Saturday, December 13, 2008

பெரிய திரையிலும் 2 மணி நேர கர்நாடக இசை.

"மார்கழி ராகம்" என்று ஒரு 2மணி நேர திரைப்படம் டிசம்பர் 18 அன்று உலகெங்கும் ரிலீஸாகுமாம். கர்நாடக இசைக்கென்று ஒரு தனி டிவி சானல் வராதா என நான் நினைத்துக் கொண்டிக்கையில் சினிமாவே வருகிறது என்று அறிய மகிழ்ச்சி.

விகடன் 10/12/08 இதழில் படித்தேன். இயக்குநர் ஜெயேந்திரா வழக்கமான சபா கச்சேரி போலவே பரிச்சயமான ராகங்களில் ஜனரஞ்சகமான பாடல்களுடன் தயாரித்திருக்கிறார்.
முன்னெல்லாம் எல்லா ஊர்களிலும் சபா கச்சேரிகள் எல்லா மாதங்களிலும் நடக்கும்.

பாடகர்கள் எல்லோரும் சென்னையில் இருப்பதாலும் அவர்கள் கேட்கும் சன்மானத்தால் சபா செயலாளர்களால் நிகழ்ச்சி நடத்த முடிவதில்லை. ஸ்பான்சரும் கிடைப்பதில்லை. டிவியில் கூட தொடர்ந்து நிகழ்ச்சி பார்க்க முடிவதில்லை. இடையிடையே கமெர்ஷியல், அடுத்த சானலில் என்ன என்று பார்க்கும் ஆர்வத்தால் இசையை ரசிக்க மாட்டோம். இப்போதெல்லாம் எப்போ கரண்ட் கட் ஆகும் தெரியாது. சினிமா என்றால் அப்படி இல்லை.

பாம்பே ஜெயஸ்ரீயும் டி,எம்.கிருஷ்ணாவும் பாடியிருக்கிறார்கள். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவாம். தூர்தர்ஷ்னில் தம்புராவை மேலிருந்து கீழ் வரை அடிக்கடி காட்டுவார்களெ, அது போல் இல்லாமல், மிக அழகாக பாடகர்களையும், பக்க வாத்தியக் காரர்களின் முகபாவம் கைவீச்சு எல்லாம் ரசிக்கும் படி படமாக்கியிருப்பார்.

18 அன்று நெல்லையில் எந்த தியேட்டரில் என்று பார்த்து அன்றே பார்த்துவிட வேண்டும் என்றிருக்கிறேன்.