Wednesday, August 15, 2007

பவுண்டில் அடைபட்ட கார்கள்.

Photo courtesy: Chicago Tribune

நம்மூரில் தவறான இடத்தில் மேய்ந்த மாடுகளை பவுண்டில் அடைப்பார்கள்.

ஷிகாகோவில் தவறான இடத்தில் நிறுத்தப்பட்ட கார்களை ட்ரக் கொண்டு இழுத்து ஒரு பவுண்டில் அடைத்து, நிருத்தி விடுகிறார்கள். $ 160 கட்டித்தான் காரை மீட்க முடியும்.அதிக வேகம்,சிகப்பு சிக்னலைத் தாண்டி செல்லுதல் எல்லாவற்றிற்கும் காப்ஸ்(cops )டிக்கெட் கொடுத்துவிடுவார்கள். குற்றத்தைப் பொறுத்து ஃபைன் $90 வரை ஆகும். சென்ற ஆண்டு இப்படி வசூலான தொகை $ 210 மில்லியன். டிக்கெட் பெற்றவர்கள் ஒரு க்ளாஸ் வேறு அட்டெண்ட் பண்ணணுமாம்.
ஒரு பெண்மணி தன் காரைப் பார்க் செய்த இடத்தில், ஒரு ஆபீசர் வந்து 4 முதல் 6 p.m. வரை பார்க் செய்ய தடை என்று டிக்கெட் எழுதினார். அப்படி ஒரு சைன் இங்கு இல்லையே என்றால் அவர்,"முன்பு இருந்தது, ஆனால் 2 ஆண்டுகளாக இல்லை" என்றாராம். பிறகு ஏன் டிக்கெட் எழுதினீர் எனக்கேட்டால்,"என் அதிகாரி தினமும் நான் டிக்கெட் எழுத வேண்டும் என்கிறார், நீங்கள் அப்பீல் செய்யுங்கள்" என்றார். $93 கோர்ட் ஃபீஸ் கட்டுவதை விட $50 ஃபைன் கட்டுவது என்று முடிவெடுத்தார்.
நம்ம ஊர் மாதிரி இருக்கிறதே எனத் தோன்றுகிறது. ஆனால் வசூல் எல்லாம் ட்ரெஷரி சென்றடைகிறது.

நம்ம மரப்பாச்சி, செப்பு, தலையாட்டி பொம்மைகளை எக்ஸ்போர்ட் செய்வோமா?

சைனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொம்மைகள் எல்லாம் அமெரிக்காவில் திரும்பப் பெறப் படுகின்றன. பெயிண்டில் ஈயம் அதிகம் காணப்படுகிறதாம். சில வகை பொம்மைகளில் உள்ள சின்ன காந்தங்களை குழந்தைகள் விழுங்கிவிட்டால் வயிற்றைக் கிழித்துவிடுமாம். என்ன பயங்கரம்?
நான் ஊருக்குச் செல்கையில் என் பேத்திகளுக்கு துணியால் ஆன ஸாப்ட் டாய்ஸ்தான் வாங்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.
சீன அரசும் இப்போது தரக்கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகிறதாம். நம் ஊரில் செய்யப்படும் மரப்பாச்சி, செப்பு, தலையாட்டி பொம்மைகளை எல்லாம் பெயிண்ட் அடிக்காமல் (நம்ம பெயிண்டில் ஈயம் அளவு தெரியாதே) ஏற்றுமதி செய்தால் என்ன என்று தோன்றுகிறது.இங்கு வாழும் இந்தியக் குழந்தைகளுக்குக் கூட அவை தெரியாது.

Tuesday, August 14, 2007

ஆக, பதினைந்தன்று என்ன செய்வீங்க?

வருடாவருடம் தீபாவளி போல சுதந்திர தினமும் விடுமுறையும் வந்து விடும். எல்லா டிவியிலும் எதைப் பார்க்க என்று நம் சுதந்திரத்தைப் பறிக்கும் அளவு நிகழ்ச்சிகள்.
முன்னெல்லாம் சுதந்திர தினத்தன்று சென்னை கடற்கரையில் கவர்னரும் நெல்லை வ உ சி மைதானத்தில் கலெக்டரும் கொடியேற்றுவதைப் பார்க்க கூட்டம் அலைமோதும். இப்போது கிரிக்கெட் மாட்ச்கூட வீட்டிலிருந்தே பார்க்கலாம்.
எங்கள் வீட்டில் நான் டிவி பார்க்கையில் தேசீய கீதம் இசைக்கும் போது எழுந்து நிற்பேன். வீட்டில் எல்லோரும் முதலில் சிரித்தாலும், இப்ப எழுகிறார்கள்.
அப்ப நீங்க?