Thursday, January 13, 2011

சந்தையிலே விற்கும் பொருளல்ல கீதம்...

கோகிலவாணி என்று ஒரு படம் வந்தது தெரியுமா? ஜி.ராமநாதன் இசையில் சீர்காழி கோவிந்தராஜனும் ஜிக்கியும் பாடிய அருமையான, மறக்க முடியாத பாடல்கள். வில்லன் நடிகர் எஸ்.ஏ.நடராஜன் (மந்திரிகுமாரி)தயாரித்தது. தாம்பரம் லலிதா, ரகுவீர் ஜோடியாக நடித்தது. ஏனோ படம் நன்றாக ஓடவில்லை.
திரைக்கு வந்து பல ஆண்டுகள் ஆனாலும் டிவியில் கூட பார்க்க முடியவில்லை.

சீர்காழி பாடும் இந்தப் பாட்டைப் பாருங்களேன்.

சரச மோகன சங்கீதாம்ருத சாரலில்
மாங்குயில் கூவுது பார்
சுவையில் தேனிசை கேட்பவர் யாவரும்
சித்திரம் ஆகும் விசித்திரம் பார்

சரச மோகன......

சந்தையிலே விற்கும் பொருளல்ல கீதம்
சிந்தையிலே எழும் ஜீவ லயம்
சுந்தர வான்கவி சுகக்குரலில் எழும்
சுதந்திர நாதமே சங்கீதம்

சரச மோகன...

மந்தை மேகங்கள் மாமழை பொழியும்
விந்தையாய் மயில் வளைந்தசைந்தாடும்
மந்த மாருதம் மலரிசை பாடும்
அந்த கீதமே அமர சங்கீதம்

சரச மோகன.....


ஜிக்கியின் ஹம்மிங்குடன் சீர்காழி பாடும்
"திருவே என் தேவியே வாராய், தேனார் மொழி,
மானார் விழி என்னைப் பாராய்"
,
ஜிக்கி பாடும்
"அழகோடையில் நீந்தும் இள அன்னம்,
உமதெண்ணம்",

என இனிமையான பாடல்கள் எஸ்.டி.சுந்தரம் எழுதியது.

பாலஸ்-டி-வேல்ஸ் தியேட்டரில்தான் படம் ஓடியது. நெல்லையில் மூடப்பட்ட சில தியேட்டர்களில் ஒன்று(எங்களுடையதுதான்). பாட்டு சீன்கள் நேரத்தில் போய் பலமுறை பார்த்தேன். நானானிக்கும் இந்தப் பாட்டு ரொம்பப் பிடிக்கும்.
டிஸ்க் கிடைத்தால் வாங்கி கேட்டுப் பாருங்கள்.