Friday, December 31, 2010

சாலை பாதுகாப்பு வாரம்

ஜனவரி முதல் வாரம் ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு வாரம் அனுசரிக்கிறோம். சாலைக்கே பாதுகாப்பு இல்லை. போன மாதம்தான் செப்பனிடப்பட்ட சாலையை இன்று இ.பி காரர்கள் வந்து தோண்டி சாலை குறுக்கே பள்ளம் உண்டாக்குவார்கள். நாளை டெலிபோன்காரர்கள் அவர்கள் பங்குக்கு வேறிடத்தில் தோண்டுவார்கள். கட்சிக்காரர்கள் வந்து உங்கள் வேலையை சீக்கிரம் முடியுங்கள். மந்திரி வருகிறார். நாளை நாங்கள் ஆர்ச் நிறுத்த தோண்டணும் என்பார்கள். மீண்டும் செப்பனிட எத்தனை நாளாகுமோ?

நமக்கு நாமே என்பது போல நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். கொழும்பிலிருந்து வந்த என் சகலை, அங்குள்ள சாலை விதி புத்தகம் தந்தார். அதன் பெயர், "வீதி ஒழுங்கு". அந்த ஒழுக்கம் ரொம்ப முக்கியம்.

* இடது புறமாகவே செல்லுங்கள்.


* வலது புறமாகவே முந்துங்கள்.


* மிதமான வேகத்தில் செல்லுங்கள். இன்று நால்வழி சாலை.
எல்லா ஊர்களிலும் பை பாஸ். அதிவேகம் செல்லும் புதுப்புது கார்கள்.

என் நண்பர் ஒருவர் தூத்துக்குடி - சென்னை 7 மணி நேரத்தில் போய் விட்டேன் என்றார். என்ன அவசரம்? ஹைவேயில் வேகக் கட்டுப்பாடு கட்டாயம் தேவை. மணிக்கு 100 கி.மீ வேகம் போதுமே.
* இரவில் அதிக கவனம் - ஹைவேயில் எதிரே வண்டி வருகையில் ஹெட்லைட் லோ பீம் போடுங்கள். நான் டி.வி.எஸ்ஸில் இருந்தபோது கம்பெனி டிரைவர் கந்தசாமி சொன்னார். எங்கள் பாஸ் திரு.டி.எஸ்.கிருஷ்ணா அவர்கள் எதிரே மாட்டு வண்டி வந்தால், டிரைவர் பின்னந்தலையில் அடித்து 'மாடு கண் அவிஞ்சு போகும். டிம் போடுடா' என்பாராம் (அப்ப எல்லாம் ஹெட்லைட் பல்ப் 60 வாட்ஸ்தான். இன்று ஹேலொஜென் பல்ப் 100- 125 வாட்ஸ்)

இன்னும் சொல்லலாம். வீதி ஒழுங்கு எல்லோரும் அறிந்ததுதான். அதனால் ஒழுங்காக செல்லுங்கள்.

சுருக்கமாக: START SOONER, DRIVE SLOWER, LIVE LONGER.