Thursday, February 28, 2008

ஹாப்பி பெர்த்டே லீப்பர்ஸ்

பிப்ரவரி 29 அன்று பிறந்தவர்கள்
நான்கு ஆண்டுக்கொரு முறைதான்
பிறந்த நாள் கொண்டாடுவார்களா?
பிப்ரவரி 28 அல்லது மார்ச் 1 அன்று
என நினைக்கிறேன். எனக்குத் தெரிந்து
மொரார்ஜி தேசாய் ஒருவர்தான்.
உங்களுக்கு யாராவது தெரியுமா?
பிப்ரவரி 29 அன்று
பிறந்த அனைவருக்கும்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

சகாதேவன்

எம்.ஆர்.ராதா தெரியும், எம்.கே.ராதா தெரியுமா?

மதராஸ் கந்தசாமி முதலியார் க்ரிஸ்டியன் காலேஜில் பி.ஏ ஆங்கில இலக்கியம் படித்தவர். கல்லூரி நாட்களிலேயே ஷேக்ஸ்பியர் நாடகங்களை ப்ரின்ஸிபல் மில்லருடைய மேற்பார்வையில் அழகாக ஆங்கிலத்தில் பேசி நடிப்பாராம். பின் தமிழ், ஆங்கில நாடகங்களை மேடைகளில் நடித்துப் புகழ் பெற்றார். நாடகம் எழுதுவதுலும், நடிப்பு சொல்லிக்கொடுத்து டைரக்ட் செய்வதிலும் வாத்தியார் என்று அழைக்கப் பட்டார்.
கந்தசாமி முதலியார் தன் ஒரே மகன் எம்.கே.ராதாவை தமிழ் நாடக மேடைக்கு அறிமுகம் செய்தார். தான் பார்க்கும் ஆங்கிலப் படங்களுக் கெல்லாம் ராதாவையும் அழைத்துச் சென்று மேடை நடிப்புக்கும் சினிமா நடிப்புக்கும் உள்ள வித்தியாசங்களை விளக்கி பின் ராதா சினிமாவில் வரக் காரணமானார். ராதா நடித்த முதல் படம் எல்லிஸ் ஆர்,டங்கன் டைரக்ட் செய்த சதி "லீலாவதி". எம்.ஜி.ஆர்., டி.எஸ்.பாலையா கூட இந்தப்படத்தில் புதியவர்கள். முதலியார் பற்றி ஹிந்து நாளிதழில் 15/02/08 அன்று ராண்டார் கை எழுதிய கட்டுரையில் படித்தேன்.
பிறகு எம்.கே.ராதா ஜெமினி ஸ்டூடியோவில் சேர்ந்து பல படங்களில் நடித்தார். 'சந்திரலேகா', 'அபூர்வ சகோதரர்கள்' (இரட்டை வேடம்- கமல் நடித்தது இல்லீங்க), 'சம்சாரம்' எல்லாம் ஜெமினியின் முத்திரைப் படங்கள்
கத்திச் சண்டை-இப்போது ஆ, ஊ என்று கத்தி சண்டை போடுகிறார்களே அது இல்லை.-வாள் சண்டை. சந்திரலேகா டைட்டிலில் "ஃபென்ஸிங்"-ஸ்டண்ட் சோமு என்று வரும். ரஞ்சனுடன் சந்திரலேகாவிலும், நாகேந்திர ராவுடன் அ.சகோதரர்களிலும் ராதா போட்ட ஃபென்சிங் போல அதற்குப் பிறகு எந்தப் படத்திலும் நான் பார்க்கவில்லை.ஆங்கிலப்படங்களில் எரால் ஃப்ளின் போட்டது போல.
சந்திரலேகா ரிலீஸ் க்கு முன் எங்கள் ஊர் கொட்டகையில் சிங்கிள் புரொஜெக்டர்தான். படம் 3 1/2 மணி நேரம் ஓடும்.அதனால் ட்புள் புரொஜெக்டர் வாங்கி விடுங்கள் என்று தயாரிப்பாளர், டைரக்டர் எஸ்.எஸ்.வாசன் சொன்னதால் டபுள் புரொஜெக்டர் வந்தது என்று என் அப்பா சொல்லக்கேட்டிருக்கிறேன். படங்களின் ஸ்டில் எதுவும் கைவசம் இல்லை. விரைவில் தேடி எடுத்து காட்டுகிறேன்.
அதன் பிறகு எம்.கே.ராதா, 'புதையல்', 'அம்பிகாபதி', 'வணங்காமுடி' என பல படங்களில் அப்பா வேடத்தில் நடித்திருக்கிறார்.

சகாதேவன்

Wednesday, February 27, 2008

தமிழ் எழுத்துக்கு ஒரு பேரிழப்பு

இன்று காலை எழுந்ததும் வலையில்
பார்த்த செய்தி சுஜாதா அவர்களின் மறைவுதான்.
அவருடன் பேசியவர்கள், அவர் எழுதியதைப் படித்தவர்கள்,
எனப் பலரின் அனுபவங்களைப் படிக்க முடிந்தது.
மிகச் சிறந்த எழுத்தாளர். திரையிலும் சில நல்ல விஷயங்கள் சொன்னார்.
சிவாஜி படத்தில் இரு பெண்களுக்கு அங்கவை, சங்கவை என்று
பெயர் சூட்டியதற்காக அவரையும் சாலமன் பாப்பையாவையும்
வலையில் எப்படியெல்லாமோ திட்டித் தீர்த்தார்கள்,
நகைச்சுவை உணர்வே இல்லாதவர்கள்.
இன்று அவர்களே சுஜாதாவைப் புகழ்ந்து எழுதுவார்கள்.
அந்த இரு பெயர்களும் பலருக்குப் புதுசு.
சின்ன வயதிலேயே ஒளவையார் படம் பார்த்ததால்
என் போன்றவர்களுக்குத் தெரியும்.
அவர் மறைவு
தமிழ் எழுத்துக்கு ஒரு பேரிழப்பு.
சகாதேவன்