Friday, February 10, 2012

"ஆல் இஸ் வெல்"

"ஆல் இஸ் வெல்"

ஐந்து மாதமாச்சு வலையில் எழுதி. என்ன காரணம் சொல்ல? பிரச்னை, கவலைதான். யாருக்குத்தான் இல்லை. தினம் படிக்கும்/டிவியில் பார்க்கும் விபத்து, கொலை, ஊழல் பற்றிய செய்திகள் வேறு.



சென்ற மாதம் நண்பர்களுடன் சென்னை வந்தபோது அவர்களுடன் "நண்பன்" தியேட்டரில் பார்த்தேன். மாணவன் பன்னீர்செல்வம், தன் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாததால் படிக்க முடியவில்லை, அதனால் மார்க் கிடைக்கலை என்று சொல்ல, பிரின்சிபல் வைரஸ், "தினம் சாப்பிடாமல் இருந்தியா? குளிக்காமல் இருந்தியா, ஏன் படிக்க மட்டும் முடியவில்லை?" என்று கேட்டாரே. நாமும் தினம் எல்லா வேலையும் செய்கிறோம், ஏன் ப்ளாக் எழுதக்கூடாது என்று நினைத்து விஜய் சொன்ன மாதிரி,


'ஆல் இஸ் வெல்', 'ஆல் இஸ் வெல்'


சொல்லிக் கொண்டு வந்து விட்டேன்.

"ஒய் தி கொல வெறி டா" என்று எல்லோரும் கேட்டுவிட்டார்கள். சினிமா பார்த்துதான் அப்படி செய்தேன் என்று சொன்னான். சினிமா மட்டும்தான் மக்களை கெடுக்கிறதா?
முன்னாளில் வந்த சினிமாக்களை கதை, பாடல்கள், இசை, என்று எல்லா வயதினரும் ரசிக்க முடிந்தது. வழக்கம் போல இன்றும் ஒரு பழைய பாட்டு சொல்கிறேனே:

மாதா பிதா குரு தெய்வம் - அவர்
மலரடி தினம் தினம் வணங்குதல் செய்வோம்
மாதா பிதா ........

ஓதாதிருப்பது தீது - நாம்
ஒழுங்குடன் பள்ளிக்கு செல்வோம் தப்பாது
ஓதி உணர்ந்தது போலே என்றும்
உண்மையாய் நடந்து
உயர்வோம் மண் மேலே
மாதா பிதா......
காலையில் எழுந்ததும் படிப்பு, பின்பு
காலைக் கடனையும் உணவையும் முடித்து
நூலைக் கையிலே எடுத்து பள்ளி நோக்கி
நடந்து கற்பதே சிறப்பு
மாதா பிதா......

தெய்வம் தொழுதிட வேண்டும் - நம்
தேசத்தின் மீதன்பு செலுத்திட வேண்டும்
கைத்தொழில் பழகிட வேண்டும் - மகாத்மா
காந்தியின் சொல் படி நடந்திட வேண்டும்
மாதா பிதா.....

நான் பெற்ற செல்வம் படத்தில் அக்கா ஸ்தானத்தில் தங்கள் வீட்டில் வளரும் சிறுவனை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் சிறுமி பாடும் பாட்டு. ஜி.ராமநாதன் இசையில் ஏ.பி.கோமளா பாடிய ஒரு அருமையான பாட்டு. எழுதியவர் யார் என்று நினைவில்லை.

15 வயது சிறுவன் செயலுக்கு யார் காரணம்? மாதாவா, பிதாவா, குருவா என்று எல்லோரும் பல இடங்களில் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். கல்வியே ஒரு வியாபாரம் ஆகிவிட்ட நிலையில் தெய்வம்தான் ஏதாவது செய்ய வேண்டும்.