Friday, May 8, 2015

   09/05/2015. இன்று எங்கள் அப்பா  நினைவு நாள்,

 அப்பாவை சந்தோஷமாக வைத்திருந்தால் அப்பாவும் நம்மை சந்தோஷமாக வைத்திருப்பார் என்று டெலிபோன் விளம்பரத்தில் பார்த்தோம்.
    அப்பாவை நாங்கள் சந்தோஷமாக வைத்திருந்தோமா தெரியலை. ஆனால் அவர் எங்கள் எல்லோரையும் மிக சந்தோஷமாகவே வைத்திருந்தார்.
 தன் மணிவிழாவுக்கு முன்னே மறைந்த அம்மாவை நினைத்து சோர்ந்து விடாமல் பிள்ளைகள் படிப்பு, கல்யாணம் எல்லாம் பார்த்து பார்த்து செய்து வைத்தார்.
    பெளர்ணமி அன்று இரவு ஆபீஸிலிருந்து வந்ததும் குளித்து விட்டு,  ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு பூஜை செய்வார்.பேரக்குழந்தைகளிடம் பிரியமாக விளையாடுவார்.
      டி.வி.எஸ் அதிபர்கள், ராஜம், கிருஷ்ணா, ரத்னம், ராமச்சந்திரன், யாரும் திருந்நெல்வேலி வந்தால் அவர்கள் வீட்டுக்கு வந்து சந்திப்பதோ, அப்பா டி.வி.எஸ் போய் பார்ப்பதோ தவறியதில்லை. புதிய மாவட்ட கலெக்டர் வந்து பதவி ஏற்ற அன்றே அவரை சந்திப்பார்.
      நெல்லை சங்கீத சபா, மெசானிக் லாட்ஜ், ரோட்டரி க்ளப், போன்ற அமைப்புகளில் தலைவர் செயலர் பதவிகள் வகித்து திறம்பட நடத்தினார்..
        அவர் நினைவில் வாழும்,
 
        சுப்பிரமணியன், பொன்னம்மாள், வடிவேல்முருகன், கல்யாணி . 

.


.

.

Wednesday, March 18, 2015

ஸ்கூல் பஸ்ஸில் ஏறினதும் வகுப்பு தோழிகள் எல்லோரும்
ராஜகுமாரி வந்துவிட்டாள் என்று கேலி செய்ய, வீட்டுக்கு
 வந்ததும், கோபமாகஅம்மாவிடம்,  ஆயிரம் பெயர்கள் இருக்க "ராஜகுமாரி"தான் எனக்கு வைக்க கிடைச்சுதா என்று   கேட்கிறாள்,
 நூடுல்ஸ் விளம்பரத்தில்.

 என் அண்ணன் இசக்கி,  அம்மாவிடம் கேட்டதாக மணி அண்ணன்
சொன்ன தகவல்:- அண்ணன் தம்பிக்கெல்லாம், முத்துவேல், சுப்பிரமணியன், சண்முகம், வடிவேல்முருகன் என்று முருகன் பேரா வைச்சு எனக்கு மட்டும் ஏன் இசக்கி"ன்னு பேர் வைச்சே?
 
இசக்கி அண்ணன்

        அம்மா சொன்னாராம் - "அப்போ நீ என் வயிற்றில் இருந்தாய். அப்பாவுடன் தேவநல்லூர் போய் விட்டு வரும்போது வழியில் பயங்கர வலி.  குழந்தை நல்லபடியாக பிறக்கணும், உன் பேரை வைக்கிறேன் என்று  நம்ம குலதெய்வமான இசக்கி அம்மனிடம் வேண்டிக் கொண்டே வர,  கோவில் தாண்டியதும் வலி பறந்தது. அதான் உனக்கு அந்த நல்ல பெயர்."
   
 'ஆனந்தம்' படத்தில் இங்கே தவசி யாருங்க? ரிஜிஸ்டர் தபால்.அவர் கையெழுத்து போடணும் என்று கேட்டு வரும் தபால்காரரிடம், விஜயகுமார்(தவசி) ரொம்ப நாளைக்கு அப்புறம் என்னை பேர் சொல்லிக் கூப்பிட்டது நீதான் என்று சொல்வாரே அது போல எங்க அப்பாவை "சோமு" என்று பெயர் சொல்லி கூப்பிடுபவர், தாத்தா தவிர, அப்பாவின் பள்ளித் தோழர் ஐயாக்குட்டி முதலியார் மட்டும்தான்.
   ஒருநாள் போன் மணி அடிக்க இசக்கி அண்ணன் எடுத்து -ஹலோ சொல்ல, "சோமு இருக்கானா?" என்று அவர் கேட்க, "சோமு இருக்கானே" என்று வேடிக்கையாக சொல்ல, அப்பாவும் அங்கே வர, பயந்து ஓடி விட்டானாம். அப்பாவுக்கு ஒரே சிரிப்பு.
அன்றாடம் சினிமாவிலும் டிவியிலும் நாம் பார்க்கும் நிகழ்ச்சி, நம் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவூட்டுவதாகவே அமைகிறது பாருங்கள்.

Sunday, March 15, 2015

நெல்லை ம.தி.தா இந்து கல்லூரியின் கல்வி சங்கசெயலர்
திரு.மு.செல்லையாமோட்டார் பைக்கில் வரும் மாணவ மாணவிகள்
 பலரிடம் டிரைவிங் லைசென்ஸ்  இல்லை என்று அறிந்து எல்லோருக்கும் லைசென்ஸ் பெற்றுத்தர விரும்பினார். 
வட்டார போக்குவரத்து அதிகாரி திரு.கு.தங்கவேலு அவர்களை அணுகியதும், அவர் முதலில்  போட்டோவுடன் கூடிய விண்ணப்பம் தருவோம்.  பிறகு  பயிற்சி உரிமம் வழங்குவோம் என்றார். 175 பேரை இரண்டு நாளாக தன் பஸ்ஸில் R.T.O அலுவலகத்திற்கு அழைத்து வந்து விண்ணப்பம் சமர்ப்பணம் செய்தார் செயலர் திரு.மு.செல்லையா
   இந்துகல்லூரியும், நாட்டுநலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்களும், 
வட்டாரப் போக்குவரத்து அலுவலகமும், திருநெல்வேலி மாவட்ட பஸ் உரிமையாளைர்கள் சங்கமும் சேர்ந்து நடத்தும் விழாவாக 14/03/2015 காலை 
11.00 மணிக்கு பேட்டை இந்து கல்லூரியில்,  முன்னாள் கல்வி சங்க செயலாளர் திரு எ.ஏல்.எஸ் நினைவரங்கில் நடந்தது.
ஏ.எல்.எஸ்ஸின் மகன் திரு சு.சண்முகமும் வந்திருந்தார்

    முதலில் திரு நயினா முகமது, உரிமையாளர், சிட்டி டிரைவிங் ஸ்கூல், விடியோ மூலம் விபத்து  நிகழ்ச்சிகளை காட்டி சாலையில் கவனம் எவ்வளவு முக்கியம் என்று சொல்லி, சாலையில் காணும் எச்சரிக்கை, உத்தரவு, தகவல் சின்னங்களின் அச்சுப் பிரதிகளை வழங்கினார்.
   கல்விச் சங்க பொருளாளர், திரு.தளவாய் தீ.ராமசாமி தலைமையில், திரு செல்லையா வரவேற்றார். தன் உரையில், விழாவின் நோக்கம் என்ன என்றும், ஒத்துழைத்த எல்லோருக்கும் நன்றியும் கூறினார், ,  தலைமை உரையில் திரு.தீ.ராமசாமி யும் வாழ்த்துரையில் திரு.ப.தி.சிதம்பரம் இந்துக் கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர், முனைவர்.ப.சின்னத்தம்பி கல்லூரி முதல்வர், முனைவர் நா.ராஜலிங்கம் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைபாளர், திரு.சோ.வடிவேல்முருகன் தி-லி மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்கம், திரு ப.பாலசுப்ரமனியன் வேணி பஸ், ஜனாப்.முகமது அப்துல் காதர், ஜப்பான் பஸ், திரு.சீ.பார்த்தசாரதி சீதாபதி டிரான்ஸ்போர்ட், திரு..ஸ்ரீதர் கே.வி.வி பஸ், 
திரு.டி.சரவணன் கே.எஸ்.ஏ பஸ்- சங்கரன்கோவில்  

ஆகியோர், ஓட்டுனர் உரிமம் , சாலை விதிகள், சிக்கனம், பற்றியெல்லாம் சொன்னார்கள்.
  திருமதி.ஜீ.சசி மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை 1 அவர்கள், தான் காண நேர்ந்த மோட்டார் பைக் விபத்துகளில் பெற்றோர் பட்ட வேதனை பற்றி கூறி பிள்ளைகள் கவனமாக ஓட்ட வேண்டுமென்றார்.

வட்டார போக்குவரத்து அலுவலர் திரு கு.தங்கவேலு, ஓட்டுனர் உரிமமும், திரு.வடிவேல்முருகன் தன் கைப்பட வரைந்த சாலை விதிகளின் பட நகலையும் மாணவர்களுக்கு வழங்கி வாழ்த்திப் பேசினார்.

   திரு.ஜானகிராம் அந்தோணி நன்றி உரையில் திரு.செல்லையாவின் முயற்சியை பாராட்டி, வாழ்த்திய எல்லோருக்கும், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்களுக்கும், தொகுத்து வழங்கிய முனைவர்.கோ.சங்கர வீரபத்திரனுக்கும் நன்றி கூறினார்.
  

Thursday, February 19, 2015

       BASKET BALL விளையாட்டு ஜேம்ஸ் நெய்ஸ்மித் (JAMES NAISMITH) என்ற அமெரிக்கரால் 1891ம் ஆண்டு வடிவமைக்கப் பட்டது. முதல் விளையாட்டு தொடங்கிய போது, "NAISMITH GAME" என்று பெயரிடலாம் என்று எல்லோரும் சொன்னார்களாம்.  அவர்தான் விளையாட்டில் பாஸ்கெட் இருக்கு, பால் இருக்கு, ஏன் பாஸ்கெட் பால் என்று சொல்லக்கூடாது என்றாராம்.  நம்மூரில் கூடைப்பந்து ஆனது.
முதலில் வெறும் கூடை மட்டும் ஒரு போஸ்ட்டில் கட்டி விளையாடுவார்கள். கோல் போட்டதும் கம்பு கொண்டு கீழிருந்து தள்ளி எடுப்பார்கள். 
      பிறகு கூடையிலிருந்து பந்து கீழே விழுமாறு ஓட்டை போட்டார்கள். 1906ல் தான் இரும்பு வளையம், வலைக்கூடை, கரும்பலகை எல்லாம் அமைக்கப் பட்டதாம்.Y M C A,,  அமெரிக்க ராணுவ வீரர்கள், கல்லூரி/பள்ளிகளிலெல்லாம் ஆடத் தொடங்கி உலகளவில் பிரபலமானதாம்.
திருநெல்வேலி ம.தி.தா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் உள்ள கூடை பந்து மைதானத்தை  உலகத்தரத்திற்கு இணையாக, சுமார் 7 லட்சம் செலவில் புதுப்பித்து நேற்று 18/2/15, புதன் கிழமை மாலை 4.00 மணிக்கு, கல்விச் சங்கத் தலைவர் திரு மீனாக்ஷிசுந்தரம் திறந்து வைக்க, செயலர் திரு
மு.செல்லையா வரவேற்றார்.
   இந்துக் கல்லூரி மாணவர்களும் இந்து மேல் நிலைப் பள்ளி மாணவர்களும்  சேர்ந்து ஒரு அணி. வள்ளியூர் கிங்ஸ் மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் ஒரு அணியாகவும் ஆடத் தொடங்கி, இந்துக் கல்லூரி அணி
 39 - 28 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
 இந்து மேல்நிலைபள்ளி முன்னாள் மாணவர் திரு. ராஜசேகர் படிக்கும் போது கூடைப் பந்து வீரர். அதன் பின் பல ஆண்டுகள் மாணவர்களுக்கு கோச் ஆக இருந்து ஆட்டம் கற்றுத் தந்தாராம். மாநில அளவில் பல பட்டங்களும் பரிசுகளும் வாங்கியவர். பணி ஓய்வு பெற்று நெல்லையில் வசிக்கிறார்.அவருக்கு கல்விச் சங்கத்தின் 'வாழ்நாள் சாதனையாளர்' விருதை, செயலர் திரு செல்லையா வழங்கினார்.
விளையாட்டு வீரர்கள், நடுவர்கள், எல்லோரும் நினைவுப் பரிசுகள் பெற்றார்கள்.