Wednesday, December 5, 2007

கல்யாண சமையல் சாதம்

கல்யாண சமையல் சாதம்
காய்கறிகளும் பிரமாதம்
சாப்பிட்ட பிறகு பார்த்தால்
எல்லா இலையிலும் மீதம்.

முன்னெல்லாம் கல்யாண வீட்டில் முகூர்த்தம் முடிந்ததும் இலை போட்டு சாப்பிட அழைப்பார்கள். பாயில் உட்கார்ந்து நாமே தண்ணீர் விட்டு இலை கழுவியதும் உப்பு, ஊறுகாயில் ஆரம்பித்து பரிமாறுவார்கள். ஒரு "நாலு குழி சட்டி"யில் பொரியல், கூட்டு, அவியல், பச்சடி என்று கேட்டு அதனதன் இடத்தில் இடுவார்கள். சாப்பிடும்போதுஇலையைப் பார்த்து மீண்டும் பரிமாறுவார்கள். நாம் வேண்டியதை வாங்கிக் கொள்ளவும் பிடிக்காததை ஒதுக்கி விடவும் முடியும். இலையில் எதுவும் வீணாகாமல் போகும்.

எங்கள் வீட்டுக் கல்யாணப் பந்தியில் என் அருகே அமர்ந்த என் அண்னனின் நண்பர் திரு.கந்தசாமி அவர்கள் என்னிடம் சொன்னார், " உன் இலையில் மிளகாய், கரிவேப்பிலை, முருங்கைக்காய் தோல் ஆகியவைதான் இருக்கலாம். வேறு எதுவும் மிச்சம் வைக்கக்கூடாது" என்றார். அன்றிலிருந்து 45 வருடங்களாக அப்படித்தான் சாப்பிடுகிறேன்.

இன்று எதிலும் அவசரம்.முகூர்த்தம் முடியும் முன்பே இலையில் எல்லா கறிகளும் பரிமாறி, நாம் அமர்ந்தபின் சாதம் கொட்டுவார்கள். ஆமாம், பெரிய அகப்பையில் சாதம் இடுவார்கள். இரண்டாவது ரவுண்டு வர அவர்களுக்கு பொறுமை இல்லை. காரணம் பரிசாரகர்கள் யாருக்கும் இந்த வேலைக்கு வேண்டிய அனுபவமும் கரிசனமும் கிடையாது. சமையல் கான்ட்ராக்டர்களும் அவர்களுக்கு ட்ரெயினிங் கொடுத்து அனுப்புவது இல்லை. கடைசியில் எல்லா இலைகளிலும் எல்லா பதார்த்தங்களூம் மீதமாகி குப்பையாக வீசப்படுகின்றன. விருந்தினர்களும் வீணாக்காமல் சாப்பிடும் வழக்கம் கொள்ள வேண்டும்.

பஃபே ஸ்டைலிலும் இப்படித்தான். ஒருமுறை, சர்வர் அவியல் ஒரு பெரிய கரண்டியில் எடுத்தான். நான் கொஞ்சம் போதும் என்றால் அவன் கொஞ்சம்தான் விழும் என்றான். நான் கரண்டியை அவனிடமிருந்து வாங்கி முழுவதையும் சட்டியில் தட்டிவிட்டு பாதி கரண்டி மட்டும் எடுத்துக்கொண்டேன்..

எல்லா சமயமும் இப்படி உணவு வீணாவதைப் பார்க்கும் போது மிகவும் சங்கடமாக உள்ளது. அளவாகப் பரிமாறி எல்லோரையும் நிறைவாக சாப்பிட வைத்து, மிஞ்சும் உணவை அருகில் உள்ள அனாதை விடுதியிலோ, முதியோர் இல்லத்திலோ கொடுத்தால் அவர்களும் மணமக்களை வாழ்த்துவார்களே? ஏன் செய்யக்கூடாது?

Friday, September 28, 2007

கிரிக்கெட்- விளையாட்டா? வியாபாரமா?

1983க்குப் பிறகு 2007ல் இந்தியா உலகக்கோப்பை வென்றது பெருமைதான்.ஆனால் அன்று உள்ள விதிகள் என்ன? பின் ஒன்டே மாட்ச் வந்தது. இன்று ட்வென்டி- 20. வியாழனன்று நாடு திரும்பிய கிரிக்கெட்டர்களுக்கு(வீரர்கள்/ஹீரோக்கள் அல்ல) அளிக்கப்பட்ட வரவேற்பும் பரிசளிப்பும் மிகையானது. 30 கிலோமீட்டருக்கு ட்ராஃபிக் ஜாம். மழையில் பைத்தியங்கள்(மக்கள்தான்) காத்து நின்று கொண்டிருந்தது வேடிக்கையாக இருந்தது. வான்கடே ஸ்டேடியத்தில் மேட்ச் பார்க்கக்கூட இவ்வளவு கூட்டம் வருமா என்று தெரியவில்லை.
ஆசியக்கோப்பை வென்ற ஹாக்கி ப்ளேயர்களுக்கு இத்தனை பரிசு தரப்பட வில்லையே என்று கேள்வி எழ, ஒரு முன்னாள் கிரிக்கெட்டர் டிவியில் விளக்குகிறார்- ஆசியக்கோப்பையை விட உலகக்கோப்பை பெரியதாம். செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாத், டென்னிஸ் சான்யா மிர்ஸா இவர்கள் எல்லாம் நாடு திரும்பிய போது இத்தனை வரவேற்பும் பரிசும் தரப்பட்டதா?
ஒரே ஒவரில் 6 சிக்ஸர் அடித்த ரவி சாஸ்திரி என்ன பரிசு வாங்கினார்? அது ரஞ்சி ட்ரோஃபி என்பதால் பேர் மட்டும்தானா. இன்று 1 கோடி ரூபாயாம், போர்ஷே காராம்.
பத்திரிகையும் "இந்தியா பாகிஸ்தானுடன் மோதல்" என்றும் "பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது" என்றும்தான் எழுதுகிறது. இது என்ன யுத்தமா? விளையாடுகிறது, ஜெயித்தது என்று எழுதினால் என்ன.
ரேடியோவில் ரன்னிங் கமென்டரி கேட்ட காலத்திலிருந்தே கிரிக்கெட் மக்களைக் கவர்ந்த கேம்தான்.பள்ளிக்கூடங்களில் இப்போது மைதானமே கிடையாது. கட்டிடங்கள்தான் உயர்ந்து கொண்டிருக்கின்றன.மற்ற விளையாட்டுகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து கல்வித்துறை மாணவர்களுக்கு விளையாட்டையும் கற்பித்து உடல்பயிற்சியுடன் வெற்றி தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவதையும் வளர்க்க வேண்டும்.

Thursday, August 23, 2007

400 மில்லியன் காரணங்கள்.

அமெரிக்கர்கள் ஏன் தங்கள் காரை நிறுத்திவிட்டு பப்ளிக் ட்ரான்ஸிட் (பஸ், ரயில்) உபயோகிக்க வேண்டும் ?
பாட்டில்,கேன், காகிதம்,ப்ளாஸ்டிக் எல்லாம் ஏன் ரீசைக்கிள் செய்ய வேண்டும் ?
இந்த இரு கேள்விகளுக்கும் தன்னிடம் 400மில்லியன் காரணங்கள் உண்டு என்கிறார், ப்ராங்க் டி ஜியகோமோ, தன்னுடைய பதிப்பான மெட்ரோ-மேகஸினில்.
2006ல் யு.எஸ் ஜனத்தொகை 300மில்லியன் அடைந்து விட்டதாம். இன்னும் 36 ஆண்டுகளில் 400 மில்லியன் ஆகும் என டிமோக்ராஃபர்கள் சொல்கிறார்கள். இந்த 100மி கூடுதல் மக்கள் காற்று, தண்ணீர் தவிர ஏற்கனவே நெருக்கடியான சாலைகள், ஹைவே எல்லாவற்றிலும் பங்கு கேட்பார்கள்.
பப்ளிக் ட்ரான்ஸிட்களில் பயணிகள் எண்ணிக்கை கூடிவருகிறது. ஆனாலும் மக்கள் கார் ஒட்டுவதைக் குறைப்பதில்லை. 2043ல் தங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் நீர்,காற்று,சுத்தமான உணவுக்காக போட்டி போடுமே என உணர மறுக்கிறார்கள்.
2006ல் பயணிகள் எண்ணிக்கை கடந்த 49 ஆண்டுகளில் 10 பில்லியன் ஆனதாம். இதை வரைபடமாக சித்தரித்தால் 1 கேலன் கேன்களை உயரமாக அடுக்கினால் பூமியிலிருந்து சந்திரனைத் தொடுமாம். எரிபொருள் எவ்வளவு மிச்சம் ?
ஹாஃப்மன் எஸ்டேட்டிலிருந்து எல்ஜின் அல்லது ஷாம்பர்க் செல்ல ட்வுன் பஸ் இல்லையே என்று எனக்கு வருத்தம் தான். ஊரில் செய்யும் அந்த தொழிலை இங்கே செய்தால் என்ன என்று கூடத் தோன்றுகிறது.

மேட் இன் யு எஸ் ஏ

நாங்கள் சீனியர் சிட்டிசன்ஸ் கூடினால் பேசுவதே அந்த நாளில் நாம் வாங்கிய வீட்டு உபயோகப் பொருட்கள்,கார்கள், உடைகள், டூத் பேஸ்ட்,பொம்மை,என்று எல்லாமே மேட் இன் யு.எஸ்.ஏ சீட்டுடன் கூடிய தரமான பொருட்கள் பற்றியே என்று எம்.வி.ரைட் சிகாகோ ட்ரிப்யூனுக்கு எழுதுயுள்ளார்.
இன்னொரு செய்தி, கடந்த 12 மாதங்களாக நாங்கள் மேட் இன் சைனா என்றால் எந்தப் பொருளையும் வாங்குவதில்லை என்று ஒரு குடும்பமே பேட்டியில் சொல்கிறது.

Wednesday, August 15, 2007

பவுண்டில் அடைபட்ட கார்கள்.

Photo courtesy: Chicago Tribune

நம்மூரில் தவறான இடத்தில் மேய்ந்த மாடுகளை பவுண்டில் அடைப்பார்கள்.

ஷிகாகோவில் தவறான இடத்தில் நிறுத்தப்பட்ட கார்களை ட்ரக் கொண்டு இழுத்து ஒரு பவுண்டில் அடைத்து, நிருத்தி விடுகிறார்கள். $ 160 கட்டித்தான் காரை மீட்க முடியும்.அதிக வேகம்,சிகப்பு சிக்னலைத் தாண்டி செல்லுதல் எல்லாவற்றிற்கும் காப்ஸ்(cops )டிக்கெட் கொடுத்துவிடுவார்கள். குற்றத்தைப் பொறுத்து ஃபைன் $90 வரை ஆகும். சென்ற ஆண்டு இப்படி வசூலான தொகை $ 210 மில்லியன். டிக்கெட் பெற்றவர்கள் ஒரு க்ளாஸ் வேறு அட்டெண்ட் பண்ணணுமாம்.
ஒரு பெண்மணி தன் காரைப் பார்க் செய்த இடத்தில், ஒரு ஆபீசர் வந்து 4 முதல் 6 p.m. வரை பார்க் செய்ய தடை என்று டிக்கெட் எழுதினார். அப்படி ஒரு சைன் இங்கு இல்லையே என்றால் அவர்,"முன்பு இருந்தது, ஆனால் 2 ஆண்டுகளாக இல்லை" என்றாராம். பிறகு ஏன் டிக்கெட் எழுதினீர் எனக்கேட்டால்,"என் அதிகாரி தினமும் நான் டிக்கெட் எழுத வேண்டும் என்கிறார், நீங்கள் அப்பீல் செய்யுங்கள்" என்றார். $93 கோர்ட் ஃபீஸ் கட்டுவதை விட $50 ஃபைன் கட்டுவது என்று முடிவெடுத்தார்.
நம்ம ஊர் மாதிரி இருக்கிறதே எனத் தோன்றுகிறது. ஆனால் வசூல் எல்லாம் ட்ரெஷரி சென்றடைகிறது.

நம்ம மரப்பாச்சி, செப்பு, தலையாட்டி பொம்மைகளை எக்ஸ்போர்ட் செய்வோமா?

சைனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொம்மைகள் எல்லாம் அமெரிக்காவில் திரும்பப் பெறப் படுகின்றன. பெயிண்டில் ஈயம் அதிகம் காணப்படுகிறதாம். சில வகை பொம்மைகளில் உள்ள சின்ன காந்தங்களை குழந்தைகள் விழுங்கிவிட்டால் வயிற்றைக் கிழித்துவிடுமாம். என்ன பயங்கரம்?
நான் ஊருக்குச் செல்கையில் என் பேத்திகளுக்கு துணியால் ஆன ஸாப்ட் டாய்ஸ்தான் வாங்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.
சீன அரசும் இப்போது தரக்கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகிறதாம். நம் ஊரில் செய்யப்படும் மரப்பாச்சி, செப்பு, தலையாட்டி பொம்மைகளை எல்லாம் பெயிண்ட் அடிக்காமல் (நம்ம பெயிண்டில் ஈயம் அளவு தெரியாதே) ஏற்றுமதி செய்தால் என்ன என்று தோன்றுகிறது.இங்கு வாழும் இந்தியக் குழந்தைகளுக்குக் கூட அவை தெரியாது.

Tuesday, August 14, 2007

ஆக, பதினைந்தன்று என்ன செய்வீங்க?

வருடாவருடம் தீபாவளி போல சுதந்திர தினமும் விடுமுறையும் வந்து விடும். எல்லா டிவியிலும் எதைப் பார்க்க என்று நம் சுதந்திரத்தைப் பறிக்கும் அளவு நிகழ்ச்சிகள்.
முன்னெல்லாம் சுதந்திர தினத்தன்று சென்னை கடற்கரையில் கவர்னரும் நெல்லை வ உ சி மைதானத்தில் கலெக்டரும் கொடியேற்றுவதைப் பார்க்க கூட்டம் அலைமோதும். இப்போது கிரிக்கெட் மாட்ச்கூட வீட்டிலிருந்தே பார்க்கலாம்.
எங்கள் வீட்டில் நான் டிவி பார்க்கையில் தேசீய கீதம் இசைக்கும் போது எழுந்து நிற்பேன். வீட்டில் எல்லோரும் முதலில் சிரித்தாலும், இப்ப எழுகிறார்கள்.
அப்ப நீங்க?

Friday, August 10, 2007

78 ; 45; 33 1/3 நினைவிருக்கிறதா?

இந்த பழைய இசைத்தட்டுக்களுக்கு 21ம் நூற்றாண்டைக் காட்ட அமெரிக்காவில் ஒரு முயற்சி. முந்திய டர்ன்டேபிள்(ப்ளேயர்) ஒரு ரேடியோ அல்லது ஒரு ஆம்ப்ளிபையரில் தான் இணையும். இப்போது புதிதாக கம்ப்யூட்டருடன் இணையும் டர்ன்டேபிள் வருகிறது. அந்த ரிகார்டுகளிலிருந்து ஹார்ட் டிஸ்க்கிற்கும் அதிலிருந்து எம்பி3 ப்ளேயரிலோ சிடியிலோ பதிவு செய்யலாம்.ஆயிரக்கணக்கில் உபயோகித்த அருமையான ரிகார்டு ஸ்டாக் வைத்துள்ள ஸ்டோர்கள் ஒரே மகிழ்ச்சியாக உள்ளன. ஒரு ஸ்டோர் உரிமையாளர் கூறுகிறார். ஒரு ரிகார்டை நான் ப்ளே செய்யும்போது கேட்பவர்கள் எல்லோரும் "சிடியில் கேட்பதைவிட நன்றாக உள்ளது. அந்த க்ரூவில் (groove)என்ன மந்திரம்?" என்று ஆச்சரியப்படுகிறார்கள். உண்மைதான். முன்னெல்லாம் ஆர்க்கெஸ்ட்ராவில் அத்தனை இசைக்கருவி வாசிப்பவர்களும் உண்டு. கருவிக்கேற்ற லோ /ஹை frequencyயில் பதிவாகும். இப்போதுதான் கீ போர்டு வந்துவிட்டதே. உங்கள் வீட்டில் பழைய ரிகார்டுகள் உள்ளதா? தூசி தட்டி வைத்துக்கொள்ளுங்கள்.

Wednesday, August 8, 2007

வாங்க, இம்பாலா காத்துக்கிட்டிருக்கு

1950களில் எங்கள் வீட்டுத் திருமணங்களுக்கு பெண்/மாப்பிள்ளை அழைப்புக்கு பீடி கம்பெனி அதிபரிடமிருந்து ப்யூக் அல்லது சிமென்ட் கம்பெனி அதிபரின் கெடிலாக் திறந்த கார் வரும். நான் அவ்வாறு சென்றதும் என் மைத்துனரின் புதிய 1970 மாடல் இம்பாலா தான். எங்கள் வீட்டுகாரே 1947ல் அப்பா புதிதாக வாங்கிய ஷெவர்லெ ப்ளீட் மாஸ்டர். அதை இப்போது என் மகன் ரெஸ்டோர் செய்துகொண்டிருக்கிறான்.

பாப்புலர் சைன்ஸ் பத்திரிகையில் ஆண்டு தோறும் புதிய மாடல் ஷெவர்லெ, ப்ளிமத், போர்டு கார்களை சோதனை ஓட்டம் செய்து தர வரிசை எழுதுவார்கள். ஆர்வமுடன் படிப்பேன். பின் நான் தமிழ் நாட்டின் பெரிய ஆட்டோ டீலரின் ச்ர்வீஸ் பிரிவில் பணி புரிந்தபோது எல்லா வகை கார்களையும் சோதனை ஓட்டம் செய்திருக்கிறேன். அமெரிக்காவின் இந்த பெரிய கார்கள் மீது எனக்கு அத்தனை ஆசை.

மே மாதம் இங்கு வந்ததும் சாலையில் ஓடும் கார்களில் 7/10 ஜப்பான் கார்களைப் பார்க்கிறேன். உலகிலேயே அதிக கார் விற்கும் ஜெனரல் மோட்டார்ஸ் யு.எஸ்ஸிலேயே டொயோடாவிடம் போட்டியிட வேண்டியிருக்கிறது. க்ரைஸ்லர் கார்ப்போரேஷன், டெய்ம்லர்(ஜெர்மனி) கைக்குப்போய் இப்போது மீண்டும் கை மாறப்போகிறது. போர்டு மோட்டார் தன்னிடம் உள்ள பிரிட்டனின் லேன்ட்ரோவர், ஜாக்குவார் இரண்டையும் விட்டு விடும் போலிருக்கிறது.

ஒரு கார் விற்றால் அதில் $ 1000 தொழிலாளர்களின் இன்ஷுரன்ஸ்க்கு செலவாகுமாம். கேஸ்(பெட்ரோல்தான்) விலை உயர்ந்து கொண்டிருப்பதால் புதுக்கார்கள் விற்பனை முன்பு போல இல்லை.விளம்பரங்களில் 30 மைல்/கேலன் என்று புதிய கார்கள் கூவுகின்றன. கெடிலாக் டீலர்கள் ஜி.எம் ஒப்புதலுடன் வாரண்டி தாண்டியும் இலவசமாக வேலை செய்து தருகிறார்கள். போர்டு தன் ப்யூஷன் காரை, கேம்ரி(டொயோடா), அக்கார்ட்(ஹோண்டா) கார்களுடன் ஒப்பிட்டு, 400 டிரைவகளின் ஓட்டு மூலம் ப்யூஷன் தான் பெஸ்ட் என்கிறது. எப்படி இருக்கிறது?.

லீ அயகோக்கா(Lee Iacocca-என் உச்சரிப்பு சரிதானே) தன்னுடைய

"Where Have All tha Leaders Gone?" புதிய நூலில் கூறியவை.

* சென்ற ஆண்டு General Motors, Ford and Chrysler கம்பெனிகளின் தலைமைகளை அழைத்து ஆலோசனை செய்ய ஜார்ஜ் புஷ் காலதாமதம் செய்தது ஒரு காரணம்.

*தேர்தலிலோ, C E O பதவிக்கோ போட்டியிடுபவர்களிடம் "Nine C's of Leadership(First, Curiosity- last, Common Sense--Google பாருங்கள் ஹோம் மேக்கரிடமும் தேவை) கட்டாயம் இருக்க வேண்டும். யாரிடமும் 9-ம் முழுமையாக இல்லை.

* யு.எஸ்ஸின் ஆட்டோ தொழில் பழைய வலிமை பெற் நஷ்டத்தைத் தவிர்த்து, கார் தயாரிப்பாளர்கள், யூனியன்கள்,அரசு கூடி திட்டமிட வேண்டும்.



என் கவலை அமெரிக்க மூவேந்தர்கள் ஜப்பான் படையெடுப்பால் சிற்றரசர்கள் ஆகி விடுவார்களோ என்பதுதான்.

Tuesday, August 7, 2007

அதான் எனக்கு தெரியுமே

டிவியில் புதிய பாடல்கள் என்று ஒரு நிகழ்ச்சி. நான்கு சிறுமிகளின் போட்டி. நானும் மார்க் போட்டுக் கொண்டு வந்தேன். "கண்ணும் கண்ணும்..." பாட்டு பாடியவர்களே என்னிடம் மார்க் பெற்றார்கள். பாட்டு போலவே தபேலா.ட்ரம்பெட் வாசித்த லக்ஷ்மண் ஸ்ருதி குழுவினரும் பாராட்டுக்குரியவர்கள்.நடுவர் மதுமிதா அவர்களும் அச்சிறுமிகளுக்கே பரிசு என்றார்கள். தன்னுடைய கமெண்டில் உச்சரிப்பு பற்றியும் கமகங்கள் பற்றியும் அழகாகப் பாடிக்காட்டினார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன் நானும் இது மாதிரி ஒரு போட்டிக்கு நடுவர் குழுவில் ஒருவனாக இருந்தேன். ஹோட்டல் காரன் அழகப்பனுக்கு நாட்டியம் பற்றி என்ன தெரியும் கீதா நினைத்தது போல, மோட்டார்கம்பெனிக்காரனுக்கு சங்கீதம் என்ன தெரியும் என்று பிற நடுவர்கள் கேட்டனராம். என்னை அழைத்த அமைப்பாளருக்கு ஒரு நம்பிக்கை. நானும் பாரதியார் பாட்டு என்றால் சினிமாக்களில் வந்த அவருடைய பாடல்களைத்தானே மாணவர்கள் பாடுவார்கள், அதான் எனக்கு தெரியுமே என்று ஒப்புக்கொண்டேன்.
அன்று நன்றாகப் பாடிக்கொண்டு வந்த ஒரு மாணவன் ஒரு பாட்டில் ஒரு அடி மறந்து ஸ்டக் ஆகிவிட்டான். அவனாக நினைவு வந்து பாட சில வினாடி பார்த்துவிட்டு "நானொருவன்...." என்று அடியெடுத்து தந்தேன். கண்களாலேயே நன்றி கூறி தொடர்ந்து பாடி முடித்தான்.
டிவி நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் தாயாரிடம் கேள்வி கேட்க அவர்களும் என் மகள் நன்றாகப் பயிற்சி செய்தாள். பரிசு கிடைக்கும் என்று நம்புகிறேன் என்கிறார்கள். இது பரிசு கிடைக்கவில்லையே என்ற கவலையுடன் பரிசு எப்படி மற்றவர்களுக்கு என்றும் அவர்களை நினைக்கதூண்டுமோ என்று எனக்குத் தோன்றுகிறது.

சரி, இன்றைய கேள்வி: "நானொருவன்......."என்று நான் அடி சொன்ன அந்த பாரதி பாட்டு எது?

இரண்டு படங்களில் வரும். ஆனால் ஒன்று இசைத்தட்டு மட்டும் வந்தது. ஏனோ படத்தில் இடம் பெறவில்லை.

Friday, August 3, 2007

"திருவாரூர் சந்நிதியில் ......ஞானியானார்"

இன்று ராகுகாலம் எத்தனை மணிக்கு என்று அறிய காலண்டர் தேடிய போது நண்பர் சொன்னார்.
"திருவாரூர் சந்நிதியில் வெற்றிலை புஷ்பம்
விற்ற செட்டியார் ஞானியானார்".
ராகுகாலம் காலை 7.30 முதல் மாலை 6.00 வரைதான், திங்கள் முதல் ஞாயிறு வரை பார்த்துக்கொள்ளலாம் என்றார்.
ஆங்கிலத்தில் " Mother Saw Father....." என்றும் உண்டு.

அது போல் ஆங்கிலத்தில் நான் புதிதாகப் படித்தது.

"My Very Excellent Mother Just Sent Us Nine Pizzas".

இது எதைக்குறிக்கிறது? சொல்லுங்கள் பார்க்கலாம்.

கேட்டதில் பிடித்தது.

சிவாஜி படம் எடுத்த கதை பற்றி டிவியில் சொன்னார்கள். பாடல் எழுதியவர், ரகுமான் வேகமான மெட்டு இசைத்த போது தான் கட கட கட என்றும் மொறு மொறு மொறு என்றும் வரி சொன்னதாகச் சொன்னார். எம்.எஸ்.வியும் கவியரசும் இப்படி பாட்டு உருவாக்கியதை பாலச்சந்தர் எப்படி படமாக்கினார் பாருங்கள்.
இனிமையான சந்தத்தை அருமை என்று கவியும், கடினமான சந்தத்திற்கு வரி சொன்னதும் சபாஷ் என்று இசையும் பாராட்டிக் கொண்டதைக் கேட்ட உடனிருந்த பாலசந்தர் ஸ்ரீதேவி சந்தம் சொல்ல கமல் வரி சொல்வதாக ஒரு காட்சி அமைத்தார் வருமையின் நிறம் சிகப்பு படத்தில் .
தந்தன தந்தன தான தந்தன தந்தானா என்று எம்.எஸ்.வி சந்தம் சொல்ல கவியரசு சிப்பி இருக்குது முத்தும் இருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி என்று பல்லவி சொல்கிறார். ஜானகியும் எஸ்.பி.பியும் பாடினார்கள். மீண்டும் படம் பாருங்கள்.

Wednesday, August 1, 2007

"யு ஆர் ரெகுலர்லி இர்ரெகுலர்"

எங்கள் கல்லூரி ப்ரின்ஸிபல் ரெவ்.பாதர் சூசை மிகவும் கண்டிப்பானவர். எல்லோருக்கும் அவரைப்பார்த்தது முதல், மரியாதை கலந்த பயம் உண்டு. காலை க்ளாஸ்க்கு லேட் ஆனால் அவரிடம் சீட்டு வாங்கினால்தான் ப்ரொபசர் அனுமதிப்பார். ஒரு நாள் சீட்டு வாங்க வேண்டி வந்தது. பைன் கட்டச் சொன்னால் மாலை டவுண்பஸ்க்கு பணம் இருக்காதே என்று பயந்தே சென்றேன். முதல் முறையானதால் எனக்கு சீட்டு தந்து விட்டார்.

ரிபீட் ஆனால் "யு ஆர் ரெகுலர்லி இர்ரெகுலர்" என்று சொல்லி பைன் போடுவார்.

பரீட்சை நடக்கும் போது எனக்கு மதிய உணவு வீட்டிலிருந்து வரவில்லை. 2.00 ம்ணி வரை பார்த்த நான் பரீட்சைக்கு நேரமாச்சு என்று எழுதச் சென்றுவிட்டேன். லேட்டாக கேரியருடன் வந்த அவன் ஆபீஸ் ரூமில் கேட்டிருக்கிறான். ப்ரின்ஸியிடம் யார் சொல்வது என்று அவர்கள் யோசிக்க அப்போது தன் அறைக்கு வந்த ப்ரின்ஸி புதிய முகம் பார்த்து யார் நீ என்றார்.விபரம் அறிந்து அவரே ஹாலுக்கு வந்து என்னிடம் நீ சாப்பிட்டாயா? என்று கேட்டார். உனக்கு 10 நிமிடம் தருகிறேன், கீழே போய் சாப்பிட்டு வ்ந்து எழுது என்றார். கண்டிப்பான பாதரிடம் அன்று நான் கண்ட தாயுள்ளம், மறக்க முடியுமா?

இன்று ஒரு கேள்வி கேட்கலாமா?
இந்த போஸ்டில் எத்தனை சினிமா பெயர்கள் உள்ளன?
ஒரு 11 ஆவது இருக்கும்.

Tuesday, July 31, 2007

புகைப்படப் போட்டிக்காக


35 வருடத்திற்கு முன் யஷிகா 120 ரோல் காமிராவில் எடுத்தது.

தண்ணீர் தண்ணீர் - இங்கேயுமா?

தாமிரபரணியில்தான் ஆலைக்கழிவுகள், சாக்கடை எல்லாம் வந்து சேர்கின்றன என்றாலும் கொதிக்கவைத்து வடிகட்டி குடிக்கிறோம். ஷிகாகோ ட்ரிப்யூன் பத்திரிகையில் ஒரு செய்தி: இன்டியானா மாநிலத்தில் BPயின் வொய்ட்டிங் ரிபைனரி (நம்மூர் பாரத் பெட்ரோலியம் இல்லீங்க-முன்னாள் ப்ரிட்டிஷ் பெட்ரோலியம், இப்போது BP மட்டும்தான் - கே.கே நகர் மாதிரி)யிலிருந்து கழிவுகள்,மெர்க்குரி,அமோனியா போன்ற கெமிக்கல்ஸ் மிஷிகன் ஏரியில் விடப்படுகிறதாம்.மிஷிகன் ஏரியிலிருந்துதான் இல்லிநாய் (ஸ் சைலன்ட், எந்த ப்ரீடும் அல்ல) இன்டியானா, மிஷிகன் மாநிலங்கள் மூன்றும் குடிநீர் சப்ளை பெறுகின்றனவாம்.எத்தனையோ எதிப்புகள் செய்தியாகவும், லெட்டர் டு எடிட்டரிலும் வந்தாலும் BP பேப்பரில் தன் முழுபக்க விளம்பரத்தில், ஆயிரக்காணக்கான தங்கள் தொழிலாளர்கள் மிஷிகன் லேக் பகுதியில்தான் வசிக்கிறார்கள்.நாங்களும் வாட்டர் ட்ரீட்மென்ட்க்கு எல்லா முயற்சியும் செய்கிறோம் என்று கூறுகிறது. என்ன ஆகுமோ.

நான் படித்த ஒரு செய்தி. அமெரிக்காவில் உள்ள தமிழர்களுக்காக கயாவிலிருந்து (ஆங்கிலத்தில் CA என்றால் தமிழில் கயா தானே) வெளியாகும் "தென்றல்" மாத இதழில் சன்தில் க்ரூப் நிறுவன இயக்குனர் எம்.ஆர்.ரங்கஸ்வாமி ஒரு பேட்டி. அதில் அவருடைய கருத்துக்கள்:

1.சுற்றுச்சூழல் நமது மிகப்பெரிய பொறுப்பு. இன்னும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு நம் குழந்தைகளுக்கு நல்ல வழிடம் அமைய சூழலில் கவனம் செலுத்தவெண்டும்.

2.தமிழ்நாட்டின் மிகப்பெரிய பலம் அதன் பொறியியல் பட்டதாரிகள்தான். பெங்களூரில் திறமையிருந்தாலும் விலைவாசி உயர்வால் அங்கு ஆள் கிடைப்பதில்லை. தொழில்நுட்பத் துறையில் முன்னேற வருகின்ற நிருவனங்களைத் திறந்த மனத்தோடு வரவேற்க வேண்டும்.

சென்னை சட்டக்கல்லூயில் பயின்ற எம்.ஆர்க்கு அதில் ஆர்வம் இல்லை என்று அறிந்த அவர் அண்ணா தன்னோடு யுஎஸ்க்கு வந்து எம்.பி.ஏ படிக்க அழைத்ததுதான் ஒரு மாபெரும் திருப்பம். படித்து முடித்ததும் சின்ன கம்பெனியில் சேர்ந்து முன்னேறி இன்று கணிணித்துறையில் பிரபலமான 20 பேர்களில் ஒருவர் என்று பத்திரிகைகள் எழுதும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்.

Tuesday, July 24, 2007

'பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு என்னிடம் பேசினார்'


நான் பி யூசி ப்டிக்கும்போது எங்கள் கல்லூரியிலிருந்து ஒரு ஆல் இந்தியா டூர் சென்றோம்.தில்லியில் எங்கள் தொகுதி எம்.பி பார்லிமென்ட்க்கு அழைத்து சென்றார்.பிரதமர் நேருவுடன் ஒரு சந்திப்பு.அப்ப எல்லாம் ஆடோமட்டிக் கேமரா கிடையாது.போகஸ் செய்து,அபெர்ச்சர்,ஷ்ட்டர் ஸ்பீட் செட் செய்வதற்குள் பிரதமர் என்னிடம் "க்விக். யூ ஆர் டேக்கிங் டூ லாங்" என்றார்
இன்றும் ஒரு கேள்வி. ஒன்று முதல் பத்து வரை எண்களில் தொடங்கும் படப் பாடல்கள் வரிசையாக எழுதுங்கள். ஒன்று அல்லது ஒரு என்ற்ம் தொடங்கலாம். உ-ம். "ஒரு நாள் போதுமா". நிறைய பாட்டு உள்ளதல் எண்ணுக்கு 1 பாட்டு வரிசையாகப் போதும்.

ஒரு போனஸ் கேள்வி

"ஒரு நாள் போதுமா" பாட்டு பாண்டியனின் கொலுமண்டபத்தில் பாட்டுப் போட்டிக்கு அழைப்பதாக அமைந்த ஒரு ராகமாலிகையில் அமைந்த பாட்டு. 'எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ' என்ற வரி அமைந்த ராகம் என்ன?

Friday, July 20, 2007

என் கேள்விக்கென்ன பதில்?

இன்று ஒரு க்விஸ் . நீங்கள் ரெடியா?பத்து யு.ஸ்.ஜனாதிபதிகள் ப்ற்றிய விவரம் தருவென். யார் என்று பேர் எழுதுங்கள்.

1. நோபல் பரிசு பெற்றவர்.
2. முதல் ரோமன் கத்தோலிக்
3. முதல் அமெரிக்க குடிமகன் ( ப்ரிட்டிஷ் ச்ப்ஜெக்ட் அல்லாதவர்)
4 .நான்கு முறை தொடர்ந்து எலெக்ட் ஆனவர்.
5. வெள்ளை மாளிகையில் முதலில் குடி புகுந்தவர்.
6 .விமானத்தில் பயணிக்கும்போது பதவிப் பிரமாணம் எடுத்தவர்.
7. ஒருமனதாக தேர்வானவர்களில் முதல்வர்
8. இவர் மட்டுமெ ராஜினாமா செய்தவர்.
9 .முன்னாள் ஹாலிவுட் நடிகர்
10. ஆர்மியில் 5ஸ்டார் ஆக இருந்தவர்.

கண்டுபிடியுங்கள்.

Monday, July 16, 2007

தொடரும் நினைவுகள்.

மணப்பாறை..... பாட்டில் வரும் அறிவுரை--"சேர்த்த பணத்தை சிக்கனமா செலவு பண்ண அம்மா கையில கொடுத்துப்போடு செல்லக்கண்ணு, அவங்க ஆற நூறு ஆக்குவங்க செல்லக்கண்ணு".என் அம்மாவின் சிக்கனம் பற்றி ஒரு வரி.

எல்லோருக்கும் புது சட்டை எடுக்கையில் அண்ணனுக்கு சில்க் சட்டை எடுப்பாள். எனக்கில்லையா என்று கேட்டால்,'அவனுக்கு சின்னதானதும் அது உனக்குத்தானே' என்பாள்.அப்படி எனக்கு எத்தனை சட்டை கிடைத்தது தெரியுமா.ருசியாக சமைப்பதிலும் சிறந்தவள்.குண்டான் நிறைய தயிர் சாதம் பிசைந்து பழங்கறி,சுண்டக்கீரையுடன் நிலவிரவில் மொட்டைமாடியில் எங்கள் மத்தியில் அமர்ந்து எங்கள் கைகளிலேயே தருவாள்.அமுதம்.

ஆறு சதுர அடிக்கு புள்ளி வைத்து , புள்ளி விலகாமல் கோடு தவறாமல் அம்மா பொங்கல் .கோலமிடுவதை நாங்கள் உட்கார்ந்து ரசிப்போம். அன்று பத்திரிகைகள் கோலப்போட்டி நடத்தியிருந்தால் முதல் பரிசு அவளுக்கே. நவராத்திரி கொலுவிற்கு பொம்மை வாங்குவதிலும் நேர்த்தியாக 9 படிகளில் அடுக்குவதிலும் மிக்க ஈடுபாடு உடையவள்.

என் அம்மாவுக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று-
"சுந்தரி சொளந்தரி நிரந்தரியே,
சூலியெனும் உமையே-குமரியே".

படத்தில் ஹீரோயின் தோழியுடன் பாட ஹீரோ உடன் பாடுவார். என் அக்கா இருவருடன் என்னையும் பாடச்சொல்லி கேட்டு ரசிப்பாள்.

புதிய ஜில்லா கலெக்டர் பதவி ஏற்றதும் தன் உதவியாள்ரிடம் ஊரில் யாரை முதலில் சந்திக்க வேண்டும் என்று கேட்பாராம். அதற்கு அவர் என் அப்பா பேரைச்சொல்லி அவரே உங்களைப்பார்க்க வருவார் பாருங்கள் என்பாராம். கலெக்டர் என்றால் ஜில்லாவின் முதல் மனிதர் என்று அவரை வரவேற்பார் என் அப்பா. குடும்பம், தொழில், பொது வாழ்க்கை என்று எல்லா வகையிலும் சிறந்து வாழ்ந்தார்.

இன்று ஒரு கேள்வி. -சகோதரிகள் லலிதா,ப்த்மினி, ராகினி மூவரும் சேர்ந்து நடித்த படம் எது.? அடடா ஒரு க்ளூ தந்துவிட்டேன் போலிருக்கிறதே.

Saturday, July 14, 2007

"உங்கள் வாழ்க்கையை எழுதுவது பற்றி"

"உங்கள் வாழ்க்கையை எழுதுவது பற்றி" என்ற புத்தகம், சமீபத்தில் படித்தேன். அதில் சுயசரிதை மாதிரி இல்லாமல் -பள்ளிக்கூடம்,சொந்தம், பார்த்தவர்கள், பரந்த உலகம், ஊர்கள், நினைவுகள், கல்வி, புத்தகங்கள் என்று அத்தியாயங்களாக எழுதி இருந்தார் ஆசிரியர். உடனே எனக்கு ப்ளாக் செய்ய ஐடியா கிடைத்தது. ஹைஸ்கூல் படிக்கும்போது ஒருநாள் தமிழ் ஆசிரியரை சித்திரமாக வரைந்தேன். அருகில் இருந்த மாணவர்கள் சத்தமாக சிரிக்கவும் ஆசிரியர் படத்தை வாங்கி பார்த்துவிட்டு என்னை 'வெடிவால்' என்று திட்டினாலும் நன்றாக வரைந்திருக்கிறாய் என்று பாராட்டினார்.டிவி விளம்பரத்தில் "நாங்கள் படிப்பது நெ1 பேப்பர்.அப்ப நீங்க" என்று கேட்டதும் நான் சொல்கிறேன் - நான் படிப்பது 'சிகாகோ ட்ரிப்யூன்', ஆம் நான் இப்போது சிகாகோவில் மகள் வீட்டில் பேத்தி பேரனுடன் விளையடிக்கொண்டிருக்கிறேன்.அமெரிக்கா என்ற்தும் கெடிலாக்,ப்யூக்,ஓல்ட்ஸ்மோபைல்,ஷெவர்லெ,க்ரைஸ்லர்,டாட்ஜ்,ப்ளிமத் என்றுகார்கள் பார்க்கலாம் என்று வந்தேன். இங்கோ டொயோடா, ஹோண்டா, நிஸான், ஹ்ன்டே என ஜப்பான் கார்கள் இங்கேயே தயாரிக்கப்ப்ட்டு அதிகம் விற்பனையகிறது. "ரீதிங்க் அமெரிக்கன்" என அமெரிக்கன் கார் விளம்பரத்தில் காண்கிறேன்.
முன்னால் ஒரு புத்தகத்தில் படித்தேன். அமெரிக்கவுடன் இன்னொருநாடு ராணுவம் ப்ற்றி பேசியதில் இருநாடுகளும் 2 ஜெனரல்களை எக்சேஞ்ச் செய்ய முடிவனதாம். அதற்கு மற்ற நாடு - 'எங்களுக்கு ஜெனரல் மோட்டார்ஸ் & ஜெனரல் எலெக்ட்ரிக் வேண்டும் -.என்ற்தாம். அன்று விளையாட்டாக எழுதப்பட்டாலும் என்ன ஆகும் என்று தெரியவில்லை. லாங் லிவ் அமெரிக்கா.

Friday, July 13, 2007

மலரும் நினைவுகள் வெடிக்கும்

வணக்கம் ப்ளாக்கர்ஸ். நான் சகாதேவன். இன்றுதான் வருகிறேன்.. நான் பேபிக்ளாஸிலிருந்து ஐந்தாம் க்ளாஸ் வரை கான்வென்டில் படித்தேன். ஒரு நாள் நானும் க்ளாஸ்மேட் வாட்ஸன்னும் அருகிலுள்ள பார்க்கில் கேந்திப்பூ நிறையப் பறித்து த் தோட்டக்காரனிடம் பிடிபட்டோம். எங்களுக்கு கிடைத்த தண்டனை லன்ச் டைம் முடியும்வரை பறித்த பூக்களை தலையில் வைத்துக்கொண்டு பள்ளி ஆபீஸ் வாசலில் நின்றோம். எங்களைப் பார்த்துசென்ற அக்கா எல்லோரும் சிரித்தார்கள். மதர் அலெக்ஸ் நீண்ட நாட்கள் இதை மறக்கவே இல்லை. அவர்களுக்கு 90 வயது தாண்டியிருக்கும். சில ஆண்டுகளுக்கு முன் அவர்களை சென்னையில் சந்தித்த போது அவர்களே இந்த சம்பவத்தை சொல்லி சிரித்தார்கள்.எப்படி ஆரம்பிக்க என்று நினைத்த போது இதுதான் எனக்கு தோன்றியது. நானானி தன் ப்ளாக்கிங்ல் திருநெல்வேலி,கோவில்பட்டி,கடம்பூர்,திருவில்லிப்புத்தூர்,சாத்தூர்,சங்கரன்கோவில் இங்கெல்லாமென்ன கிடைக்கும் என சொன்னார்.நான் கேட்கிறேன். மணப்பாறை, மாயவரம், ஆத்தூர், பொள்ளாச்சி, விருதுநகர் எல்லாம் எதற்கு பேர் பெற்றவை. பாட்டு நினைவு வருதா. பாட்டில் கடைசியாக வரும் அறிவுரை என்ன. நானானீயா பார்க்கலாம்.
சதாதேவன்.