Saturday, August 2, 2008

கெட்டிக்காரன் யார்? ரோல் பிலிம் கேமராவா, டிஜிட்டல் கேமராவா?

பாக்ஸ் கேமரா, ஃபோல்டிங் கேமரா, ட்வின் லென்ஸ் ரிஃப்ளெக்ஸ், 35எம்.எம் கேமரா, ரேஞ்ச் ஃபைண்டர், எக்ஸ்போஷர் மீட்டர்,, சிங்கிள் லென்ஸ் ரிஃப்ளெக்ஸ், வைட் ஆங்கிள்/டெலிபோட்டோ லென்ஸ், ஜூம் லென்ஸ், இப்படி எல்லாம் புதுப் புது
கண்டுபிடிப்புகளுடன் கேமரா சென்ற நூற்றாண்டில் வளர்ச்சி அடைந்திருக்கிறது.
என்றாலும் அன்று போட்டோ நன்றாக அமைந்தது "க்ளிக்" செய்த
கெட்டிக்காரர்களால்தான்.

அப்படி ஒரு கெட்டிக்காரர் என் பெரிய அண்ணன்.

காஸ்ட்லி ஹாபி என்று கருதப்பட்ட அந்நாளில் தன் ரோலில் ஒரு ஃப்ரேம் கூட வீணாகாமல் அழகான படங்களை தன் Rolleiflex f 2.8 கேமராவில் எடுப்பார். 35எம் எம் கேமராவில் 36 படம் எடுக்கும் வரை காத்திருக்கக் கூடாது, அதற்காக படங்கள் எடுத்துத் தள்ளக் கூடாது என்றும் நெகட்டிவ் சின்னதானதால் என்லார்ஜ்மெண்ட் நன்றாக இராது என்பார். அதனால்
6cm*6cm ஸ்கொயர் நெகடிவ் தரும் 120 ரோல் தான் அவருக்குப் பிடிக்கும். ரோல் பிலிமில் இல்லாத மெகாபிக்ஸலா? தன் படங்களுக்கு பெரிய என்லார்ஜ்மெண்ட் போட்டு வாங்குவார்.

எங்கள் வீட்டு கல்யாணம், பிற விசேஷங்களில் எல்லாம் போட்டோ எடுத்து, ரோலை தானே டெவலப் செய்வார். ப்ரிண்ட்/என்லார்ஜ்மெண்ட் மட்டும்தான் ஸ்டூடியோவில்.
திருநெல்வேலியில் அன்று பிரபலமான ஸ்டூடியோ அதிபர்கள் எல்லோரும் அண்ணனிடம் கருத்துக் கேட்டு தங்கள் போட்டோகிராபர்களிடம் சொல்வார்கள். எங்கள் வீட்டில் எல்லோருக்கும் போட்டோ எடுக்க கற்றுத் கந்தார். எனக்கு அவர் முதலில் வாங்கித் தந்தது கோடக் ப்ரொளனி பாக்ஸ் கேமரா. 620 ரோலில் 6*9cm சைஸில் 8 படம் எடுக்கும்.

போட்டோகிராபியை தொழிலாக எண்ணியிருந்தால், தீரஜ் செளடா (பம்பாய்), சந்தாமியான் (மெட்ராஸ்) போல புகழ் பெற்றிருப்பார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் 1960களில் நடந்ததே (வருஷம் நினைவில்லை,1961- 65 இருக்கலாம்) அப்போது கும்பாபிஷேக சிறப்பு மலரை கோவில் போட்டோக்களுடன் வெளியிட, குழுவின் தலைவர் திரு.பி.டி.ராஜனிடம், கோவில் நிர்வாகத்தில் இருந்த திரு.பழனி(எங்களூர்க்காரர்) அண்ணன் பற்றி அவரிடம் சொல்ல, பி.டி.ஆரின் அழைப்பின் பேரில், இரண்டு கேமராக்கள், ஃப்ளட் லைட், ஃப்ளாஷ், B&W/கலர் ரோல் பிலிம்களுடன் golfer உடன் செல்லும் caddie போல அண்ணனுடன் நானும் சென்றேன்.
அன்று அவர் எடுத்த படங்களில் என்னிடம் உள்ள சிலவற்றைப் பாருங்கள்.






அவருடைய கேமராக்கள்- 8எம் எம் மூவி கேமரா கூட உண்டு- நெகட்டிவ் ஆல்பம். போட்டோ ஆல்பம் எல்லாவற்றையும் அண்னன் மகன் பத்திரமாக வைத்திருக்கிறான்.

இன்று எத்தனை டிஜிட்டல் கேமராக்கள், எத்தனை மாடல்கள். அவை என்னவெல்லாம் செய்கின்றன? ஷட்டர் ஸ்பீட், அபெர்ச்சர் எல்லாம் செலக்ட் செய்கிறது, பட்டனை தள்ளினால் ஜூம் ஆகிறது. பிலிம் ஸ்பீட்(I S O)லைட்டைப் பார்த்து அதுவே எடுத்துக்கொள்கிறது. படத்தை நாம் உடனே பார்த்துக்கொள்ளலாம். ரோல் பிலிம் வாங்க வேண்டியதே இல்லை. பாட்டரி சார்ஜ் நிலையில் 300 படங்கள் எடுக்கலாம்.

அன்று குரூப் போட்டோ எடுக்க நேர்கோடாக seat போட்டால் ஒரங்களில் உள்ளவர்கள் முகம் ஃபோகஸ் ஆகாது என்று வில் (arc) வடிவில் seat போடுவார்கள். கேமராவை tripod-ல் மாட்டி, போட்டோகிராபர் தன் மேல் கருப்புதுணியை போர்த்திக்கொண்டு, க்ரவுண்ட் க்ளாஸில் ஃபோகஸ் செய்து, ப்ளேட் பிலிமை சொருகிவிட்டு, லென்ஸில் அபெர்ச்சர் செட் பண்ணி, ஸ்மைல் சொல்லி, கையால் லென்ஸ் cap-ஐ எடுத்து மூடிவிடுவார்(ஷட்டர் ஸ்பீட் லென்ஸில் கிடையாது). அந்த படங்கள் இன்னும் எவ்வளவு அழகாக இருக்கிறது?

புதிய டிஜிட்டல் கேமரா சில, முகங்களை தனித்தனியாக ஃபோகஸ் செய்து விடுமாம். யாராவது அசைந்தால் கூட ஷேக் இல்லாமல் படம் தருமாம். சிரிப்பதை பார்த்து தானே க்ளிக் செய்து விடுமாம். கம்போஸ் செய்வது மட்டும் தான் நம் வேலை.

அப்படியானால் இப்ப டிஜிட்டல் கேமராதானே கெட்டிக்காரன்?

அண்ணன் இருந்தால் இன்று எந்த டிஜிட்டல் கேமரா வாங்குவார் என்று எண்ணினேன். கூகிளில் பார்த்தபோது எனக்கு ஆச்சரியம். அவருக்கு பிடித்த ட்வின் லென்ஸ் ரிஃப்ளெக்ஸ், ஸ்கொயார் ஃபார்மட் - ரோலீ பிரியர்களுக்காகவே செய்தது போல
rollei MINI DIGI உள்ளங்கை அளவில் இருக்கிறது. இதுதான் அவருக்கு ரொம்ப பிடிக்கும்.



இந்த மினிடிஜி, அண்ணனுக்கு என் சமர்ப்பணம்

Thursday, July 31, 2008

எதிலும் கையெழுத்திடும் முன் நன்றாக படித்துப் பாருங்கள்

திரு.கே.வைத்தியநாதன் ,தி.நகர், அப்போலோ டைம்ஸ் (1.8.08) நாளிதளில் எழுதியிருக்கிறார்.
சில வருஷங்களுக்கு முன்னால் லிப்டன் இந்தியா லிட். தங்கள் சேல்ஸ்மன் வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு டீ தூள் சப்ளை செய்யாததால் அவர்கள் எல்லோரும் ப்ரூக் பாண்ட்க்கு மாறிவிட்டார்கள் என்று அவர் மீது ஒரு குற்றச்சாட்டு எழுதியதாம். இந்த வழக்கில் வைத்தியநாதனின் சகோதரர், திரு.கே. சிவராமகிருஷ்ணன் குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் ஆஜரானாராம்.
குற்றச்சாட்டு: "சேல்ஸ்மன் பாண் ஷாப்களுக்கு டீ தூள் சப்ளை செய்யவில்லை. அதனால் அவர் தண்டிக்கப்பட வேண்டும்"
தன் வாதத்தில் வக்கீல், சேல்ஸ்மன் பாண் (PAWN)ஷாப்களுக்கு செல்லாததில் தவறே இல்லை. அவருடைய வேலை டீ தூள் தரவேண்டியது பான் (PAN)ஷாப்களுக்குத்தான், என்று கூறினாராம். பிறகென்ன. ஒரு எழுத்துப் பிழையால் சேல்ஸ்மன் குற்றவாளி அல்ல என்று தீர்ப்பானதாம்.

(நன்றி: அப்போலோ டைம்ஸ்- 1 ஆக.08 நாளிதழ்)