Wednesday, July 16, 2008

பண வீக்கம்

Inflation என்றால் கார் டயரின் டியூபில் காற்றடிக்கும் போது வீங்கி விடுமே அது போல பண வீக்கம் என்றால் 2ரூ, 5ரூ நாணயங்கள் பர்ஸில் போடமுடியாமல் வீங்கி(பெரிதாகி)விடுமோ என்று நினைத்தேன். நேற்று எங்கள் ரோட்டரி க்ளப்-ல் பேசிய, நெல்லையில் பிரபல ஆடிட்டர் சொன்னார்:

முன்பு நல்லெண்ணை தேங்காய் எண்ணையை விட விலை குறைவு. இன்று? காரணம் எள் கிடைப்பதில்லை. கிராமங்களில் எல்லாம் இளைஞர்கள் இல்லை. பிழைப்பு தேடி, வேறு வேலைக்காக நகரங்களுக்கு போய் விட்டார்கள். அதனால் விவசாயமே குறைந்துவிட்டது. நகரிலும் எந்த வேலையென்றாலும் கூலி பயங்கரமாக உயர்ந்து விட்டது. கொத்தனார் வேலைக்கு தினக்கூலி இன்று 350ரூ (இலவசக்கொத்தனார் இந்த பதிவை படித்தால் என்னா சொல்வார்).

நகரங்களிலும் இளைஞர்கள் ஐ.டி படித்ததால் வெளிநாட்டுக்கும் மெட்ரோபாலிட்டன் சிடிக்கும் குடி பெயர்ந்துவிட்டார்கள். தனியாக வசிக்கும் பென்ஷனில் வாழும் பெற்றோர்கள் எந்த ரிப்பேர் வேலைக்கும் தங்கள் ஒரு மாத பென்ஷனையே கூலியாகத் தரவேண்டியுள்ளது.

அரசு எந்திரம் பழுதடைந்து கெட்டுப் போய்க் கொண்டிருக்கிறது. எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு ஆகும் செலவுக்காக தொழில் நிறுவனங்களையே நம்பியிருக்கின்றன. நாட்டில் பதுங்கி இருக்கும் கருப்புப் பணம் அப்போதுவெளிவருகிறது. பட்ஜெட்டும் அடுத்த தேர்தலை மனதில் கொண்டே தயாராகிறது.

சம்பளம் குறைய வேண்டுமென்று பெரிய நிறுவனங்கள் ஆள் குறைப்பு செய்து, கட்டிட பராமரிப்பு, சுத்தம் செய்தலுக்கெல்லாம் வருட காண்ட்ராக்ட் முறையில் ஒரு அமைப்புக்கு விட்டு விடுகிறார்கள். இதில் கிடைக்கக்கூடிய தொகையைப் பார்த்த அரசு, சர்வீஸ் டாக்ஸ் என்று கொள்ளை அடிக்க ஆரம்பித்து விட்டது. அதை ரோடு போடும் காண்ட்ராக்ட்காரர்களிடமும் வசூலிக்க முனைகிறது. இதனால் 1 கோடி ரூ காண்ட்ராக்ட் எடுப்பவர் 36 லட்சம் வரை கட்டவேண்டும். அவர் போடும் ரோடு எப்படி இருக்கும்?

ரிலயன்ஸ் கச்சா எண்ணை இறக்குமதி செய்து, சுத்திகரித்து, பெட்ரோல்/டீஸல் ஏற்றுமதி செய்யத் துவங்கியது. உள்நாட்டிலும் விற்பனை செய்ய பல இடங்களில் பங்க் நிர்மாணித்தது. பாரத்/ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனங்கள் பாதிக்கப் படுமோ என்று ரிலையன்ஸுக்கு புதிய windfall gain tax என்றதும் உள்நாட்டு வியாபாரத்தை ரிலையன்ஸ் நிறுத்தி விட்டது.

வீக்கம் இன்று 11.96 % என்கிறார்கள். நம் கையில் சிறிய வீக்கம் என்றால் எவ்வளவு அவஸ்தை படுகிறோம். பணவீக்கத்தை மக்கள் கண்டுகொள்கிற மாதிரியே தெரியவில்லை. செலவைக் குறைக்க வேண்டும், சேமிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை. நான்வெஜிடேரியன் சாப்பிடுகிறவர் இனி நான், வெஜிடேரியன் என்று சொல்கிறாரா? பெட்ரோல் விற்பனை குறைந்ததா? வீட்டு வாடகை 50% கூடி விட்டது

ஒஹோ. இவ்வளவு விஷயம் இருக்கிறதா என்று ஆடிட்டரின் பேச்சைக் கேட்டதும் புரிந்தது. நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் வீட்டுக்கு 8"*8" சதுரத்தில் 15" உயரம் கொண்ட டின்னில் நல்லெண்ணை செக்கிலிருந்து (பாங்க் செக் இல்லீங்க, செக்கு- இன்றைய இளைஞர்கள் செக்கை பார்த்திருப்பார்களா) வரும். சாப்பாட்டுக்கு, விளக்கேற்ற, எண்ணைக்குளியல் எல்லாம் அதில் இருந்துதான். இன்று சாப்பாட்டுக்கு மட்டுமே இதயம். விளக்கு ஏற்ற லூஸ் எண்ணைதான். எண்ணைக் குளியல் மறந்தேபோய்விட்டது.

politician எல்லாரும் statesmen ஆகி, அடுத்த தேர்தலை மட்டும் நினைக்காமல் அடுத்த தலைமுறையைக் கருதி திட்டமிட்டு, பட்ஜெட் போட்டால்தான் இந்த வீக்கம் குறையும்.

பாரத மாதாவை கடவுள் காப்பாராக.