Friday, July 4, 2008

ப்ளெஷர் கார் ?

ரொம்ப வருஷத்திற்கு முன், 'அவர் ப்ளெஷரில் வந்தார்' (அதாவது காரில் வந்தார்) என்பார்கள். காரில் பயணிப்பதும் கார் ஓட்டுவதும் மிகுந்த ப்ளெஷராக(மகிழ்ச்சியாக) இருந்தது.

இன்று ஜனத்தொகைக்குப் போட்டியாக கார்த்தொகை பெருகிக்கொண்டே போகிறது. பன்னாட்டு கார் உற்பத்தியாளர்கள் இந்தியாவைத் தேடி வந்து கார் தயாரிக்க தொடங்கிவிட்டார்கள். அவர்கள் நாட்டை விட இங்கு லேபர் மலிவாக இருப்பதும் ஒரு காரணம்.

இருக்கும் அதே சாலையில் புதிது புதிதாக கார்கள், பஸ், லாரி, மோட்டார்பைக் எல்லாம் எதிரும் புதிருமாக கடும் வேகத்தில் செல்வதும், முந்த முயல்வதுமாக இருப்பதால் தினமும் விபத்துக்களும் உயிரிழப்புகளும் நேர்கின்றன.

நால்வழிச்சாலை போடுகிறோம் என்று அசோகர் அந்த நாளில் நட்ட சாலையோர மரங்களை எல்லாம் வெட்டித் தள்ளி அகலப் படுத்தி விட்டாரகள். ஆனால் சாலைப் பணிகள் விரைந்து முடியவில்லை.

மதுரைக்கு நான் என் பியட் காரில் 80 கிலோமீட்டர் வேகம் தாண்டாமல் 2 மணி, 45 நிமிடங்களில் செல்வேன். இன்று இனோவாவில் 3 மணி 15 நிமி. ஆகிறது. இப்போதும் 80கிமீ தாண்டுவதில்லை. சாலையில் தார் வேலை முடியாததால் டயர் கெட்டுவிடக் கூடாதென்று பல இடங்களில் லோயர் கியரிலேயே செல்ல வேண்டி இருக்கிறது. முந்த முயலும் பஸ் கார் எல்லாவற்றிர்க்கும் வழி விடுவேன். ஆனால் எதிர் வரும் கார்கள் அசுர வேகத்தில் வலது புறமாக-நம் லேனில்-மற்ற வண்டிகளை முந்திக்கொண்டு வரும் போது நான் ஒதுங்கி நின்று வழி விடவேண்டும்.

நாலைந்து பேர் செல்லும் போது, காரில் எனக்கு எப்போதும் செளகரியமான சீட், ட்ரைவர் சீட்தான். ஆனால் கார் ஒட்டுவது இன்று ப்ளெஷராகவே இல்லை. விபத்துக்களை தவிர்க்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 80கிமீ வேகத்திற்கு மேல் எந்த காரும் செல்லக்கூடாது.

ஹைவேயில் நடப்பது கார் ரேஸ் இல்லை. அதில் தோற்றால் எவ்வளவு பெரிய தண்டனை என்பதை எல்லோரும் உணர்ந்தால் தான் கார் ஓட்டுவதும் பயணிப்பதும் மீண்டும் ப்ளெஷ்ர் ஆகும்