Saturday, July 14, 2012

எத்தனை கோடி இன்பம் பெற்றாய் சூர்யா?


மகனை "அவையகத்து முந்தியிருப்ப" செய்த சிவகுமாரையும், "இவன் தந்தை என்னோற்றான்" என்று மக்களை சொல்ல வைத்த சூர்யாவையும் நிறைவு நாளான வியாழனன்று, ஒன்றாகப் பார்த்த நாம் எல்லோரும் வென்றோம் ஒரு கோடி இன்பம்.

ஹாட் சீட்டில் அமர்ந்து லட்சங்கள் வென்ற பல போட்டியாளர்களை அழைத்து, எல்லா வயதினரும் வந்து ஆடியன்ஸாக கலந்து கொண்டு, "என் கேள்விக்கென்ன பதில்" என்று அன்று பாடிய சிவகுமாரை தங்கள் கேள்வி மழையில் நனைய வைத்து விட்டார்கள்.

பார்வதி அம்மாள் கேட்டார், 'இத்தனை திறமை, பணிவான குணங்களுடன் உங்கள் பிள்ளைகளை எப்படி வளர்த்தீர்கள்?' அதற்கு அவர், நான் மட்டும் இல்லை, சூர்யாவின் அம்மா, பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் எல்லோருக்கும் அதில் பங்கு உண்டு என்று சொன்ன பதில், ஒரு பெண் கோவையில் தன் பள்ளி விழாவில் நீங்கள் தலைமை தாங்கி எனக்கு பரிசு தந்தீர்கள் என்று சொல்ல, அவர் எந்த பள்ளி என சொல்லி, அன்று நீ ஒரு ப்ரெளன் கலர் உடை அணிந்திருந்தாய் என்று நினைவு கூர்ந்த விதம், மேலும் அவர் சொன்ன மகாபாரத கதைகள் எல்லாம் பிரமிக்க வைத்தன.

சூர்யா, தன்னால் இந்த நிகழ்ச்சியை நடத்த முடியுமா என்று முதலில் தயங்கியபோது, விஜய் டிவி குழுவினர் கொடுத்த தைரியம், பிரபல க்விஸ் மாஸ்டர் சித்தார்த்த பாஸு தந்த பயிற்சி பற்றி எல்லாம் நன்றியுடன் சொல்லிவிட்டு, குழுவில் தன்னுடன் பணியாற்றியவர்கள் - கேள்விகள் அமைத்த ஜீனியஸ், விடியோகிராபர், மேக்கப்மேன், லைட்மேன், தனக்கு சூட் தைத்து தந்தவர், சாரதிகள், தான் சொல்ல மறந்துவிட்ட டெக்னிஷியன்கள் எல்லோருக்கும், ஒரு குடும்பத்தை பிரிந்து செல்வது போல குரல் தழுதழுக்க நன்றி கூறினார்.

திருமதி பார்வதி அம்மாள், தான் உருவாக்கிய பள்ளிக்கூடத்தை மேம்படுத்துவதற்காக, ஹாட் சீட்டில் விளையாடிய போது, ரூ 12,50,000 வென்ற நிலையில் ரூ25,00,000க்கான கேள்விக்கு விடை தனக்கு தெரிந்தும் உறுதியாக சொல்ல முடியாமல், தவறானால் ரூ3,25,000 ஆகிவிடுமே என்று ரூ12,50,000 உடன் விலகிக் கொண்டார். அவர் வெல்லத் தவறிய ரு12,50,000ஐ சூர்யா, தன் அகரம் பெளண்டேஷனிலிருந்து பார்வதி அம்மாவுக்கு, அவரது பள்ளிக்காக வழ்ங்கியது பாராட்டுக்குரியது.

திங்கள்-வியாழன் மாலை எங்கு வெளியே சென்றாலும் மணி அண்ணன்,
'9 ஆகப்போகிறது வீட்டுக்குப்போ' என்று என்னை விரட்டுவார். எனக்கும் அந்த ஹாட் சீட்டில் உட்கார ஆசைதான். இது போல ஒரு நல்ல நிகழ்ச்சி இனி வருமா?

6 comments:

sury siva said...

துவக்கத்தில் இ ந் நிகழ்ச்சி அவ்வளவு ஈர்ப்பதாகத் தோன்றவில்லை எனினும் செல்லச் செல்ல‌
வயதில் முதியோன் என எல்லோரும் அழைத்திடும் எங்கள் இருவரையுமே ஒவ்வொரு நாளும்
தொலைக்காட்சிப் பெட்டியோடு இரவு ஒன்பது மணிக்கே இணைத்துவிட்டது.
சொல்லப்போனால், ஒவ்வொரு வாரமும் வெள்ளியன்று ஒரு இடைவெளிதான் இருந்தாலும்
அது ஒரு வெற்றிடம் போலவே தோன்றியது.

இ ந் நிகழ்ச்சியின் சிறப்பு சொல்லிற்கு அப்பாலானது எனவே சொல்லவேண்டும்.

எத்துணை வல்லுவராயிருப்பினும் பல்வேறு துறைகளில் விவரமாகத் தெரிந்தவராயிருப்பினும்
இன்னும் தெரியவேண்டிய விடயங்கள் ஆயிரமாயிரமெனப்புரிய வைத்த நிகழ்ச்சி இது.

உண்மையிலே, மக்கள் நால்வகைப்படுவர்.
தமக்குத் தெரியும் எனத் தெளிவாகத் தெரிந்தவர்.
தமக்குத் தெரியாதெனத் தெளிவாகத் தெரிந்தவர்.

இந்த இருவகையுமே ஓரளவுக்கு ஜெயித்தனர் .

அடுத்த இருவகையினர்:
தமக்குத் தெரியுமெனத் தெரியாதவர் ( அதனால் தடுமாறுபவர் )
தமக்குத் தெரியாதெனவே தெரியாதவர். ( அதனால் எல்லாமே தெரிந்தவர் போன்ற மனப்பாங்கு கொண்டவர்)

இந்த வகையினைச் சார்ந்தவருக்கு இ ந் நிகழ்ச்சி ஒரு வழிகாட்டி.

வாழ்க்கையின் எ ந் நிலையிலுமே நமக்குத் தெரிந்ததைவிட தெரியாதனவே அதிகம் என எல்லோருக்குமே தெரியும்.
ஆனால்,
தெரியத் தெரியத் தான், தெரியவேண்டிய விடயங்கள் . அதே விகிதத்தில், இன்னும் அதிகமாகிப்போகின்றன எனற தெளிவும் ஏற்படும்.

மக்களோடு மக்களாய் அவர்கள் உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டதன் மூலம் திரு சூர்யா அவர்களுக்கே
இ ந் நிகழ்ச்சி ஒரு வழி காட்டி.

ரசிகர் மன்றங்கள் மூலம் மக்களுக்கு உதவி செய்யும் நடிகர்கள் இருக்கவே செய்கின்றனர். மறுப்பதற்கில்லை.
அவர்கள் செய்யும் உதவிகள் எல்லாமே நல்லவைதான். இல்லையெனச் சொல்ல இயலாது.
இருப்பினும், மனித வாழ்வின் விளிம்பிலே வாழும் மனிதர்களின் அன்றாட நெருக்கடிகளை, துன்பங்களை
நேருக்கு நேர் கொண்டு வந்து தமிழ் மக்களின் மனித நேய உணர்வுகளை எழுந்திடச்செய்த வகையிலே
இ ந் நிகழ்ச்சி ஒரு முன்னுதாரணம்.

வாழ்க நும் பணி சூர்யா அவர்களே !!

சுப்பு ரத்தினம்.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

சுருக்கமான,சிறிய தெளிவான பதிவு..நன்றி.

nanaani said...

அற்புதமாய் தானும் அனுபவித்து வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோரையும் அனுபவிக்க வைத்துவிட்டார் சூரியா. ஆரம்பத்தில் வருவோரெல்லாம் வழிவதை அழகாக புறம்தள்ளி...இறுதியில் அத்தனைக்கும் தான் தகுதியாவந்தான் ரஎன்பதையும் நிறூபித்துவிட்டார். போட்டியில் பங்கெடுக்க வேண்டும் என்ற ஆவலையும் தூண்டிவிட்டதுதே நிகழ்ச்சியின் வெற்றி. ஏன் சகாதேவன் நாமெல்லாம் போனால் குறைந்தது ஓர் 6,40,000 மாவது ஜெயிச்சிட்டு வர மாட்டோம்?
அஸ்தமித்த சூரியனே! மறுபடி உதித்து வா!!!!காத்திருக்கோம்.

சகாதேவன் said...

அறிவன் அவர்களே, வாங்க.
சுருக்கமான,சிறிய பின்னூட்டம். நன்றி

திரு.சூரி
தெரிந்த, தெரியாத,என்று நால்வகை மக்களைப் பற்றி அழகாக சொன்னீர்கள்.

நானானி,
என்ன ரூ6,40,000தானா?

nanaani said...

மினிமம் என்றுதான் சொன்னேன். விட்டால் கோடியையும் தொடலாம்தான்.

MANO நாஞ்சில் மனோ said...

கலையுலக மார்கண்டேயன் சிவகுமாருக்கு இன்னும் அநேக முகங்கள் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது....!!!