'இணையத்தில் வளர் தமிழ்' என்ற தலைப்பில், வலைப்பதிவின் வளர்ச்சியும் தமிழ் ஆய்வின் பயன்பாடும் பற்றிய கருத்தரங்கு நெல்லையில் சென்ற வாரம் நடந்தது. திரு.சேகர் பொன்னையா, திரு.முல்லை ச.முருகன் இருவரும் ஒருங்கிணைத்திருந்தார்கள்.
வாஷிங்டனிலிருந்து வந்த முனைவர் சொ.சங்கர பாண்டி பேசுகையில், அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் தமிழில் பேசும் வாய்ப்பே மிகவும் குறைந்து வருகிறது என்றார். அமெரிக்க மாநிலங்களில் உள்ள தமிழ் சங்கங்கள், தமிழ் பள்ளிக்கூடங்கள் அமைக்க கூட்டு முயற்சி செய்து வருகின்றன என்றும், தமிழ் நாட்டில்கூட பள்ளிகளில் தமிழ் பேசக்கூடாது, ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என் கட்டாயப்படுத்தும் நிலை உருவாகி வருகிறது. தமிழ் மொழியை மதிக்கவும், ஆங்கிலக் கலப்பில்லாமல் பேசும் நிலை வர வேண்டும் என்றார்.
தமிழ் வலைப்பதிவு பற்றி சொல்கையில் சங்கர பாண்டி, நம் கதையோ, கட்டுரையோ, கருத்துக்களோ பத்திரிகைக்கு அனுப்பி வெளிவருவதைப் பார்க்கக் காத்திருக்க வேண்டியதில்லை. நம் எழுத்தை உலகத்தமிழர்கள் அனைவரும் உடனே படிக்க வைக்க முடிகிறது என்றார்.
கோவை வாசியான திரு.காசி ஆறுமுகம், தான் அமெரிக்காவில் நான்கு ஆண்டுகள் இருந்தபோது தமிழ்மணம் வலைத்திரட்டியை தொடங்கியதையும், அதில் பதிவுகள் நேரம் வாரியாக வெளியிடப்படுவதையும், பின்னூட்டங்கள் மூலம் வாசகர்கள் பதில் எழுதுவதால் வேகமான கருத்துப் பரிமாற்றம் நிகழ்வதையும் கூறினார். நாம் எழுதுவதை நாமே தணிக்கை செய்து, நல்ல தமிழில் நல்ல கருத்துக்களை எழுதி இந்த உயிருள்ள ஊடகத்தை எல்லோரும் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அடுத்துப் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், திரு.கோ.பிரகாஷ் அவர்கள், மொழிதான் ஒரு சமூகத்தின் அடையாளம். தமிழன் என்று சொல்லிக்கொள்ளவே நாம் கர்வப் படவேண்டுமென்றார்.மூன்று தமிழ் சங்கங்கள் தொடங்கியதே தமிழ் வளர்ச்சிக்காகத்தான். இலக்கியமே கற்பனை கலந்த கதையின் வடிவமைப்புதான். திராவிட மொழிகள் அனைத்துக்கும் ஆணிவேர் தமிழ்தான் என்று கால்டுவெல் போன்ற மேல்நாட்டு அறிஞர்கள் கூட எழுதிச் சென்றார்கள்
திரு. பிரகாஷ், தான் ஐ.ஏ.எஸ் பயிலும் போது தமிழை இரண்டாவது மொழியாக எடுத்துக்கொண்டதாகவும் அப்பொழுதுதான் தமிழ் மொழியின் நீளம், அகலம், விஸ்தீரணம் தன்னால் அறிந்து கொள்ள முடிந்தது என்றும் கூறினார். இந்திய மொழிகளிலேயே ஆங்கிலத்திற்கு அடுத்த படியாக தமிழ்தான் வலைப்பதிவில் அதிகம் காண முடிவதால் உலகெங்கிலும்தமிழர்கள் வாழ்ந்து தமிழைப் பரப்புவது தெரிகிறது.
நாணயத்தின் மறு பக்கத்தை காட்டிய திரு.பிரகாஷ், நகரத்தன்மை வாய்ந்த ஊர்களில் தமிழ் எழுதுவது, பேசுவது, படிப்பதையே சமூகம் கீழ்நிலையில் பார்க்கிறது என்றார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தமிழ் பேசுவதை ஊக்குவிக்க வேண்டும், ஏனென்றால் ஞாயிறு முதல் சனி வரை கிழமைகள் கூட அவர்களுக்கு தமிழில் சொல்லத்தெரிவதில்லை. அடுத்த தலைமுறை தமிழை மறந்துவிடாமல் பெருமை வாய்ந்த தமிழ் மொழியை பல்லாண்டு திகழச்செய்ய வேண்டும் என்றார்.
ஹுஸ்டன் நகரில் நாசா விண்வெளி மையத்தில் பணிபுரியும் முனைவர்.நா.கணேசன், முதுகலையிலும் தமிழ் ஒரு விருப்பப் பாடமா இருக்க வேண்டும் என்றார். தமிழ் பத்திரிகைகள் குமுதம், விகடன் யுனிகோட் முறைக்கு மாறி தங்கள் இதழ்களை வெளியிடுகின்றன என்றும் தமிழில் எழுத விரும்பும் பதிவர்கள் தமிழ்நெட் 99 தட்டச்சு பயன் படுத்தி சுலபமாக தங்கள் பதிவுகளை வெளியிடலாம் என்றும் கூறினார்.
முனைவர்.மு.இளங்கோவன், கருத்தரங்கு நடந்துகொண்டிருக்கும் போதே நிகழ்ச்சிகளை புகைப் படங்களுடன் தன்னுடைய வலைப்பதிவில் பதிவு செய்து கொண்டிருந்தார்.
வழக்கறிஞர் டி.ஏ. பிரபாகர் நன்றி கூறினார்.
5 comments:
கருத்தரங்கிற்கு நேரில் வந்த உணர்வைத் தந்தது தங்கள் பதிவு.
அடுத்து ஒரு பயிலரங்கம் நடத்துவதாகவும் சொன்னார்கள்.
கூட்டத்திற்கு நிறைய மாணவ/மாணவிகள் வ்ந்திருந்தார்கள்.
நெல்லையில் பதிவர்களை சந்திக்க வைக்க எனக்கே ஒரு ஆர்வம் உண்டு.பார்க்கலாம்.
அடுத்து ஒரு பயிலரங்கம் நடத்துவதாகவும் சொன்னார்கள்.
கூட்டத்திற்கு நிறைய மாணவ/மாணவிகள் வ்ந்திருந்தார்கள்.
நெல்லையில் பதிவர்களை சந்திக்க வைக்க எனக்கே ஒரு ஆர்வம் உண்டு.பார்க்கலாம்.
நெல்லையைச் சேர்ந்த பதிவர்களுக்கு ஸ்பெஷல் அழைப்பு உண்டுதானே?
நல்ல வர்ணனை சகாதேவன். நாங்கள் இப்போது ஏற்பாடு பண்ணிக் கொண்டிருப்பது ஒரு கும்மி சந்திப்புதான். நீங்கள் சென்னையிலிருந்தால் கண்டிப்பாக 10.ஆகஸ்ட் அன்று காந்தி சிலை அருகே வரவும். நன்றி.
Post a Comment