Tuesday, June 16, 2009

கிரியேட்டிவ் ஹெட்களே கொஞ்சம் மாத்தியோசிங்க

உறவுகள், கல்யாணம், திருமதி செல்வம், மெட்டி ஒலி, மகள், கண்மணியே, வசந்தம், திருப்பாவை. பெயர்கள் எல்லாம் மங்களகரமாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த மெகா சீரியல் எல்லாத்திலும் குடும்பச்சண்டை, பழிவாங்கல், பொறாமைதான் தீம்.

நான் ஊரில் இருக்கும்போது சீரியலே பார்க்கமாட்டேன். டிவியில் நியூஸ், சினிமா பார்ப்பேன். ஒரு மாதமாக சிகாகோவில் மகள் வீட்டில், பேரன், பேத்தி, ப்ளாக், டிவி நியூஸ் சன்/சி.என்.என் என்று இருந்தாலும் சன் டிவியில் சீரியல் பார்க்க பழகிவிட்டேன். என் இரண்டு வயது பேரன், சன் டிவி பார்க்கையில் சேனல் மாத்தவே விட மாட்டான்.பாடல் காட்சிகளுடன் டைட்டில் ஓடும்போதுதான் திரையில் எல்லோரும் சிரிக்கிறார்கள். சில சீரியலில் அதிலும் சண்டையும் கோபமும்தான்.


உறவுகளில் கிருஷ்ணனை (ஆஹா படத்தில் ஸ்ரீராமை, உதவாக்கரை,உதவாக்கரை என்று அப்பா திட்டுவது போல) தினம் தற்குறி, தற்குறி என்று அவர் அப்பா திட்டுகிறார். அண்ணன் முகுந்தனுக்காக காயத்ரியை பெண் பார்க்க கிருஷ்ணன் போய் அவளிடம் ( படித்தால் மட்டும் போதுமா சிவாஜி அண்ணனுக்காக பார்க்கச் சென்று ராஜசுலோசனாவிடம் பேசியதுபோல) தட்டுத்தடுமாறி ஆங்கிலம் பேசினார்.


அண்ணன் முகுந்தனோ (ப.ம.போதுமா அண்ணன் பாலாஜி மொட்டைக்கடிதம் எழுதியது போல)தன்னைப் பற்றி விசாரிக்கும் பெண்ணின் அப்பாவிடம், கெட்டவன் என்று டீக்கடைக்காரரை சொல்ல வைக்கிறார். கடைசியில் கிருஷ்ணனுக்கும் காயத்ரிக்கும் ( ப.ம.போதுமா சிவாஜி-ராஜசுலோசனா போல) இன்று கல்யாணம் ஆகிவிட்டது.

கிரியேட்டிவ் ஹெட்களே கொஞ்சம் மாத்தியோசிங்க.

ஊரில் சீரியல் நடக்கும் நேரத்தில் யார் வீட்டுக்கும் செல்ல முடிவதில்லை. அவர்களுக்கு தொந்திரவு வேண்டாமே என்று ஃபோன் பண்ணி, ஃப்ரீயான்னு கேட்டுத் தான் போவேன்.


தூர்தர்ஷன் மட்டும் இருந்த நாளில் நான் பார்த்த சீரியல்கள், பத்திரிகை தொடர்கதை போல வாரம் ஒருநாள்தான். பாலச்சந்தரின் 'ரயில் சினேகம்' (நி.ரவி-இந்திரா), 'பெண்' என்று வாரம் ஒரு பெண்ணின் வெற்றிக் கதையை சுகாசினி இயக்கி வந்தது. 'பரமார்த்தகுருவும் சீடர்களும்' சீரியலை விடியோ காஸட்டில் ரிகார்ட் செய்து அடிக்கடி பார்ப்பேன். நல்ல காமெடி.


பத்திரிகைகளில் ஒருபக்கக் கதை வருவது போல அரைமணி நேரக்கதை என்று தினம் ஒரு கதை படமாக்கலாம். தனி காமெடி, குழந்தைகளுக்கான சீரியல் என்று வகைப் படுத்தி எடுத்தால் எல்லா சீரியலும் மகா சீரியல்தான்

2 comments:

goma said...

நீங்க சொல்ற மாதிரி எடுத்தால் மகளிர் கொஞ்சம் சீரியல் பக்கம் போக யோசிப்பார்கள்.
தத்தம் கவலைகளை விருப்பு வெறுப்புகளை செய்ய நினைத்து செய்யமுடியாத ஏக்கங்களை ஏதோ ஒரு வகையில் வெளித்தள்ளும் உபகரணமாக ,மாற்று வடிகாலாக சீரியலை வைத்திருக்கிறார்கள்.
....
சின்னத் திரை உருவங்கள் என்பதைக் கூட உணராமல் அதில் வரும் பாத்திரங்களுக்காக அழுவதும் ஆத்திரப் படுவதும் ,...எனக்கென்னவோ இது மனப்பு[ளு/ழு]க்கத்துக்கான ஒரு வகை மருந்து என்றுதான் தோன்றுகிறது.

ராமலக்ஷ்மி said...

//இந்த மெகா சீரியல் எல்லாத்திலும் குடும்பச்சண்டை, பழிவாங்கல், பொறாமைதான் தீம்.//

வழி மொழிகிறேன். நடப்பு வாழ்வில் இல்லாத இது போன்ற கதைகளைத் தவிர்த்து அடுத்த கட்டத்துக்கு சீரியல் உலகம் முன்னேற வேண்டும் என்பதுதான் எனது அவாவும்.