Saturday, July 14, 2012
எத்தனை கோடி இன்பம் பெற்றாய் சூர்யா?
மகனை "அவையகத்து முந்தியிருப்ப" செய்த சிவகுமாரையும், "இவன் தந்தை என்னோற்றான்" என்று மக்களை சொல்ல வைத்த சூர்யாவையும் நிறைவு நாளான வியாழனன்று, ஒன்றாகப் பார்த்த நாம் எல்லோரும் வென்றோம் ஒரு கோடி இன்பம்.
ஹாட் சீட்டில் அமர்ந்து லட்சங்கள் வென்ற பல போட்டியாளர்களை அழைத்து, எல்லா வயதினரும் வந்து ஆடியன்ஸாக கலந்து கொண்டு, "என் கேள்விக்கென்ன பதில்" என்று அன்று பாடிய சிவகுமாரை தங்கள் கேள்வி மழையில் நனைய வைத்து விட்டார்கள்.
பார்வதி அம்மாள் கேட்டார், 'இத்தனை திறமை, பணிவான குணங்களுடன் உங்கள் பிள்ளைகளை எப்படி வளர்த்தீர்கள்?' அதற்கு அவர், நான் மட்டும் இல்லை, சூர்யாவின் அம்மா, பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் எல்லோருக்கும் அதில் பங்கு உண்டு என்று சொன்ன பதில், ஒரு பெண் கோவையில் தன் பள்ளி விழாவில் நீங்கள் தலைமை தாங்கி எனக்கு பரிசு தந்தீர்கள் என்று சொல்ல, அவர் எந்த பள்ளி என சொல்லி, அன்று நீ ஒரு ப்ரெளன் கலர் உடை அணிந்திருந்தாய் என்று நினைவு கூர்ந்த விதம், மேலும் அவர் சொன்ன மகாபாரத கதைகள் எல்லாம் பிரமிக்க வைத்தன.
சூர்யா, தன்னால் இந்த நிகழ்ச்சியை நடத்த முடியுமா என்று முதலில் தயங்கியபோது, விஜய் டிவி குழுவினர் கொடுத்த தைரியம், பிரபல க்விஸ் மாஸ்டர் சித்தார்த்த பாஸு தந்த பயிற்சி பற்றி எல்லாம் நன்றியுடன் சொல்லிவிட்டு, குழுவில் தன்னுடன் பணியாற்றியவர்கள் - கேள்விகள் அமைத்த ஜீனியஸ், விடியோகிராபர், மேக்கப்மேன், லைட்மேன், தனக்கு சூட் தைத்து தந்தவர், சாரதிகள், தான் சொல்ல மறந்துவிட்ட டெக்னிஷியன்கள் எல்லோருக்கும், ஒரு குடும்பத்தை பிரிந்து செல்வது போல குரல் தழுதழுக்க நன்றி கூறினார்.
திருமதி பார்வதி அம்மாள், தான் உருவாக்கிய பள்ளிக்கூடத்தை மேம்படுத்துவதற்காக, ஹாட் சீட்டில் விளையாடிய போது, ரூ 12,50,000 வென்ற நிலையில் ரூ25,00,000க்கான கேள்விக்கு விடை தனக்கு தெரிந்தும் உறுதியாக சொல்ல முடியாமல், தவறானால் ரூ3,25,000 ஆகிவிடுமே என்று ரூ12,50,000 உடன் விலகிக் கொண்டார். அவர் வெல்லத் தவறிய ரு12,50,000ஐ சூர்யா, தன் அகரம் பெளண்டேஷனிலிருந்து பார்வதி அம்மாவுக்கு, அவரது பள்ளிக்காக வழ்ங்கியது பாராட்டுக்குரியது.
திங்கள்-வியாழன் மாலை எங்கு வெளியே சென்றாலும் மணி அண்ணன்,
'9 ஆகப்போகிறது வீட்டுக்குப்போ' என்று என்னை விரட்டுவார். எனக்கும் அந்த ஹாட் சீட்டில் உட்கார ஆசைதான். இது போல ஒரு நல்ல நிகழ்ச்சி இனி வருமா?
Subscribe to:
Posts (Atom)