Saturday, December 21, 2013

ரஜினியை விட்டுருங்கப்பா



அவர் அரசியலுக்கு வருவாரா என்று சில ஆண்டுகளாகவே பல எதிர்பார்ப்புகள். போனவாரம் 12/12 அன்று அவர் பிறந்தநாள் விழா வள்ளுவர்  கோட்டத்தில் நடத்த அனுமதி மறுக்கப் பட்டதால் ஒய்.எம்.சி.ஏ அரங்கில் பொது விழாவாக நடந்ததாம். விழாவில் பேசிய ரஜினி, "யார் ஆளணும், யார் ஆளக் கூடாதுன்னு ஆண்டவன் முடிவு செய்வான்..."என்று அருணாசலம் ஸ்டைலில்,......"ரஜினி ஆளுவான்" என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்.

 அரசியலில் பெரிய ஆளாகி அமைச்சர் ஆக சினிமாதான் முதல் படி என்று ஏன் நினைக்கிறார்கள்.  எம்ஜிஅர் மலைக்கள்ளனில் "எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" என்று பாடினார். பின் "நானே போடப்போறேன் சட்டம் பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்" என்றார். "நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இனி ஏழைகள் வேதனை படமாட்டார் என்றும் சொன்னார். திமுகவில் இருந்தே படங்களில் சொல்லி பிறகு அதிமுக தொடங்கி மக்கள் ஆதரவில் சிஎம் ஆனார்.

முதல்வன் படத்தில் அர்ஜுன் போல வி.என்.ஜானகியும் ஒருநாள் முதல்வர் ஆனார். ஜெயலலிதா பல முறை முதல்வர் ஆகி கட்சியையே அனைத்து இந்திய அம்மா திமுக ஆக்கி விட்டார்.

விஜயகாந்த் தன் படங்களில் சண்டைக் காட்சிகளில் பிரமாதமாக நடிப்பார். சட்டசபையில்  பேசவேண்டிய வசனம் எழுதித் தரவும் டைரக்ட் செய்யவும் ஆளில்லை. குடித்தால் என்ன தப்பு என்று பொது இடங்களில் பேசி மதிப்பைக் கெடுத்துக் கொள்கிறார்.  சரத்குமார், நெப்போலியன் எல்லாம் என்ன செய்யப் போகிறார்களோ?

 கலைஞர், 1954லிலேயே "அண்ணா நீதான் நாட்டை ஆள வேணும்" என்று வசந்தன் (காகா ராதாகிருஷ்ணன்) மனோகரனிடம் (சிவாஜி கணேசன்) சொல்வதாக வசனமெழுதினார். 1967ல் அது நடந்தது. அண்ணாவுக்குப் பிறகு சிஎம் ஆனவர் மது முதல் பல திட்டங்களைக் கொண்டு வந்தார். பிறகு அம்மாவும் அவரும் மாறி மாறி சிஎம் ஆகி பலத்த போட்டி நடக்கிறது.. வசனகர்த்தா, பாடலாசிரியர், தயாரிப்பாளர் என்று சினிமாவில் கலைஞரின் உழைப்பை நூற்றாண்டு விழாவில் அம்மா ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். கலைஞரின் குடும்பத்திலும் வாரிசுகள் பதவி சண்டை போடுகிறார்கள்

சிவாஜி கணேசனும் அரசியலில் நுழைந்து  செய்வதறியாமல் கொஞ்சம் இழப்புக்கு பின் விலகிக் கொண்டார். ஜெமினி கணேசனோ இந்த வேலையே வேண்டாம் என்று நிறைய சொத்துக்கள் வாங்கி நிம்மதியானார். வடிவேலு பாவம்,  தேர்தல் பிரச்சாரம் செய்ததால் ரெண்டு வருஷமாக பட வாய்ப்புக்கள் இழந்து நொந்து போனார்.

 ரஜினியை விட்டுருங்க.  அரசியல் வேண்டாம்.அவரைத் தூண்டாதீர்கள்.  நல்ல பேரும் புகழும் சம்பாதித்து விட்டார். மந்திரியாக மக்களுக்கு என்னென்ன செய்யணுமோ அதை ரஜினியாகவே இருந்து செய்து கொண்டு, சினிமாவில் தொடர்ந்து, இன்று  பிறக்கப் போகும் பெண் குழந்தையுடன் 15 வருஷம் கழித்தும் ஹீரோவாக நடிக்கணும்

Thursday, December 19, 2013

Good for your goods

டில்லியிலிருந்து வெளியாகும் பத்திரிகையான ஆல் இந்தியா "மோட்டார் டிரான்ஸ்போர்ட்"Good for your goods - to carry perishables safely with extra mileage"
  என்று இரண்டு இதழ்களில் வந்த  ஜேகே ரேடியல் டயர் - என்னை கவர்ந்த விளம்பரங்கள். 

Sunday, December 1, 2013

நான் சந்தித்த சினிமா பிரபலங்கள்

ஒருமுறை அப்பாவுடன் நானும் மதுரை சென்றபோது(1968ல்) டி.வி.எஸ் விருந்தினர் மாளிகையில் தங்கி, காலையில் புறப்படுமுன், அங்கு தங்கியிருந்த  சிவாஜி கணேசனுக்கு அப்பாவை அறிமுகம் செய்தார்
 கெஸ்ட் ஹவுஸ் மானேஜர்.
  தான் புகைத்துக் கொண்டிருந்த சிகரெட்டை அணைத்து விட்டு,தண்ணீர் எடுத்து வாய், கையெல்லாம் சுத்தம் செய்து,  அப்பா அருகில் வந்து வணங்கி, சில நிமிடங்கள் பேசினார்.

என் மகள் ராமலக்ஷ்மிக்கு (1975/76)திருப்பதியில் முடி எடுத்துவிட்டு காரில் மெட்ராஸ் வந்தோம். நுங்கம்பாக்கம் சாலையில் எதிரில் வந்த ஜெயசங்கர் என் மகளைப்பார்த்து காரை ஸ்லோ பண்ணி, "எந்த ஊர் மொட்டை , திருப்பதியா? என்று கேட்டுவிட்டு விரைந்து சென்றார்.

நான் டி.வி.எஸ்ஸில்  பயிற்சியாளனாக சேர்ந்து படிப்படியாக டெபுடி ஒர்க்ஸ் மானேஜராகி,  சில வருஷத்தில் விலகினேன்.
 மதுரையில் ஒரு நாள் செவர்லே காரில் சாண்டோ சின்னப்ப தேவர், தன் குழுவுடன் வந்தார். காரில் சின்ன வேலை தான். அவரை விசிட்டர் அறையில் அமரச் செய்து, இரண்டு மெக்கானிக்கிடம் சொல்லி விரைவில் முடித்து, ஓட்டிப் பார்த்து விட்டு  அவரிடம் வந்து உங்கள் கார் ரெடி என்றேன். அதுக்குள்ளாகவா? தம்பி உன் பேர் என்ன என்றவரிடம் , 'வடிவேல் முருகன்'னு சொன்னதும் "முருகா முருகா" என்று என்னைக் கட்டிப்பிடித்து நன்றி சொன்னார் அந்த முருக பக்தர்.

திருச்சிகிளையில் பார்ட்ஸ் பிரிவில் கணேசன்னு ஒரு புதுக்கோட்டைக்காரர் இருந்தார். ஜெமினி கணேசனும் புதுக்கோட்டைதானே. இருவரும் சொந்தக்காரர்கள்கூட..  திருச்சி வந்த ஜெமினி, புதுக்கோட்டை கணேசனைப் பார்க்க டி.வி.எஸ் வந்தார். கணேசன் உடனே என்னை அழைத்து ஜெமினிக்கு அறிமுகம் செய்தார். ஒளவையாரிலிருந்து எனக்குப் பிடித்த அவர் படங்களை சொன்னேன்.

 திருநெல்வேலி டி.வி.எஸ்ஸில் ஒருநாள், டெல்லி கணேஷ், தன் நண்பர் கோபாலகிருஷ்ணனைப் பார்க்க வந்தார். இருவருக்கும் அருகில் உள்ள முறப்பநாடுதான் சொந்த ஊர்.

குமுதத்தில், அரசு ஒரு கேள்விக்கு பதில் சொன்னார், முந்தாநாள் நடிகைகள், நேற்றைய நடிகைகள், இன்றைய நடிகைகளில் தனக்கு யாரைப் பிடிக்கும் என்று.
 விஜய் டிவியின் 'ஆபீஸ் சீரியலில் வரும் லக்ஷ்மியின் தங்கை, தன் மகளின் வகுப்பு தோழியாம். சீக்கிரம் லக்ஷ்மியை பேட்டி கண்டு உங்கள் காதில் புகை வருமாறு எழுதுவேன் என்று வலைப்பூவில் ஒரு பதிவர் எழுதினார். இரண்டையும் நான் ரசித்தேன்.

சந்தித்த நடிகர்கள் பற்றி சொல்லிவிட்டேன். ஆனால் உங்கள் காதில் புகை வரும்படி எழுத,  முந்தாநாள், நேற்றைய, இன்றைய நடிகை யாரையும் நான் இன்னும் சந்திக்கவில்லை

     

Tuesday, November 26, 2013

          "பூப்பூவா பூத்திருக்கு.........

பூமியிலே ஆயிரம் பூ,  பூவிலே சிறந்த பூ

என்ன பூ?........."

 என்று அறிய, நாட்டார் வழக்காற்றியல் துறையும் அத்துறையின் ஆய்வு மையமும் தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரியும் இணைந்து, பள்ளிகளுக்கான கிராமியக் கலைப் போட்டிகளை சவேரியார் கல்லூரியில் நடத்தினார்கள்  . இரண்டு நாட்களாக நடக்கும் "கிராமியம்- 2013" நிகழ்ச்சிக்கு இன்றுதான் என்னால் போக முடிந்தது.

 குழுப் பாடல், கதை சொல்லல், தனிப் பாடல்,கோலம், குழு நடனம், குறு நாடகம், மாறுவேடம் என்று பல போட்டிகள்.






கோலப்போட்டியில் பையன்களும் கலந்து கொண்டு ரங்கோலி வரைந்து வண்ணப்போடிகள் தூவினார்கள். கோலம் என்றால் எனக்கு புள்ளி வைத்துபோடுவதுதான் கோலம்.



புள்ளி கோலம் போட்ட பெண்ணிடம், "என் அம்மா போட்ட கோலம் மாதிரி இருக்கு" என்றேன். அவளுக்கு ஒரே சந்தோஷம்.

   பங்கேற்ற பள்ளி அணிகளுக்கு பூக்களின் பெயர்கள் தந்திருந்தார்கள். நடுவர்களுக்கு  எந்தப் பள்ளி  என்று  தெரியக்கூடாது  என   அணிகளுக்கு பெயர்கள்  அல்லது   1,2,3   என்று நம்பர்களாக   குறிப்பிடுவது    வழக்கம்

அல்லி,  தாமரை,  தாழம்பூ,  வாடாமல்லி,  மகிழம்பூ,  கனகாம்பரம்,  சூரியகாந்தி,  சங்குபுஷ்பம்,  பிச்சி,  சாமங்கி,  மனோரஞ்சிதம்,  செம்பருத்தி, நித்யகல்யாணி,  மகரந்தம்,  ரோஜா,  நீலாம்பரி,  அந்திமந்தாரை,  பூவரசு.

 ஆகா, இத்தனை பூக்களா? அமைப்பாளர்களின் ரசனைக்கு என் பராட்டுக்கள்.
  இன்று மாலை 4 மணிக்கு  சிறந்த மூணு பூக்களுக்கு, முதல், இரண்டாம்,      மூன்றாம் பரிசுகள் தருவார்கள்

   என் கல்லூரிக்குள் நுழைந்ததும் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது.

1962ல் இப்படி இருந்த நான் இப்போ எப்படி ஆயிட்டேன்னு பாருங்க. சினிமாவிலே ஃப்ளாஷ்பேக் என்றால்  B/W தானே. எதிரில் படி ஏறி வந்த மாணவனிடம் கேமரா தர, அவன் எடுத்த படம்

Monday, November 25, 2013

செந்தமிழ் தேன்மொழியாள்

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் தவறாமல் பார்க்கிறேன். குழந்தைகள் எல்லொரும் ரொம்ப அழகாக பாடுகிறார்கள்.. 

இன்று உன்னி கிருஷ்ணன் டீமில் வந்த சோனியா, சர்த் சந்தோஷ், சாயி விக்னேஷ் மூவருமே தாங்கள் தேர்வு செய்த பாட்டை அழகாக பாடினார்கள்.

"வான் நிலா" பாட்டில் வயலின் வாசித்தவரை, சிறப்பு விருந்தினர் வயலினிஸ்ட் சீனிவாசன் பாராட்டி 1978ல் தான் சென்னை வந்த புதிதில் எஸ்.பி.பாலசுப்ரமணியனுடன் ஒரு மேடைக் கச்சேரில் அந்த் பாட்டுக்கு தான் வயலின் வாசித்ததை சொன்னார்."

"செந்தமிழ் தேன்மொழியாள்" என்று சாயி விக்னேஷ் பாடியதும் , சீனிவாசன் பாராட்டி, படத்தில் பாடியது திருச்சி லோகநாதன் தானே என்று கேட்க விக்னேஷ் ஆமாம் என்று சொன்னான். அனந்த் சார் உடனே அது மாலையிட்ட மங்கை படத்தில் டி.ஆர்.மகாலிங்கம் பாடியது என்று சொல்வார் என்று பார்த்தேன். இல்லையே.

ஆர்கெஸ்ட்ராவில் எல்லோருமே அழகாக வாசிக்கிறார்கள். புல்லாங்குழல், வயலின், தபேலா வாசிப்பை முக்கியமான இடங்களில் கேமரா காட்டுவது ரொம்ப அழகு

Sunday, November 24, 2013

கிட்டிவல் (Kiddival)

ஆண்டு தோறும் நடக்கும்  LKG முதல் 5ம் வகுப்பு  குழந்தைகளுக்கான போட்டி நேற்று சாரா டக்கர் கல்லூரியில் நடந்தது

குழந்தைகளின் வயது, திறமைக்கு ஏற்றவாறு
திருக்குறள் ஒப்பித்தல்,  க்ரேயான் கலரிங்,  ஆங்கிலம்/தமிழில் பேச்சுப் போட்டியும்  கையெழுத்து போட்டியும்,  பெயிண்டிங்,  வாய்ப்பாட்டு
வாத்திய இசை,   பரதநாட்டியம்,  குழு நடனம்,
ஃபாஷன் - பாய்ஸ்/கேர்ல்ஸ்  என்று பல போட்டிகள்.



1600+ மாணவ மாணவிகள், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களிலிருந்து ந்து அசத்தினார்கள்.

காலை 9 மணிக்கு சீதாலக்ஷ்மி விஸ்வநாதன் அவர்கள்  தொடங்கி வைக்க, மாலை வரை நடந்த போட்டிகளில் சங்கர்நகர் ஜெயேந்திரா கோல்டன் ஜூபிலி, , இலஞ்சி பாரத் வித்யா மந்திர் மெட்ரிக், வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளிகள் முதல் மூன்று பரிசுகளை பெற்றன.
எல்லா போட்டிகளிலும் நாலாவது  மார்க் வாங்கிய  குழந்தைகள்.  ஆறுதல் பரிசாக ஒரு கப் பெற்றார்கள்.  பரிசளிப்பு விழாவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத் துணைவேந்தர் திரு.ஏ.கே.குமரகுரு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்தி பேசினார்


குழந்தைகள் மேல் அளவற்ற பாசம் கொண்ட Rm.K..விஸ்வநாதன் 24 ஆண்டுகள் முன்பு தொடங்கிய கிட்டிவலை தொடர்ந்து, அவர் தம்பிகள் திருநெல்வேலி வெஸ்ட்,திருநெல்வேலி வேணுவனம் ரோட்டரி கிளப் மெம்பர்களுடன் சேர்ந்து நடத்துகிறார்கள்.


ஆர்ரெம்கேவி நிர்வாகிகள் திரு.கே.மகேஷ் கோவையிலிருந்தும், என்.மாணிக்கவாசகம் சென்னையிலிருந்தும் வந்திருந்தார்கள்.

க்விஸ் நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் வரிசையில் இருந்த என்னை பார்த்த  க்விஸ் மாஸ்டர் திரு ஜான் சுதாகர், இவர்தான் என் முதல் க்விஸ் மாஸ்டர் என்று என்னை அவைக்கு அறிமுகம் செய்தார். 1982ல் நான் நடத்திய க்விஸ்ஸில் அவர் முதலாக கலந்து கொண்டதை நினைவு கூர்ந்தார்










Saturday, October 26, 2013

ஜெமினியும் நாங்களும்

                     



 ஜெமினியும் நாங்களும்


 

  'மூங்கில் மூச்சு' என்று திரு K.சுகா அவர்கள்  விகடனில்  இரண்டு ஆண்டுகளுக்கு முன் எழுதிய தன் தொடர் கட்டுரையில் ஒரு வாரம் ,திருநெல்வேலியில் உள்ள தியேட்டர்கள் பற்றி எழுதும்போது 'பாலஸ்-டி-வேல்ஸ் பற்றி அந்த   காலத்து ஆட்கள் விசேஷமாக சொல்வார்கள்' என்றார். நான் அந்தகாலத்து ஆள் (72) மட்டுமல்ல, பாலஸ் டி வேல்ஸ் தியேட்டர்காரனும் கூட. உடனே எழுத நினைத்தாலும் பல வேலைகள் காரணமாக முடியவில்லை.


                                    சினிமா ப்ரொட்யூசர், டிஸ்ட்ரிபியூட்டர், எக்ஸிபிட்டர் எல்லாம்  ஒரு குடும்பமாக பழகிய காலம்.  ஏ.வி.எம் படங்கள் பாப்புலர் டாக்கீஸிலும். மாடர்ன் தியேட்டர்ஸ் , விஜயா-வாஹினி படங்கள் ராயல் டாக்கீஸிலும் ஓடும். 1962ல் பாப்புலர் உரிமையாளர்கள் கட்டிய சென்ட்ரல் தியேட்டரை திரு. ஏ.வி.மெய்யப்ப செட்டியார் அவர்கள் வந்து திறந்துவைத்தார்.

 ஜெமினி நிறுவனம் தங்கள் படங்களை ஜெமினி பிக்சர் சக்யூட் என்ற பெயரில் தாங்களே எல்லா ஊர்களிலும்,தியேட்டர்காரர்களுடன் ஒப்பந்த அடிப்படையில் திரையிட்டார்கள். அப்படி தொடங்கியதுதான் ஜெமினி- பாலஸ்-டி-வேல்ஸ் உறவு.  
தாத்தா திரு.ஏ.ஆர்.சண்முகம் பிள்ளை,அப்பா திரு.எம்.சோமசுந்தரம் பிள்ளை,  இருவரும்தான் தியேட்டரின் பார்ட்னர்கள். 

ஏ.ஆர்.சண்முகம் பிள்ளை       எம்.சோமசுந்தரம் பிள்ளை

 ஜெமினி படம  ரிலீஸ் தேதியில் வேறு எந்த படம் ஓடிக்கொண்டிருந்தாலும்  திரையிட வேண்டும். 1943ல் ஜெமினியின் மங்கம்மா சபதம் ரிலீஸ் ஆனபோது நன்றாக ஓடிக்கொண்டிருந்த தியாகராஜ பாகவதரின் 'சிவகவி', தொடர் ஓட்டமாக ராயல் டாக்கீஸுக்கு மாற்றப்பட்டதாக என் மணி அண்ணன் சொன்னார்.

 ஜெமினியின் பிரமாண்டமான தயாரிப்பான 'சந்திரலேகா', 1948ல் வரும் வரை எங்கள் தியேட்டரில் சிங்கிள் ப்ரொஜெக்டர்தான். தயாரிப்பாளர்-டைரக்டர் திரு S.S.வாசன் அவர்கள் அப்பாவிடம்,   "படம் மூன்றரை மணி நேரம் ஓடும். அதனால் டபுள் ப்ரொஜெக்டராக மாற்றி விடுங்கள்" என்று சொன்னதால் புதிய RCA Simplex ப்ரொஜெக்டர்களும் RCA சவுண்ட் சிஸ்டத்துடன் வந்தது. ஜெமினி இரட்டையர்களின் குழலோசை ரொம்ப தூரம் கேட்குமாம்.
 

1955ல் சென்னை உட்லண்ட்ஸில் நடந்த என் அக்கா திருமதி பொன்னம்மாள் நடராஜனின் திருமண வரவேற்பில், கூட்டத்தில் பேசி பழக்கமில்லாததால் அத்தான் எழுதித் தந்த உரையை மனப்பாடம் செய்து அக்கா விருந்தினரை வரவேற்றாள்.
 திரு வாசன் அவர்கள் கலந்து கொண்டு அக்காவுக்கு ஒரு தங்க நெக்லெஸ் பரிசளித்தார். புகைப் படங்களுடன் நிகழ்ச்சிகளை  சொல்ல     ந்த ஒரு ''பொக்கிஷம்'' மட்டும்தான்  அக்காவின் கல்யாண ஆல்பத்திலிருந்து கிடைத்தது


அமர்ந்திருப்போர் இடமிருந்து வலம்  :அத்தான் நடராஜன்,      கிண்டி இஞ்ஜினியரிங் காலேஜ் பிரின்ஸிபல் திரு,பால், 
                                               திரு எஸ்.எஸ்.வாசன்,        அப்பா. --   இடது பக்கம் சிறுவன்,  நான்(14)


திரு வாசன் அவர்களின் குமாரர் திரு பாலசுப்பிரமணியன் கல்யாணத்திற்கு அப்பாவும் தாத்தாவும் சென்றார்கள். ஆனந்தவிகடனின்  இணை பத்திரிகையான  'நாரதர்'  இதழில் கல்யாண போட்டோக்களுடன் அவர்கள் படமும் 'திருநெல்வேலி பிரமுகர்கள்' என்ற குறிப்புடன் பிரசுரமானதாம்


புதுமணத் தம்பதிகளுடன் திருமதி பட்டம்மாள் வாசன் அவர்கள், திருச்செந்தூர் செல்லுமுன் நெல்லை வந்து எங்கள் வீட்டில் தங்கினார்கள். அவருடன் விகடன் குழுவான மணியன் (பின்னாளில் ''இதயம் பேசுகிறது''), ஓவியர் கோபுலு உட்பட பலர் வந்திருந்தார்கள். மருமகள் திருமதி சரோஜாவை அறிமுகம் செய்த திருமதி வாசன், 'இவள்தான் எங்கள் வீட்டு மகாலக்ஷ்மி' என்றார்கள். (அந்தப் படம் அப்போது ஓடிக்கொண்டிருந்தது ). 

திரு பாலு அவர்கள் குளித்து  விட்டு வந்ததும் விரலில் குங்குமம் எடுத்து கட்டை விரலால்  சுற்றி அதை வட்டமாக்கி நெற்றியில் இட்டுக்கொண்டதை பார்த்த தங்கை கல்யாணி அது முதல் நானும் அப்படித்தான் செய்கிறேன் என்கிறாள். மருமகள் காதில் அணிந்திருந்த ஜிமிக்கி, மாட்டல்  ரொம்ப அழகாக இருக்கிறதே என்றுதான் என் அம்மா சொன்னார்களாம்.. ஊருக்குப் போனதும் திருமதி வாசன்,அதே போல ஒரு ஜோடி வாங்கி அனுப்பி வைத்தார் என்று அக்கா சொன்னாள்.
 
  உதவியாட்களுடன் அம்மா, இரண்டு அம்மியில் (அப்போ மிக்ஸி கிடையாதே) சட்னி அரைத்து, இட்லி, சாம்பார் எல்லாம் தயார் செய்தார்கள்.
இவ்வளவு வெண்மையான, மென்மையான இட்லியா என்று அனைவரும் பாராட்டி ருசித்து சாப்பிட்டார்கள். திருச்செந்தூருக்கு என் சின்ன அண்ணி திருமதி லோகா சுப்பிரமணியத்தையும் அழைத்துச் சென்றார்கள். மாலையில் மாயாபஜார் படம் பார்க்க பாலஸ்-டி-வேல்ஸுக்கு  கல்யாணியும் அவர்களுடன் போனாள்.

    அக்கா சென்னையில் இருப்பதால் திருமதி சரோஜா வளைகாப்பிலும், குழந்தை சீனிவாஸன் பெயர் சூட்டுவிழாவிலும் கலந்து கொண்டாள். வளைகாப்புக்கு போன என் பெரிய அண்ணன் திரு.முத்துவேல்,  அண்ணி திருமதி M. பொன்னம்மாள் இருவரையும் அப்போது நடந்து கொண்டிருந்த வஞ்சிக்கோட்டை வாலிபன்  படப்பிடிப்பை  பார்க்க  ஸ்டூடியோவுக்கு
 அழைத்துச்  சென்றார்களாம்.

    அவள் விகடன்   நடத்திய  மகளிர்  விழாவுக்கு  சென்ற   அக்காவும் கல்யாணியும்,  திரு.பா.சீனிவாசன் அவர்களிடம் தங்களை அறிமுகம்
 செய்து கொண்டதும் அப்பாவிடம் சொல்கிறேன் என்றாராம்.
   
    'நானும் விகடனும் என்று  ஆனந்தவிகடனில்
பிரபலங்கள் எழுதுவதைப் பார்த்ததும்,
'ஜெமினியும் நானும்' என்று  கட்டுரை  எழுதப் போகிறேன் என்றதும் 
எல்லோரும் தங்கள் நினைவில மலர்ந்த நிகழ்ச்சிகளை சொன்னார்கள்.  அதனால் தலைப்பு ''ஜெமினியும் நாங்களும்'' என்று மாறியது.

        

திருமதி.லோகா, திரு.சுப்பிரமணியன்
                                                                                                                             அக்கா,          நான்,              கோமதி,        கல்யாணி



    திரைக்கு வந்து பல மாதங்கள் ஓடிய ஜெமினி படங்கள் பற்றி சொல்ல நினைத்தால் முதலில் சந்திரலேகாதான். 31 வாரங்கள் ஓடியதாக என்  அண்ணன் சொன்னார். 

 ரஞ்சன் (இயற்பெயர் வெங்கடரமண சர்மா) முறைப்படி   FENCING ஃப்ரான்ஸில் கற்றவராம். சமீபத்தில் நெட்டில் படித்தேன். எம்.கே.ராதாவுடன் அவர் போடும் வாள் சண்டை போல அதற்குப் பிறகு எந்தப் படத்திலும் நான் பார்க்கவில்லை. FENCING - ஸ்டன்ட் சோமு  என்று படத்தின் டைட்டிலில் பார்க்கலாம்
 
இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ்,  ,கல்யாணமானதும் பால்கனியிலிருந்து நாட்டு மக்களுக்கு கை அசைப்பதை  டிவியில்   பார்த்ததும படத்தின் கடைசிக் காட்சியில்   எம்.கே.ராதாவும் டி.ஆர்.ராஜகுமாரியும் உப்பரிகையில் இருந்து மக்களைப்  பார்த்தது   நினைவு வந்தது. யு ட்யூபில் அந்த காட்சியை பார்க்க முடிந்தாலும் காபி ரைட்டினால் பதிவு செய்ய முடியவில்லை  ராஜ குடும்ப கல்யாணம் எப்படி நடக்கும் என்று டைரக்டர் வாசனின் அருமையான காட்சியமைப்பு. 



 
                                                        1953ல் ஒளவையார் படம் ரிலீஸ் அன்று, எங்கள் சொந்தங்கள், கம்பெனி ஆட்களுக்காக அப்பா ஒரு பிரத்யேக காலை காட்சி ஏற்பாடு செய்தார்கள். அப்பாவுடன் நாங்கள் பார்த்த ஒரே படம் அது தான். நூறாவது நாள் விழாவுக்கு நெல்லை வந்த திருமதி சுந்தராம்பாள், எங்கள் வீட்டுக்கும் வந்தார். என் தங்கை கோமா(5- 6)வை தன் மடியில் அமர்த்தி பழம் தந்ததை மறக்காமல் சொன்னாள். படத்தில் இருக்கும்  முருகன் யார் தெரியுமா? K.பாலாஜி.

 சக்ரதாரி, அபூர்வ சகோதரர்கள், சம்சாரம், மூன்று பிள்ளைகள், .....என்று  ஜெமினி படங்களை பற்றி எழுதத் தொடங்கினால். அது ஒரு தொடர் கட்டுரை ஆகிவிடும்.   
   
  ஜெமினியின் ஹிந்தி படம் 'இன்ஸானியத்,' தேவ் ஆனந்தும் திலீப் குமாரும் இணைந்து நடித்த ஒரே படம், பாலஸில் ரொம்ப நாள் ஓடியது. சிரிப்பு நடிகர் ஆகாவுடன் ஜிப்பி (சிம்பன்ஸி) செய்யும் சேட்டைகள் எல்லோரும் ரசித்த காட்சிகள்.

                                               பாலஸ் டி வேல்ஸ்-- ஈரடுக்கு மேம்பாலத்திலிருந்து நான் எடுத்த படம்

    தியேட்டர் அமைப்பு காரணமாக மேட்னி ஷோ தடை ஆனதால், ஜெமினியின் வஞ்சிக்கோட்டை வாலிபனை பார்க்க பார்வதி டாக்கீஸ் போனபோது எனக்கு கண்ணில் நீர் கசிந்தது. பழைய படங்களை தினம் இரண்டு காட்சிகள் மட்டும் நடத்தும் போது ஈரடுக்கு மேம்பாலம் அமைந்ததால் ரசிகர் கூட்டம் குறைந்தது, குத்தகை காலம் முடிந்ததும் நில உரிமையாளர்களான கோவில் நிர்வாகக்குழு வாடகையை பல மடங்கு உயர்த்தியது போன்ற பல காரணங்களால்  தியேட்டரை மூட வேண்டியதாயிற்று.
     ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்பார்கள். இன்று ஆலும் வேலும்தான் பாலஸுக்கு நிழல். கோவில் நிர்வாகம் அந்த இடத்தில் கல்யாண மண்டபம் கட்ட திட்டமிடுகிறார்களாம்.  ஜெமினியும் பாலஸும் சேர்ந்து கல்யாண மாப்பிள்ளை- பெண்ணை வாழ்த்துவோம்
                                                                                    
                                                                                                    சோ.வடிவேல் முருகன்