அவர் அரசியலுக்கு வருவாரா என்று சில ஆண்டுகளாகவே பல எதிர்பார்ப்புகள். போனவாரம் 12/12 அன்று அவர் பிறந்தநாள் விழா வள்ளுவர் கோட்டத்தில் நடத்த அனுமதி மறுக்கப் பட்டதால் ஒய்.எம்.சி.ஏ அரங்கில் பொது விழாவாக நடந்ததாம். விழாவில் பேசிய ரஜினி, "யார் ஆளணும், யார் ஆளக் கூடாதுன்னு ஆண்டவன் முடிவு செய்வான்..."என்று அருணாசலம் ஸ்டைலில்,......"ரஜினி ஆளுவான்" என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்.
அரசியலில் பெரிய ஆளாகி அமைச்சர் ஆக சினிமாதான் முதல் படி என்று ஏன் நினைக்கிறார்கள். எம்ஜிஅர் மலைக்கள்ளனில் "எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" என்று பாடினார். பின் "நானே போடப்போறேன் சட்டம் பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்" என்றார். "நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இனி ஏழைகள் வேதனை படமாட்டார் என்றும் சொன்னார். திமுகவில் இருந்தே படங்களில் சொல்லி பிறகு அதிமுக தொடங்கி மக்கள் ஆதரவில் சிஎம் ஆனார்.
முதல்வன் படத்தில் அர்ஜுன் போல வி.என்.ஜானகியும் ஒருநாள் முதல்வர் ஆனார். ஜெயலலிதா பல முறை முதல்வர் ஆகி கட்சியையே அனைத்து இந்திய அம்மா திமுக ஆக்கி விட்டார்.
விஜயகாந்த் தன் படங்களில் சண்டைக் காட்சிகளில் பிரமாதமாக நடிப்பார். சட்டசபையில் பேசவேண்டிய வசனம் எழுதித் தரவும் டைரக்ட் செய்யவும் ஆளில்லை. குடித்தால் என்ன தப்பு என்று பொது இடங்களில் பேசி மதிப்பைக் கெடுத்துக் கொள்கிறார். சரத்குமார், நெப்போலியன் எல்லாம் என்ன செய்யப் போகிறார்களோ?
கலைஞர், 1954லிலேயே "அண்ணா நீதான் நாட்டை ஆள வேணும்" என்று வசந்தன் (காகா ராதாகிருஷ்ணன்) மனோகரனிடம் (சிவாஜி கணேசன்) சொல்வதாக வசனமெழுதினார். 1967ல் அது நடந்தது. அண்ணாவுக்குப் பிறகு சிஎம் ஆனவர் மது முதல் பல திட்டங்களைக் கொண்டு வந்தார். பிறகு அம்மாவும் அவரும் மாறி மாறி சிஎம் ஆகி பலத்த போட்டி நடக்கிறது.. வசனகர்த்தா, பாடலாசிரியர், தயாரிப்பாளர் என்று சினிமாவில் கலைஞரின் உழைப்பை நூற்றாண்டு விழாவில் அம்மா ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். கலைஞரின் குடும்பத்திலும் வாரிசுகள் பதவி சண்டை போடுகிறார்கள்
சிவாஜி கணேசனும் அரசியலில் நுழைந்து செய்வதறியாமல் கொஞ்சம் இழப்புக்கு பின் விலகிக் கொண்டார். ஜெமினி கணேசனோ இந்த வேலையே வேண்டாம் என்று நிறைய சொத்துக்கள் வாங்கி நிம்மதியானார். வடிவேலு பாவம், தேர்தல் பிரச்சாரம் செய்ததால் ரெண்டு வருஷமாக பட வாய்ப்புக்கள் இழந்து நொந்து போனார்.
ரஜினியை விட்டுருங்க. அரசியல் வேண்டாம்.அவரைத் தூண்டாதீர்கள். நல்ல பேரும் புகழும் சம்பாதித்து விட்டார். மந்திரியாக மக்களுக்கு என்னென்ன செய்யணுமோ அதை ரஜினியாகவே இருந்து செய்து கொண்டு, சினிமாவில் தொடர்ந்து, இன்று பிறக்கப் போகும் பெண் குழந்தையுடன் 15 வருஷம் கழித்தும் ஹீரோவாக நடிக்கணும்