Saturday, October 26, 2013

ஜெமினியும் நாங்களும்

                     



 ஜெமினியும் நாங்களும்


 

  'மூங்கில் மூச்சு' என்று திரு K.சுகா அவர்கள்  விகடனில்  இரண்டு ஆண்டுகளுக்கு முன் எழுதிய தன் தொடர் கட்டுரையில் ஒரு வாரம் ,திருநெல்வேலியில் உள்ள தியேட்டர்கள் பற்றி எழுதும்போது 'பாலஸ்-டி-வேல்ஸ் பற்றி அந்த   காலத்து ஆட்கள் விசேஷமாக சொல்வார்கள்' என்றார். நான் அந்தகாலத்து ஆள் (72) மட்டுமல்ல, பாலஸ் டி வேல்ஸ் தியேட்டர்காரனும் கூட. உடனே எழுத நினைத்தாலும் பல வேலைகள் காரணமாக முடியவில்லை.


                                    சினிமா ப்ரொட்யூசர், டிஸ்ட்ரிபியூட்டர், எக்ஸிபிட்டர் எல்லாம்  ஒரு குடும்பமாக பழகிய காலம்.  ஏ.வி.எம் படங்கள் பாப்புலர் டாக்கீஸிலும். மாடர்ன் தியேட்டர்ஸ் , விஜயா-வாஹினி படங்கள் ராயல் டாக்கீஸிலும் ஓடும். 1962ல் பாப்புலர் உரிமையாளர்கள் கட்டிய சென்ட்ரல் தியேட்டரை திரு. ஏ.வி.மெய்யப்ப செட்டியார் அவர்கள் வந்து திறந்துவைத்தார்.

 ஜெமினி நிறுவனம் தங்கள் படங்களை ஜெமினி பிக்சர் சக்யூட் என்ற பெயரில் தாங்களே எல்லா ஊர்களிலும்,தியேட்டர்காரர்களுடன் ஒப்பந்த அடிப்படையில் திரையிட்டார்கள். அப்படி தொடங்கியதுதான் ஜெமினி- பாலஸ்-டி-வேல்ஸ் உறவு.  
தாத்தா திரு.ஏ.ஆர்.சண்முகம் பிள்ளை,அப்பா திரு.எம்.சோமசுந்தரம் பிள்ளை,  இருவரும்தான் தியேட்டரின் பார்ட்னர்கள். 

ஏ.ஆர்.சண்முகம் பிள்ளை       எம்.சோமசுந்தரம் பிள்ளை

 ஜெமினி படம  ரிலீஸ் தேதியில் வேறு எந்த படம் ஓடிக்கொண்டிருந்தாலும்  திரையிட வேண்டும். 1943ல் ஜெமினியின் மங்கம்மா சபதம் ரிலீஸ் ஆனபோது நன்றாக ஓடிக்கொண்டிருந்த தியாகராஜ பாகவதரின் 'சிவகவி', தொடர் ஓட்டமாக ராயல் டாக்கீஸுக்கு மாற்றப்பட்டதாக என் மணி அண்ணன் சொன்னார்.

 ஜெமினியின் பிரமாண்டமான தயாரிப்பான 'சந்திரலேகா', 1948ல் வரும் வரை எங்கள் தியேட்டரில் சிங்கிள் ப்ரொஜெக்டர்தான். தயாரிப்பாளர்-டைரக்டர் திரு S.S.வாசன் அவர்கள் அப்பாவிடம்,   "படம் மூன்றரை மணி நேரம் ஓடும். அதனால் டபுள் ப்ரொஜெக்டராக மாற்றி விடுங்கள்" என்று சொன்னதால் புதிய RCA Simplex ப்ரொஜெக்டர்களும் RCA சவுண்ட் சிஸ்டத்துடன் வந்தது. ஜெமினி இரட்டையர்களின் குழலோசை ரொம்ப தூரம் கேட்குமாம்.
 

1955ல் சென்னை உட்லண்ட்ஸில் நடந்த என் அக்கா திருமதி பொன்னம்மாள் நடராஜனின் திருமண வரவேற்பில், கூட்டத்தில் பேசி பழக்கமில்லாததால் அத்தான் எழுதித் தந்த உரையை மனப்பாடம் செய்து அக்கா விருந்தினரை வரவேற்றாள்.
 திரு வாசன் அவர்கள் கலந்து கொண்டு அக்காவுக்கு ஒரு தங்க நெக்லெஸ் பரிசளித்தார். புகைப் படங்களுடன் நிகழ்ச்சிகளை  சொல்ல     ந்த ஒரு ''பொக்கிஷம்'' மட்டும்தான்  அக்காவின் கல்யாண ஆல்பத்திலிருந்து கிடைத்தது


அமர்ந்திருப்போர் இடமிருந்து வலம்  :அத்தான் நடராஜன்,      கிண்டி இஞ்ஜினியரிங் காலேஜ் பிரின்ஸிபல் திரு,பால், 
                                               திரு எஸ்.எஸ்.வாசன்,        அப்பா. --   இடது பக்கம் சிறுவன்,  நான்(14)


திரு வாசன் அவர்களின் குமாரர் திரு பாலசுப்பிரமணியன் கல்யாணத்திற்கு அப்பாவும் தாத்தாவும் சென்றார்கள். ஆனந்தவிகடனின்  இணை பத்திரிகையான  'நாரதர்'  இதழில் கல்யாண போட்டோக்களுடன் அவர்கள் படமும் 'திருநெல்வேலி பிரமுகர்கள்' என்ற குறிப்புடன் பிரசுரமானதாம்


புதுமணத் தம்பதிகளுடன் திருமதி பட்டம்மாள் வாசன் அவர்கள், திருச்செந்தூர் செல்லுமுன் நெல்லை வந்து எங்கள் வீட்டில் தங்கினார்கள். அவருடன் விகடன் குழுவான மணியன் (பின்னாளில் ''இதயம் பேசுகிறது''), ஓவியர் கோபுலு உட்பட பலர் வந்திருந்தார்கள். மருமகள் திருமதி சரோஜாவை அறிமுகம் செய்த திருமதி வாசன், 'இவள்தான் எங்கள் வீட்டு மகாலக்ஷ்மி' என்றார்கள். (அந்தப் படம் அப்போது ஓடிக்கொண்டிருந்தது ). 

திரு பாலு அவர்கள் குளித்து  விட்டு வந்ததும் விரலில் குங்குமம் எடுத்து கட்டை விரலால்  சுற்றி அதை வட்டமாக்கி நெற்றியில் இட்டுக்கொண்டதை பார்த்த தங்கை கல்யாணி அது முதல் நானும் அப்படித்தான் செய்கிறேன் என்கிறாள். மருமகள் காதில் அணிந்திருந்த ஜிமிக்கி, மாட்டல்  ரொம்ப அழகாக இருக்கிறதே என்றுதான் என் அம்மா சொன்னார்களாம்.. ஊருக்குப் போனதும் திருமதி வாசன்,அதே போல ஒரு ஜோடி வாங்கி அனுப்பி வைத்தார் என்று அக்கா சொன்னாள்.
 
  உதவியாட்களுடன் அம்மா, இரண்டு அம்மியில் (அப்போ மிக்ஸி கிடையாதே) சட்னி அரைத்து, இட்லி, சாம்பார் எல்லாம் தயார் செய்தார்கள்.
இவ்வளவு வெண்மையான, மென்மையான இட்லியா என்று அனைவரும் பாராட்டி ருசித்து சாப்பிட்டார்கள். திருச்செந்தூருக்கு என் சின்ன அண்ணி திருமதி லோகா சுப்பிரமணியத்தையும் அழைத்துச் சென்றார்கள். மாலையில் மாயாபஜார் படம் பார்க்க பாலஸ்-டி-வேல்ஸுக்கு  கல்யாணியும் அவர்களுடன் போனாள்.

    அக்கா சென்னையில் இருப்பதால் திருமதி சரோஜா வளைகாப்பிலும், குழந்தை சீனிவாஸன் பெயர் சூட்டுவிழாவிலும் கலந்து கொண்டாள். வளைகாப்புக்கு போன என் பெரிய அண்ணன் திரு.முத்துவேல்,  அண்ணி திருமதி M. பொன்னம்மாள் இருவரையும் அப்போது நடந்து கொண்டிருந்த வஞ்சிக்கோட்டை வாலிபன்  படப்பிடிப்பை  பார்க்க  ஸ்டூடியோவுக்கு
 அழைத்துச்  சென்றார்களாம்.

    அவள் விகடன்   நடத்திய  மகளிர்  விழாவுக்கு  சென்ற   அக்காவும் கல்யாணியும்,  திரு.பா.சீனிவாசன் அவர்களிடம் தங்களை அறிமுகம்
 செய்து கொண்டதும் அப்பாவிடம் சொல்கிறேன் என்றாராம்.
   
    'நானும் விகடனும் என்று  ஆனந்தவிகடனில்
பிரபலங்கள் எழுதுவதைப் பார்த்ததும்,
'ஜெமினியும் நானும்' என்று  கட்டுரை  எழுதப் போகிறேன் என்றதும் 
எல்லோரும் தங்கள் நினைவில மலர்ந்த நிகழ்ச்சிகளை சொன்னார்கள்.  அதனால் தலைப்பு ''ஜெமினியும் நாங்களும்'' என்று மாறியது.

        

திருமதி.லோகா, திரு.சுப்பிரமணியன்
                                                                                                                             அக்கா,          நான்,              கோமதி,        கல்யாணி



    திரைக்கு வந்து பல மாதங்கள் ஓடிய ஜெமினி படங்கள் பற்றி சொல்ல நினைத்தால் முதலில் சந்திரலேகாதான். 31 வாரங்கள் ஓடியதாக என்  அண்ணன் சொன்னார். 

 ரஞ்சன் (இயற்பெயர் வெங்கடரமண சர்மா) முறைப்படி   FENCING ஃப்ரான்ஸில் கற்றவராம். சமீபத்தில் நெட்டில் படித்தேன். எம்.கே.ராதாவுடன் அவர் போடும் வாள் சண்டை போல அதற்குப் பிறகு எந்தப் படத்திலும் நான் பார்க்கவில்லை. FENCING - ஸ்டன்ட் சோமு  என்று படத்தின் டைட்டிலில் பார்க்கலாம்
 
இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ்,  ,கல்யாணமானதும் பால்கனியிலிருந்து நாட்டு மக்களுக்கு கை அசைப்பதை  டிவியில்   பார்த்ததும படத்தின் கடைசிக் காட்சியில்   எம்.கே.ராதாவும் டி.ஆர்.ராஜகுமாரியும் உப்பரிகையில் இருந்து மக்களைப்  பார்த்தது   நினைவு வந்தது. யு ட்யூபில் அந்த காட்சியை பார்க்க முடிந்தாலும் காபி ரைட்டினால் பதிவு செய்ய முடியவில்லை  ராஜ குடும்ப கல்யாணம் எப்படி நடக்கும் என்று டைரக்டர் வாசனின் அருமையான காட்சியமைப்பு. 



 
                                                        1953ல் ஒளவையார் படம் ரிலீஸ் அன்று, எங்கள் சொந்தங்கள், கம்பெனி ஆட்களுக்காக அப்பா ஒரு பிரத்யேக காலை காட்சி ஏற்பாடு செய்தார்கள். அப்பாவுடன் நாங்கள் பார்த்த ஒரே படம் அது தான். நூறாவது நாள் விழாவுக்கு நெல்லை வந்த திருமதி சுந்தராம்பாள், எங்கள் வீட்டுக்கும் வந்தார். என் தங்கை கோமா(5- 6)வை தன் மடியில் அமர்த்தி பழம் தந்ததை மறக்காமல் சொன்னாள். படத்தில் இருக்கும்  முருகன் யார் தெரியுமா? K.பாலாஜி.

 சக்ரதாரி, அபூர்வ சகோதரர்கள், சம்சாரம், மூன்று பிள்ளைகள், .....என்று  ஜெமினி படங்களை பற்றி எழுதத் தொடங்கினால். அது ஒரு தொடர் கட்டுரை ஆகிவிடும்.   
   
  ஜெமினியின் ஹிந்தி படம் 'இன்ஸானியத்,' தேவ் ஆனந்தும் திலீப் குமாரும் இணைந்து நடித்த ஒரே படம், பாலஸில் ரொம்ப நாள் ஓடியது. சிரிப்பு நடிகர் ஆகாவுடன் ஜிப்பி (சிம்பன்ஸி) செய்யும் சேட்டைகள் எல்லோரும் ரசித்த காட்சிகள்.

                                               பாலஸ் டி வேல்ஸ்-- ஈரடுக்கு மேம்பாலத்திலிருந்து நான் எடுத்த படம்

    தியேட்டர் அமைப்பு காரணமாக மேட்னி ஷோ தடை ஆனதால், ஜெமினியின் வஞ்சிக்கோட்டை வாலிபனை பார்க்க பார்வதி டாக்கீஸ் போனபோது எனக்கு கண்ணில் நீர் கசிந்தது. பழைய படங்களை தினம் இரண்டு காட்சிகள் மட்டும் நடத்தும் போது ஈரடுக்கு மேம்பாலம் அமைந்ததால் ரசிகர் கூட்டம் குறைந்தது, குத்தகை காலம் முடிந்ததும் நில உரிமையாளர்களான கோவில் நிர்வாகக்குழு வாடகையை பல மடங்கு உயர்த்தியது போன்ற பல காரணங்களால்  தியேட்டரை மூட வேண்டியதாயிற்று.
     ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்பார்கள். இன்று ஆலும் வேலும்தான் பாலஸுக்கு நிழல். கோவில் நிர்வாகம் அந்த இடத்தில் கல்யாண மண்டபம் கட்ட திட்டமிடுகிறார்களாம்.  ஜெமினியும் பாலஸும் சேர்ந்து கல்யாண மாப்பிள்ளை- பெண்ணை வாழ்த்துவோம்
                                                                                    
                                                                                                    சோ.வடிவேல் முருகன்






10 comments:

ராமலக்ஷ்மி said...

புதிதாகப் பல தகவல்கள் தெரிந்து கொண்டேன்:). நன்றி. அவ்வையார் படத்துக்கான வழவழப்பான நோட்டீஸ் கட்டுக் கட்டாகப் பல வருடங்களுக்கு வீட்டில் இருந்தன. ‘சினிமா கொட்டு’ விளையாடுகையில் அவற்றைப் பயன்படுத்துவோம். தியேட்டர் முன் அந்நாளில் எடுக்கப்பட்ட ஒரு க்ரூப் ஃபோட்டோ (அப்பா அதில் சிறுவனாக தாத்தா அருகில் நிற்பார்கள்), அவ்வையார் நோட்டீஸ் ஸ்கேன் இரண்டும் அனுப்பி வைக்கிறேன்.

சகாதேவன் said...

நான் பதிவு எழுதியே ஒரு வருஷமாச்சு. அத்தைகள், பெரியம்மா, பெரியப்பா எல்லோரிடமும் கேட்டு ட்ராஃப்ட்ல் இருந்ததை இன்றுதான் போஸ்ட் செய்தேன். உன் முதல் கமெண்டுக்கு நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

பல விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது..... மிக்க நன்றி ஐயா....

goma said...

கட்டுரையின் கடைசி பாரகிராஃப் உங்கள் கலங்கிய விழிகளைக் காட்டியது 
நானே யோசித்த விஷயம் :திரு வாசன் தன் நண்பர்  thiru சோமசுந்தரத்தை மதிக்கும் வகையில் மோட்டார் சுந்தரம் பிள்ளை என்று தன் படத்துக்கு பெயரிட்டிருப்பாரோ    

சுகா said...

படித்தேன். கலங்கினேன். லட்சுமி திரையரங்கும் ‘மஹால்’ ஆகிவிட்டதாக சமீபத்தில் அறிந்தேன். திருநவேலியின் அத்தனை திரையரங்குகளிலும் நான்கு தலைமுறைகளின் மூச்சுக்காத்து இருக்கும். இடிக்கப்பட்ட பிறகு அவை எங்கு சென்றதோ!

சுகா

சகாதேவன் said...

ராமலக்ஷ்மி,
ஒளவையார் நோட்டீஸ் படத்தை இணைத்துள்ளேன். நன்றி

வெங்கட்,
வருகைக்கு நன்றி

கோமா,
மோட்டார் சுந்தரம் பிள்ளை - நீங்கள் சொன்ன மாதிரி இருக்கலாம்

சுகா
நீங்கள் கட்டாயம் இதைப் படிக்க வேண்டும் என்றுதான் முகநூலில் உங்கள் பக்கத்தில் அழைத்தேன்.
//படித்தேன்,கலங்கினேன்// உங்கள் உணர்ச்சி புரிகிறது. மிக்க நன்றி.

நானானி said...

அருமை முருகன்.
'மோட்டார்சுந்தரம்பிள்ளை' மிக சரியான யூகம்.
அத்தனை மூச்சுக்காற்றும் எங்கள் இதயக் கூட்டில நிரம்பியிருக்கின்றன..சுகா!
மலரும் நினைவுகளை மலர்த்தி மணம் பரப்பிவிட்டீகள்.

SANKAR said...

புதிய தொழில் நுட்பத்தை பயன் படுத்தத திரை அரங்குகளே மூடபடுகின்றன.லெட்சுமி,ராயல்,பார்வதி,சிவசக்தி கலைவாணி,செல்வம் மூடபட்டாலும் பேரின்ப விலாஸ் ராம் முதுரம் பாம்பே போன்ற புதிய அரங்குகளும் நெல்லையில் உள்ளன.ஆனால் இவையும் அநியாய கட்டண கொள்ளையால் விரைவில் மூடப்படலாம்.சனி ஞாயிறு தவிர மற்ற எல்லா நாளிலும் ஒரு காட்சிக்கு 50 -60 பேர் மட்டுமே வருகின்றனர். சங்கர் பாளை

தி.தமிழ் இளங்கோ said...

உங்கள் பதிவுகளை இப்போதுதான் படிக்கத் தொடங்கி இருக்கிறேன். ( கல்யாண சமையல் சாதம்! (2007) பதிவு பிரமாதம்!) பழையகாலத்து நினைவுகள் என்றாலே அவற்றை படிப்பதில் எனக்கு மிக்க ஆர்வம் உண்டு. உங்கள் பதிவில் ஜெமினி இரட்டையரைப் பார்த்தபோது, என் அம்மா என்னை தனது இடுப்பில் தூக்கிக் கொண்டு, திருச்சி ராக்சி தியேட்டருக்கு சினிமா பார்க்கச் சென்ற அந்த நாள் ஞாபகம் வந்தது. தொடர்ந்து எழுதவும்.

pichaikaaran said...

வாவ்...செம இண்டரஸ்டிங் சார்.. வரலாற்றின் ஒரு துளியை அழகாக பதிவு செய்துள்ளீர்கள்...அருமை...உங்களுக்கு சிறிய விஷ்யமாக தோன்றும் அனுபவங்கள்கூட இன்று வரலாற்று ஆவணமாகும்...எனவே தொடர்ந்து நிறைய பதிவு செய்யுங்கள்...அந்த காலத்தில் தயாரிப்பாளர்களுக்கு இருந்த மரியாதை , பிராண்ட் இமேஜ் போன்றவை வெகு அழகு..