Wednesday, December 5, 2007

கல்யாண சமையல் சாதம்

கல்யாண சமையல் சாதம்
காய்கறிகளும் பிரமாதம்
சாப்பிட்ட பிறகு பார்த்தால்
எல்லா இலையிலும் மீதம்.

முன்னெல்லாம் கல்யாண வீட்டில் முகூர்த்தம் முடிந்ததும் இலை போட்டு சாப்பிட அழைப்பார்கள். பாயில் உட்கார்ந்து நாமே தண்ணீர் விட்டு இலை கழுவியதும் உப்பு, ஊறுகாயில் ஆரம்பித்து பரிமாறுவார்கள். ஒரு "நாலு குழி சட்டி"யில் பொரியல், கூட்டு, அவியல், பச்சடி என்று கேட்டு அதனதன் இடத்தில் இடுவார்கள். சாப்பிடும்போதுஇலையைப் பார்த்து மீண்டும் பரிமாறுவார்கள். நாம் வேண்டியதை வாங்கிக் கொள்ளவும் பிடிக்காததை ஒதுக்கி விடவும் முடியும். இலையில் எதுவும் வீணாகாமல் போகும்.

எங்கள் வீட்டுக் கல்யாணப் பந்தியில் என் அருகே அமர்ந்த என் அண்னனின் நண்பர் திரு.கந்தசாமி அவர்கள் என்னிடம் சொன்னார், " உன் இலையில் மிளகாய், கரிவேப்பிலை, முருங்கைக்காய் தோல் ஆகியவைதான் இருக்கலாம். வேறு எதுவும் மிச்சம் வைக்கக்கூடாது" என்றார். அன்றிலிருந்து 45 வருடங்களாக அப்படித்தான் சாப்பிடுகிறேன்.

இன்று எதிலும் அவசரம்.முகூர்த்தம் முடியும் முன்பே இலையில் எல்லா கறிகளும் பரிமாறி, நாம் அமர்ந்தபின் சாதம் கொட்டுவார்கள். ஆமாம், பெரிய அகப்பையில் சாதம் இடுவார்கள். இரண்டாவது ரவுண்டு வர அவர்களுக்கு பொறுமை இல்லை. காரணம் பரிசாரகர்கள் யாருக்கும் இந்த வேலைக்கு வேண்டிய அனுபவமும் கரிசனமும் கிடையாது. சமையல் கான்ட்ராக்டர்களும் அவர்களுக்கு ட்ரெயினிங் கொடுத்து அனுப்புவது இல்லை. கடைசியில் எல்லா இலைகளிலும் எல்லா பதார்த்தங்களூம் மீதமாகி குப்பையாக வீசப்படுகின்றன. விருந்தினர்களும் வீணாக்காமல் சாப்பிடும் வழக்கம் கொள்ள வேண்டும்.

பஃபே ஸ்டைலிலும் இப்படித்தான். ஒருமுறை, சர்வர் அவியல் ஒரு பெரிய கரண்டியில் எடுத்தான். நான் கொஞ்சம் போதும் என்றால் அவன் கொஞ்சம்தான் விழும் என்றான். நான் கரண்டியை அவனிடமிருந்து வாங்கி முழுவதையும் சட்டியில் தட்டிவிட்டு பாதி கரண்டி மட்டும் எடுத்துக்கொண்டேன்..

எல்லா சமயமும் இப்படி உணவு வீணாவதைப் பார்க்கும் போது மிகவும் சங்கடமாக உள்ளது. அளவாகப் பரிமாறி எல்லோரையும் நிறைவாக சாப்பிட வைத்து, மிஞ்சும் உணவை அருகில் உள்ள அனாதை விடுதியிலோ, முதியோர் இல்லத்திலோ கொடுத்தால் அவர்களும் மணமக்களை வாழ்த்துவார்களே? ஏன் செய்யக்கூடாது?