Saturday, August 2, 2008

கெட்டிக்காரன் யார்? ரோல் பிலிம் கேமராவா, டிஜிட்டல் கேமராவா?

பாக்ஸ் கேமரா, ஃபோல்டிங் கேமரா, ட்வின் லென்ஸ் ரிஃப்ளெக்ஸ், 35எம்.எம் கேமரா, ரேஞ்ச் ஃபைண்டர், எக்ஸ்போஷர் மீட்டர்,, சிங்கிள் லென்ஸ் ரிஃப்ளெக்ஸ், வைட் ஆங்கிள்/டெலிபோட்டோ லென்ஸ், ஜூம் லென்ஸ், இப்படி எல்லாம் புதுப் புது
கண்டுபிடிப்புகளுடன் கேமரா சென்ற நூற்றாண்டில் வளர்ச்சி அடைந்திருக்கிறது.
என்றாலும் அன்று போட்டோ நன்றாக அமைந்தது "க்ளிக்" செய்த
கெட்டிக்காரர்களால்தான்.

அப்படி ஒரு கெட்டிக்காரர் என் பெரிய அண்ணன்.

காஸ்ட்லி ஹாபி என்று கருதப்பட்ட அந்நாளில் தன் ரோலில் ஒரு ஃப்ரேம் கூட வீணாகாமல் அழகான படங்களை தன் Rolleiflex f 2.8 கேமராவில் எடுப்பார். 35எம் எம் கேமராவில் 36 படம் எடுக்கும் வரை காத்திருக்கக் கூடாது, அதற்காக படங்கள் எடுத்துத் தள்ளக் கூடாது என்றும் நெகட்டிவ் சின்னதானதால் என்லார்ஜ்மெண்ட் நன்றாக இராது என்பார். அதனால்
6cm*6cm ஸ்கொயர் நெகடிவ் தரும் 120 ரோல் தான் அவருக்குப் பிடிக்கும். ரோல் பிலிமில் இல்லாத மெகாபிக்ஸலா? தன் படங்களுக்கு பெரிய என்லார்ஜ்மெண்ட் போட்டு வாங்குவார்.

எங்கள் வீட்டு கல்யாணம், பிற விசேஷங்களில் எல்லாம் போட்டோ எடுத்து, ரோலை தானே டெவலப் செய்வார். ப்ரிண்ட்/என்லார்ஜ்மெண்ட் மட்டும்தான் ஸ்டூடியோவில்.
திருநெல்வேலியில் அன்று பிரபலமான ஸ்டூடியோ அதிபர்கள் எல்லோரும் அண்ணனிடம் கருத்துக் கேட்டு தங்கள் போட்டோகிராபர்களிடம் சொல்வார்கள். எங்கள் வீட்டில் எல்லோருக்கும் போட்டோ எடுக்க கற்றுத் கந்தார். எனக்கு அவர் முதலில் வாங்கித் தந்தது கோடக் ப்ரொளனி பாக்ஸ் கேமரா. 620 ரோலில் 6*9cm சைஸில் 8 படம் எடுக்கும்.

போட்டோகிராபியை தொழிலாக எண்ணியிருந்தால், தீரஜ் செளடா (பம்பாய்), சந்தாமியான் (மெட்ராஸ்) போல புகழ் பெற்றிருப்பார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் 1960களில் நடந்ததே (வருஷம் நினைவில்லை,1961- 65 இருக்கலாம்) அப்போது கும்பாபிஷேக சிறப்பு மலரை கோவில் போட்டோக்களுடன் வெளியிட, குழுவின் தலைவர் திரு.பி.டி.ராஜனிடம், கோவில் நிர்வாகத்தில் இருந்த திரு.பழனி(எங்களூர்க்காரர்) அண்ணன் பற்றி அவரிடம் சொல்ல, பி.டி.ஆரின் அழைப்பின் பேரில், இரண்டு கேமராக்கள், ஃப்ளட் லைட், ஃப்ளாஷ், B&W/கலர் ரோல் பிலிம்களுடன் golfer உடன் செல்லும் caddie போல அண்ணனுடன் நானும் சென்றேன்.
அன்று அவர் எடுத்த படங்களில் என்னிடம் உள்ள சிலவற்றைப் பாருங்கள்.






அவருடைய கேமராக்கள்- 8எம் எம் மூவி கேமரா கூட உண்டு- நெகட்டிவ் ஆல்பம். போட்டோ ஆல்பம் எல்லாவற்றையும் அண்னன் மகன் பத்திரமாக வைத்திருக்கிறான்.

இன்று எத்தனை டிஜிட்டல் கேமராக்கள், எத்தனை மாடல்கள். அவை என்னவெல்லாம் செய்கின்றன? ஷட்டர் ஸ்பீட், அபெர்ச்சர் எல்லாம் செலக்ட் செய்கிறது, பட்டனை தள்ளினால் ஜூம் ஆகிறது. பிலிம் ஸ்பீட்(I S O)லைட்டைப் பார்த்து அதுவே எடுத்துக்கொள்கிறது. படத்தை நாம் உடனே பார்த்துக்கொள்ளலாம். ரோல் பிலிம் வாங்க வேண்டியதே இல்லை. பாட்டரி சார்ஜ் நிலையில் 300 படங்கள் எடுக்கலாம்.

அன்று குரூப் போட்டோ எடுக்க நேர்கோடாக seat போட்டால் ஒரங்களில் உள்ளவர்கள் முகம் ஃபோகஸ் ஆகாது என்று வில் (arc) வடிவில் seat போடுவார்கள். கேமராவை tripod-ல் மாட்டி, போட்டோகிராபர் தன் மேல் கருப்புதுணியை போர்த்திக்கொண்டு, க்ரவுண்ட் க்ளாஸில் ஃபோகஸ் செய்து, ப்ளேட் பிலிமை சொருகிவிட்டு, லென்ஸில் அபெர்ச்சர் செட் பண்ணி, ஸ்மைல் சொல்லி, கையால் லென்ஸ் cap-ஐ எடுத்து மூடிவிடுவார்(ஷட்டர் ஸ்பீட் லென்ஸில் கிடையாது). அந்த படங்கள் இன்னும் எவ்வளவு அழகாக இருக்கிறது?

புதிய டிஜிட்டல் கேமரா சில, முகங்களை தனித்தனியாக ஃபோகஸ் செய்து விடுமாம். யாராவது அசைந்தால் கூட ஷேக் இல்லாமல் படம் தருமாம். சிரிப்பதை பார்த்து தானே க்ளிக் செய்து விடுமாம். கம்போஸ் செய்வது மட்டும் தான் நம் வேலை.

அப்படியானால் இப்ப டிஜிட்டல் கேமராதானே கெட்டிக்காரன்?

அண்ணன் இருந்தால் இன்று எந்த டிஜிட்டல் கேமரா வாங்குவார் என்று எண்ணினேன். கூகிளில் பார்த்தபோது எனக்கு ஆச்சரியம். அவருக்கு பிடித்த ட்வின் லென்ஸ் ரிஃப்ளெக்ஸ், ஸ்கொயார் ஃபார்மட் - ரோலீ பிரியர்களுக்காகவே செய்தது போல
rollei MINI DIGI உள்ளங்கை அளவில் இருக்கிறது. இதுதான் அவருக்கு ரொம்ப பிடிக்கும்.



இந்த மினிடிஜி, அண்ணனுக்கு என் சமர்ப்பணம்

3 comments:

நானானி said...

ஆஹா!! கொசுவத்தி...கொசுவத்தி...
சுத்த வெச்சுட்டீங்களே? சகா?
அண்ணனுக்கு செய்த சமர்ப்பணம்
அற்புதம்! அவர் ஆத்மா குளிர்ந்திருக்கும். அருமையான பதிவு!!!!!!

goma said...

சந்தேகமென்ன .ரோல் பிலிம் கேமராதான்.புகைப் படக் கலையின் அத்தனை நுணுக்கங்களையும் நுட்பமாக அறிந்து மீட்டர்,அப்பேர்ச்சர்,ஷட்டர் ஸ்பீட் என்று இன்னும் என்னவெல்லாம் உண்டோ அத்தனையிலும் அத்துப் படியாகி அழகாக எடுப்பதில் திறமை வெளிப்படுமா ?இல்லை ,தானே எல்லவற்றையும் கவனித்து பட்டனைத் தட்டினால் போதும் என்று கூறும், "கத்துக்குட்டி ஃபிரண்ட்லி" டிஜிடல் கேமராவா.? என் ஓட்டு தங்கள் அண்ணன் கேமராவுக்கே.

ராமலக்ஷ்மி said...

ஆகா இந்த மினிடிஜி என் தந்தை வைத்திருந்து என் அண்ணன் உபயோகித்த யாஷிகா-டி போலவே இருக்கிறதே. எனது முதல் புகைப்பட அனுபவமும் அதில்தான் தொடங்கியது. உங்கள் பெரிய அண்ணன் போலவே எனது பெரிய பெரியப்பா மிகச் சிறந்த புகைப்பட வல்லுநர். அவரது ஆர்வம்தான் மறைந்த என் தந்தைக்கும் தாவியிருக்க வேண்டும். என் தந்தை எடுத்த படங்கள் எனது திண்ணைப் பதிவில் வலையுலகினரை மகிழ்வித்த கதை நீங்கள் அறிந்ததே. எனது பெரிய பெரியப்பா எனது தந்தையை எடுத்த படமொன்றும் பதிவை வெளியிட்ட மூன்று வாரங்கள் கழித்துக் கிடைக்கப் பெற்று பிற்சேர்க்கையாக ஒரு பத்தி எழுதி சேர்த்திருந்தேன். அதை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்பதால் குறிப்பிடுகிறேன். போன வாரம் வீட்டுக்கு வந்திருந்த என் தம்பி அப்படத்தைப் பார்த்து "என்ன ஒரு ஆங்கிள்" என என் பெரியப்பாவின் திறமையைச் சிலாகித்தபடி இருந்தான். என் தந்தைக்கு மட்டுமின்றி பெரியப்பாவின் ஆர்வம் எனது சித்தப்பா, இரு அத்தைமார் ஆகியோருக்கும் தாவி, இன்று அவர்களும் இக்கலையில் சிறந்த வல்லுநர்களாக திகழ்கிறார்கள்.