Thursday, December 11, 2014

நேற்று பாரதியார் பிறந்தநாள் என்றதும் அவர் படித்த மதுரை திரவியம் தாயுமானவர் இந்து மேல்நிலை பள்ளிக்கு சென்றேன். கள்ளிபட்டி(தேனி மாவட்டம்) நல்லாசிரியர் திரு.சு.குப்புசாமி சிறப்பு விருந்தினர், பள்ளியின் கல்வி சங்க் செயலாளர் திரு.மு.செல்லையா, திரு.கணேசன்(தேனி)தலைமை ஆசிரியர் திரு.சுப்பையா பங்கேற்க, விழா நிகழ்ச்சிகளை ஒரு மாணவன் அழகாக தொகுத்து வழங்கினா(ர்)ன்.
திரு.கணேசன் பாரதியாரைப் பற்றி ஒரு கவிதையுடன் பேசினார். சிறப்பு விருந்தினர் திரு.குப்புசாமி பேசும்போது சொன்ன தகவல்கள்:
சீவலப்பேரியில் வாழ்ந்த சின்னசாமி ஐயர், எட்டயபுரத்திற்கு குடிபெயர்ந்து, ராஜா அரண்மனையில் பணியில் சேர்ந்தார். 1882ம் ஆண்டு டிசம்பர் 11 அன்று மகன் சுப்பிரமணியம் பிறந்தார். திருநெல்வேலி, மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரி உயர்நிலை பள்ளியில் 3 முதல் 5ம் வகுப்பு வரை படித்தார் சுப்பிரமணியம்.
1893ல் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த ஒரு தமிழ்ப் புலவர் மாணவர்களுக்கு கவிதைப் போட்டி நடத்தி, அதில் கலந்துகொண்ட சுப்பிரமணியத்தை  பாராட்டி பாரதி என்று அழைத்தார். அன்றிலிருந்து சுப்பிரமணிய பாரதி என அழைக்கப் பட்டார்.
சின்ன வயதில் அவர் பெற்ற புகழைக் கண்டு பொறாமை கொண்ட காந்திமதிநாதன் என்பவர், பாரதியிடம், தம்பி உன்னால் "பாரதி சின்னப் பயல்" என்று பாட முடியுமான்னு கேட்டார்.
பாரதி சொன்ன கவிதை:
  "காரது போல் நெஞ்சிருண்ட
   காந்திமதிநாதனைப்
   பார் அதி சின்னப் பயல்"
தன்னை சின்னப்பயல் என்று சொன்ன எதிரியை "அதி சின்னப் பயல்" என்று பாடிவிட்டார்.
1897ல் பாரதிக்கு செல்லம்மாளுடன், நான்கு நாள் விழாவாக கல்யாணம் நடந்ததாம்.. மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகவும், பின், சுதேசமித்திரன் பத்திரிகை உதவி ஆசிரியராகவும் வேலை பார்த்தாராம்.

ஒரு நாள் பத்திரிகை ஆபீசிலிருந்து வீடு செல்லும்போது, அன்று வாங்கிய சம்பள பணத்தை அப்படியே தான் வந்த குதிரை வண்டிக்காரனின் மனைவி குழந்தைகளின் வைத்திய செலவுக்காக தந்துவிட்டாராம்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானைக்கு தேங்காய், பழம் உண்ணத் தருவாராம். ஒரு நாள் அவரை, யானை கிட்ட போகாதே, அதற்கு மதம் பிடித்து விட்டது என்று தடுத்தும், "அது நான் வணங்கும் பராசக்தி,என்னை ஒன்றும் செய்யாது" என்று  யானை அருகில் போனார். யானையோ அவரைத் தும்பிக்கையால் தூக்கி வீசிவிட்டது.
ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் சில நாள் சிகிச்சைக்கு பிறகு வீட்டுக்கு வந்தார். ஆனாலும் அன்றிலிருந்து மிகவும் பலவீனமானார்.
 "காலா உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்றன்
   காலருகே வாடா, சற்றே உதைக்கிறேன்"
 என்று பாடிய மகாகவி 1921 செப்டம்பர் 12 அன்று மறைந்தார்.

2 comments:

Kasthuri Rengan said...

வணக்கம் தங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது ...
வாழ்த்துக்கள்
அறிமுகம் செய்தவர் குருநாதசுந்தரம்
link is here click now!

Thenammai Lakshmanan said...

அருமை. தொடர்ந்து எழுதலாமே.