேட்கிறார்கள் -"சீக்கிரம் ரோடு போட்டு முடியுங்கள், நாங்கள் போஸ்ட் நடுவதற்குத் தோண்ட வேண்டாமா?" மழை வேறு சாலையைக் குழி குழியாக ஆக்கி விடுகிறது. சம்பந்தப்பட்ட இலாகா உடனே ரிப்பேர் செய்வதில்லை.

சாலை விபத்து என்றால் டிரைவர்கள் மட்டுமே காரணம் என்று ஆகி விடுகிறது. ஒரு நாய் குறுக்கே ஓடினாலே ப்ரேக் போட்டு அதை காப்பாற்ற முயல்கிறார்கள். ஆள் வந்தால் செய்ய மாட்டார்களா? இப்போது கொலைமுயற்சி என்பது வரை டிரைவர் மேல் வழக்கு பதிவு செய்யப்படுமாம். குறுக்கே ஓடி வந்தவர் காயத்துடன் தப்பினால் அவர் மேல் தற்கொலை முயற்சி வழக்கு போடுவார்களா?

சாலை விதிகள் இனி பள்ளிப்பாடமாகவே இருக்க வேண்டும். நான் 1963-ல் மெட்ராஸ் சென்ற புதிதில் ஒரு நாள் மவுண்ட் ரோடிலிருந்து ஸ்கூட்டரில் பீச் ரோட்டில் ரைட் திரும்புமுன் 'நில் கவனி' சைன் பார்த்து மெதுவாக வந்து இருபுறமும் பார்த்து, கியர் மாற்றி ரைட் திரும்பினேன். வ்சில் சத்தம் கேட்டு நிறுத்தினால் போலிஸ்காரர். நில் கவனி சிக்னலில் நீ காலை ஊன்றி நின்றிருக்க வேண்டும் என்றார். பின் மாணவன் என்றதும், லைசன்ஸை வாங்கிப் பார்த்துவிட்டு, சரி இனி பார்த்துப் போ என்றார்.

ஜனத்தொகை பெருகியது போல வாகனத்தொகையும் பெருகிய நிலையில் சாலையில் கண்காணிப்பதற்கு காவலர்கள் இல்லை போல. சிக்னலில் ஆம்பர் விழுந்துவிட்டால் வேகமாக க்ராஸ் ச்ய்துவிடுகிறார்கள். இதெல்லாம் ட்ரைவிங் ஸ்கூலிலேயே ந்ன்றாகக் கற்றுத் தர வேண்டும். ஒரே மாதத்தில் லைசன்ஸ் எடுத்துத் தருவது ஒன்றுதான் அவர்கள் எண்ணம்.

எல்லோரும் பைக், கார் வாங்குவது முன்னேற்றம்தான். ஒரு மணி முன்னதாக புறப்பட்டு சைக்கிளிலோ ப்ஸ்ஸிலோ சென்றவர்கள் இப்போது 10 நிமிடத்தில் ஆபீஸ் -ஸ்கூல் போய் விடலாமே என்று அவசரமாகப் போகிறார்கள்.ட்ராக் மாறாமல் செல்வதுமில்லை.ஓவர்டேக் செய்ய சாலையின் வலது புறத்துக்கே வந்து எதிரில் வரும் வண்டிக்கு இடைஞ்சல் ஆகிறார்கள். சமயத்தில் இடது புறமாகவும் முந்துகிறார்கள்.

பெடஸ்ட்ரியன் க்ராஸிங் என்று ஒரு ஒழுங்கு கிடையாது. மார்க் செய்யப் பட்ட இடத்தில்தான் க்ராஸ் பண்ன வேண்டும். வண்டிகளும் நின்று அவர்களுக்கு வழி விட வேண்டும். இதையெல்லாம் யார் சொல்வது, யார் கேட்பது?
ட்ராஃபிக் காவலர்கள் இடைஇடையே கண்ட்ரோல் செய்யும்போது விதி மீறுபவகளுக்கு ஸ்பாட் ஃபைன் போட்டு தினசரிகளில் செய்தியாக வ்ந்தால் எல்லொருக்கும் ஒரு பயம் வரும்.

பாதசாரிகள், டிரைவர்கள் என்று சாலை உபயோகிப்பவர்கள் அனைவரும் கவனமாக இருந்தால்தான் விபத்தைத் தவிர்க்கமுடியும்

சகாதேவன்

Monday, February 4, 2008

சங்கீதம் அன்றும் இன்றும்

இன்று கே-டிவியில் நான் பார்த்த பழைய படம், "நான் பெற்ற செல்வம்".
'பூவா மரமும் பூத்ததே', 'மாதா பிதா குரு தெய்வம், 'நான் பெற்ற செல்வம்'
பாடல்களுக்காக எனக்கு மிகவும் பிடித்த படம். நான் முதன் முதலில் பார்த்துக் கேட்ட சினி ஆர்கெஸ்ட்ரா, இசை அமைப்பாளர் ஜி.ராமனாதன் அவர்களுடையதுதான். நெல்லை சங்கீத சபாவில் நடந்தது.
இன்று எல்லா இசைக்கருவிகளும் கீ போர்டில் வாசிக்கிறார்கள். அன்று நாலைந்து வயலின்கள்,ட்ரம்பெட்,க்ளாரினெட், வீணை, தபேலா, டோலக்,மிருதங்கம்,ட்ரம்ஸ் என்று அத்தனை கருவிகளையும் பார்த்ததே நன்றாக இருந்தது.
நிகழ்ச்சியில் என்னை மிகவும் கவர்ந்தவர் தபேலா வசித்த டி.பி.பைரவன் தான். சிரித்த முகத்தோடு அழகாக வாசித்தார்.
இன்று கேட்கும் பாடல்களில் நீலகண்டன் என்பவர் வாசிப்புதான் பைரவனை நினைவு படுத்துகிறது.

சகாதேவன்